Thursday, July 31, 2014

இது தற்கொலை அல்ல, எம் சமூகம் செய்த கொலை

இது தற்கொலை அல்ல, எம் சமூகம் செய்த கொலை.

ஏழையைக் கொள்ளையடிப்பவர்களும் கொலை செய்பவர்களும் சித்திரவதை செய்பவர்களும் உழைப்பை வறுகுபவர்களும் மதிப்போடும் சுகமாகவும் வாழ்கிறார்கள். இயற்கை உந்துதலில் உடலுறவு கொண்டவர்கள் சமூகத்தின் சித்திரவதையில் சாகிறார்கள்.

அதிலும் இது இருவர் சம்பந்தப்பட்ட நிகழ்வாயிருந்தும் பெண் மட்டுமே சமூகத்தால் கொலை செய்யப்படுகிறாள். 


//யாழ்ப்பாணத்தில் கர்ப்பமடைந்து 11 வாரங்களேயான இளம் பெண் தற்கொலை//

ஏமாற்றுதல் தொடர்பான தமிழ்ச்சொற்களுக்குத் திருப்பதியுடனான தொடர்பு

திருப்பதி கோயிலோடு சம்பந்தப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும் ஏமாற்றுவது/ஏமாறுவது பற்றியதாகவே தமிழில் வழங்கி வருகின்றனவே, அது ஏன்?

"பட்டை நாமம் சாத்துதல் /நாமம் போடுதல்"
"கோவிந்தா.. கோ... விந்தா!"
"மொட்டை அடித்தல்"
"லட்டு கொடுத்தல்"

திருப்பதி என்பதே மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்திக் காசுபார்க்கும் நிறுவனம் என்ற நவீனகாலப் புரிதலை விட இதற்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும் என்றுதான் படுகிறது.

மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள்

அலைகள் - விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்ட 'மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள்' தொகுப்பை நுனிப்புல் மேய்ந்தேன். இன்று ஏதோ தம்மால் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட விமர்சன முறை/தத்துவம்/நடைமுறை என்று மார்க்சிய எதிர்ப்பாளர்களால் கொண்டாடப்படும் பயனுள்ள விடயங்களை மிக எளிதாகவும் ஆழமாகவும் மாவோ சொல்லிக்கொண்டு போகிறார்.

மார்க்சியத்தினைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், அது நடைமுறை ஆய்வுகளோடு தன்னை எப்படி இற்றைப்படுத்திக்கொண்டு வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் வரட்டுத்தனமாக அதனை ஒரு மதமாக்க நினைக்கும் போக்கினை இனங்காணவும் களையவும் இத்தொகுப்பு உதவும்.

தொகுப்பின் ஒன்பது நூல்களும் கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை. இவ்வளவு பெரிய உழைப்பைச்செலுத்தி இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்திருக்கும் அலைகளுக்கும் விடியலுக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

தோழர் கிளாரா, தோழர் ரோசா லுக்சம்பேர்க்

Comrade Clara Zetkin and Comrade Rosa Luxemburg, 1910.

நான் மிகவும் மதிக்கும் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள். தோழர் கிளாரா, தோழர் ரோசா லுக்சம்பேர்க். இன்று நாம் எல்லோரும் மதிப்புடன் கடைப்பிடிக்கும் "அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் (மார்ச் 8)" உருவாகக் காரணமாக இருந்தவர் தோழர் கிளாரா.

இம்மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஜெர்மானியப் புரட்சி மட்டும் வெற்றிகண்டிருந்தால் இன்று உலகின் தலையெழுத்து வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்பது எனது நம்பிக்கை.

இம்மாபெரும் தலைவர்களது போராட்டப் படிப்பினைகளும் வழிகாட்டலும் எம்முடன் இருக்கின்றன. உலகின் தலையெழுத்தை அவர்கள் எதிர்பார்த்தபடியே மாற்றி எழுதுவதற்கான துணிவையும் தெளிவையும் எல்லாப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏனைய பாலினருக்கும் அது வழங்கட்டும். 



மலேசிய விமானத்தை வைத்துச் சமூகத்தை ஏய்த்தல்..

