Friday, November 27, 2015

கார்த்திகை விளக்குகள்


இன்று கார்த்திகை விளக்குகளைக் கண்டபோது கடந்த பத்து ஆண்டுகளின் கார்த்திகை விளக்குகள் ஒட்டுமொத்தமாகக் கண்முன்னே வந்துபோயின.

இலங்கையில் புலிகளின் மீதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் அரசு நடத்திய இறுதி ஆயுதப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலத்திலும் மிக மோசமான சந்தேகமும் அடக்குமுறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காலத்திலும் இக் கார்த்திகை விளக்குகள் பேசிய மொழியும் சுடர்ந்த ஒளியும் வீரியம் மிக்கது.


இலங்கையில் குறித்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இவ்விளக்கீட்டுத் திருநாள் தமிழர்களுக்கு ஒரு மதச் சடங்காக இருக்கவில்லை. அரசியற் செயற்பாடாக இருந்தது. ஒரு கட்டத்தில் 2012 இல் என்று நினைக்கிறேன், இவ்விளக்கீட்டில் தலையீடு செய்து தடைகளை உருவாக்கும் நிலைக்குக் கூட அரசு போக வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

கார்த்திகை விளக்கீடு ஒரு மதச்சடங்கு. மாவீரர் வாரம் புலிகளின் நிகழ்வு. இரண்டும் ஒரே காலப்பகுதியில் சந்தித்துக்கொள்வது ஒரு தற்செயல் நிகழ்வு. மதச்சடங்குகள் மீதும் புலிகளின் அரசியல் மீதும் ஏகப்பட்ட வேறுபாடுகளும் விமர்சனங்களும் எனக்கு உண்டு. விளக்குகள் ஏற்றிய பலருக்கும் இருந்திருக்கலாம். ஆனால், நொருக்கும் இரும்புக்கரங்களின் இடுக்குகளூடாகப் பீறிடும் ஒடுக்குமுறைக்கெதிரான குரல் எந்த வடிவத்தில் எந்தக் குறியீட்டினூடாகத் தன்னை வெளிப்படுத்தும் என்று எதிர்வுகூற முடியாது.

Jananthan Thavarajah சொன்னார் தாய்லாந்தின் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள், போராடும் எல்லா வழிகளும் அடக்கப்பட்ட நிலையில், தெருவில் நின்று Sandwich உண்பதன் மூலம் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்றும், கடைசியில் இவ்வாறு தெருவில் Sandwich உண்டவர்களைக் கைது செய்ய வேண்டிய நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதென்றும்.
வதையும் படுகொலைகளும் நிறைந்த சிங்கள பவுத்தப் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ் மக்களுக்குக் கார்த்திகை விளக்கீடும் அவ்வாறாகத்தான் இருந்தது. புலிகளுக்கான ஆதரவுமே கூடப் பலருக்கு அவ்வாறானதாகத்தான் இருந்தது.

ஒடுக்கப்படும் தேசிய இனமாக இலங்கைத் தமிழர் இருக்கும் வரை கார்த்திகை விளக்குகளை வெறும் மதச்சடங்காக மட்டுமே பார்க்கும் வாய்ப்பு ஒடுக்குமுறையாளர்களுக்கும் வாய்க்கப்போவதில்லை, தமிழ் மக்களுக்கும் வாய்க்கப்போவதில்லை.

No comments:

Post a Comment