1992-1994. அது இளையராஜா தமிழ் திரையிசை வணிகத்தில் உச்சத்தில் இருந்த
காலம். கிழக்குவாசல், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர் பாடல்களை விடச் சிறந்த
பாடல்களை இந்த உலகில் எவராலுமே தரமுடியாது என்ற அசையாத நம்பிக்கை நிலவிய
காலம். அக்காலத்தில் பாடல் கேட்பதற்கு நாம் ஒலிநாடா/பண்பலை வானொலி யைத்தான்
நம்பியிருந்தோம். காந்த ஒலிநாடா முடியுமானவரைக்கும் உயர் அதிர்வெண்கொண்ட
ஒலியையும் கையாளத்தக்கதாக தொழிநுட்பத்தில் வளர்ந்துவிட்டிருந்தது. ஒலிநாடா
இயக்கிகள் (Cassette Tape Players), ஒலிநாடாக்களின் தவிர்க்கமுடியாத
தொல்லையான "இரைச்சல்" உடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன. மெலிய "ஸ்..."
எனும் ஒலி. அதை Noise என்பார்கள். இரைச்சலைக் குறைக்கும் தொழிநுட்பம்
கொண்டவையாக (Noise reduction technology) அக்காலத்து வானொலிப்பெட்டிகள்
விளம்பரப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் எனக்குத் தாழ் அதிர்வெண் (Bass)
இசைதான் அதிகம் பிடிக்கும். உயர் அதிர்வெண் இசை ஒலிநாடாவில் நன்றாக
இருக்காது என்பதோடு இரைச்சலும் தொல்லை கொடுக்கும். பாடலில் மணிச்சத்தம்
வருவதை விட Bass guitar/ Bass drum வருவது நன்றாக இருக்கும்.
அப்போதுதான் Bally Sagoo இன் "பங்காரா" பாடல்கள் பிரபலமாகத்
தொடங்கியிருந்தன. அப்பாடல்களை ஒலிநாடவிற்தான் கேட்டோம். ஆனாலும் அதில் ஏதோ
வித்தியாசம் இருப்பதை உணர்ந்தோம். ஒரு "முழுமை" இருப்பது போன்ற உணர்வு.
"நிறைய" கிடைப்பதைப் போன்ற உணர்வு. வள்ளி திரைப்படத்தின் பாடல்கள் நன்றாக
இருந்தாலும் பங்காராப் பாடல்களில் ஏதோ ஒன்று புதிதாக இருப்பதை உணர
முடிந்தது.
ஒரு நாள், எனது வீட்டின் பின்புற சன்னல் வழியாக, அடுத்த
வீட்டில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலிலிருந்து ஓர் ஒலி காதில் விழுந்தது.
அது ஒரு மணிச்சத்தம். ஒரு பாடலின் மணிச்சத்தம் இவ்வளவு துல்லியமாகவும்
இனிமையாகவும் கேட்குமா! என்ன பாடல் அது?
ஒரு மணியொலி மூலம் கிறங்க
வைத்து ரகுமான் எனக்கு அறிமுகமானார். அது ரோஜா படத்தின் 'சின்னச் சின்ன
ஆசை" பாடலில் வரும் மணியொலி. மணியொலி மட்டுமல்ல, அப்பாடலில் எல்லா ஒலிகளுமே
புதிய அனுபவமாக இருந்தது. அப்படத்தின் எல்லாப்பாடல்களின் எல்லா
ஒலித்துகள்களுமே எம்மைக் கிறங்கடித்தன.
எண்ணிம இசை (Digital Music)
இறுவட்டு இயக்கிகளின் வரவோடு எமது வாழ்க்கையுள் புகுந்துகொண்டது.
ஆங்காங்கே தெரிந்தவர் வீடுகளில் இறுவட்டு இயக்கிகள் (Compact Disk Players)
வரத் தொடங்கிவிட்டன. கிருஷாந்தனின் அப்பா தான் நானறிய இறுவட்டு இயக்கி
வாங்கிய முதல் மனிதர். அவர்கள் வீட்டில் பாடல்கள் கேட்டபோதுதான் பாடல்களில்
மெட்டும் வரிகளும் தாளமும் பாவமும் குரலும் எவ்வளவுக்கெவ்வளவு
இன்றியமையாதவையாக உள்ளனவோ, அவ்வளவுக்கவ்வளவு ஒலியின் தரமும் துல்லியமும்
ஒலிகளைக் கோர்த்துக் கையாளும் நுட்பமும் இன்றியமையாததாக இருக்கிறது என்பதை
உணர்ந்தேன். அந்த உணர்வினை எனக்குத் தந்ததெல்லாம் ரகுமனின் பாடல்களே.
Bally Sagoo பிடித்ததுகூட அதே ஒலிப் பொறியியலுக்காகத்தான்.
[]
எண்ணிம இசை எனும் புதிய ஊடகம் எமக்கு எல்லா அதிர்வெண் ஒலிகளையும்
துல்லியமாய்க் கேட்கும் வாய்ப்பினைத் தந்தது. பாடலில் அமைதியான இடங்கள்
மெல்லிய "ஸ்" ஒலி இல்லாது உண்மையாகவே அமைதியாக இருக்கும் அற்புதத்தைக்
காண்பித்தது. ஓர் ஆலய மணியோசையின் தாழ் அதிர்வெண் ஓசை மட்டுமல்ல உயர்
அதிர்வெண் ஓசை கூடக் களங்கமில்லாது காதினை அடைய முடியுமென்று நம்பவைத்தது.
புல்லாங்குழலின் இனிய இசையில், அதிர்வுற்ற காற்றின் ஒலி மட்டுமல்லாது
அதிர்வுறாமல் நழுவும் காற்றின் ஒலிகள் கூட முக்கிய பங்கெடுக்கின்றன என்பதை
காதற் காணச்செய்து புல்லரிக்க வைத்தது. அந்த ஊடகத்தின் கடிவாளத்தைச்
சரியாகப்பிடித்து, அதன் புதிய சாத்தியங்களின் பாட்டைகள் வழியே
பாட்டுக்களின் பயணத்தைத் தமிழிற் தொடங்கி வைத்தார் ரகுமான்.
இன்றுவரைக்கும் இசையின் ஒலியின்பத்தைத் துய்க்கவேண்டுமென்றால் ரகுமானத்தேடி ஓடுகிறது மனமும் Mouse pointer உம்
தென்றல் அணைப்பதுபோல இளையராஜாவும் அருவி அணைப்பதுபோல ரகுமானும் இசையால் அணைத்துக்கொள்கிறார்கள்.
தமிழரின் அன்றாடப் பாடல்களில் மிக முக்கியமான தொழிநுட்ப இற்றைப்படுத்தலைச்
(Update) சரியான வேளையில் செய்து தந்த ரகுமானுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
[ரகுமான் இசை வேர்கள் அற்ற வெறும் தொழிநுட்பக்
குழந்தை என்ற எண்ணத்தை இப்பதிவு தரக்கூடாது. அவனது வேர்கள் சூஃபி இசை
மரபிலும் இந்துஸ்தானி/கருநாடக இசையின் செவ்வியல் ஆழத்திலும் இருக்கின்றன.
அதுதான் கணினியை மட்டும் நம்பும் பிளாத்திக்கு இசைஞருக்கும் ரகுமான் எனும்
கலைஞனுக்குமான வேறுபாடு.]
No comments:
Post a Comment