சமூகத்தை ஏய்ப்பதற்குப் (Social engineering) பயன்படுத்தப்படக்கூடிய நல்லதொரு கருவியாக இந்த மலேசிய விமானம் மாறியிருக்கிறது. உலகில் எவ்வளவோ தீவிரமான மாற்றங்களும் பிரச்சினைகளும் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் மலேசிய விமானத்தின் மீது அளவுக்கதிகமான கவனக் குவிப்பும் ஆர்வமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக அளவுக்கதிகமான முக்கியத்துவம் இச்செய்திக்கு ஏற்படுத்தப்படுவதே ஒரு சமூக ஏய்ப்புத்தான்.

அய்ரோப்பா - Yurop

ஐரோப்பாவை "அய்ரோப்பா" என்றும் ஔவையை "அவ்வை" என்றும் மலையை "மலய்" என்றும் எழுதிப் புரட்சி செய்து தமிழை "நவீனப்" படுத்தத்துடிக்கும் எவராவது Europe ஐ Yurop என்றும் Enough ஐ Inaaf என்றும் அன்றாடம் எழுதிப் பயன்படுத்திவரச் சம்மதிப்பார்களா/துணிவார்களா?

இந்தக் கேள்விக்கான பதிலில் அவர்களது "மொழி அரசிய"லும் மொழி பற்றிய "வெளக்கமும்" சந்திக்கு வருகிறது.

விபூசிகாவுக்கு நடந்ததும் நாட்டுக்கு நடப்பதும்

காணாமற் போனவர்களைத் தேடித் தரும்படிக் கோரிக்கை வைத்துப் போராடிய உறவினர்கள் இப்போது பிணந்தின்னும் சட்டங்களின் துணையுடன் கைது என்ற பெயரில் பழிவாங்கப்படுகிறார்கள். இப்பழிவாங்கல், ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தை முழுமையாக அச்சத்தில் உறைய வைக்கும் செயற்பாடாகும். இதே வகையான அச்சுறுத்தல் சிங்களத் தேசிய இனத்தின் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், பேரினவாத ஒடுக்குமுறை என்கிற மேலதிக இரும்புக் கரத்தின் தாக்குதலையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாகத் தமிழர் இருக்கிறார்கள். இச் செய்திகளை நூறோடு நூற்றியொன்றாகக் கடந்துபோகும்படி எம்மைத் தயார்படுத்தி வைத்திருக்கின்ற கொடிய மிகுந்த இராணுவச் சர்வாதிகாரம் நாளை ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டும்.

தானாய் எல்லாம் மாறும் என்பது...

நடந்துவிட்ட அநியாயத்துக்கு என்றாவதொரு நாள் தானாக நியாயம் கிடைக்கும் என்று நம்புவது தான் மூடநம்பிக்கைகளுள் மிக மோசமான மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையிலிருந்தே இறுதித்தீர்ப்பு நாள், முன்வினைப்பயன், பாவபுண்ணியம், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பன போன்ற மூடக்கருத்துக்கள் உருவாகி வளர்கின்றன. கடவுள்-மத நம்பிக்கை அற்றவர்களிடமும் இந்த மூடநம்பிக்கை ஆழ ஊடுருவி இருக்கிறது.

இந்த மூடநம்பிக்கையை வளர்த்தெடுப்பதன்மூலம் அநியாயங்களுக்கெதிராக மக்கள் போராடுவதையும் கோபம் கொள்வதையும் தடுத்துவிடமுடியும்.

தேர்தல்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சம்


மக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதால் சொல்லப்படும் செய்தி பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

தயான் ஜயதிலக இப்படிச் சொல்கிறார் :

//சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள். அவ்வாறான வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் மக்கள் வாக்களிக்க எண்ணுவதில்லை.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீதான் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.

பிரதான எதிர்க்கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கையில்லை. இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படாது போனால் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி நடந்தால், வெளியுலக சக்திகளால் நாட்டை இலகுவாக தோற்கடிக்க முடியும்.

மக்களை மயக்க வேண்டுமாயின் அரசாங்கம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், கவர்ச்சிகரமான, மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட மாற்று எதிர்க்கட்சி உருவாக வேண்டும். //

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பதில் எந்த அர்த்தமுமே இல்லாத நாடொன்றில் மக்கள் தேர்தல்களைத் தோற்கடிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

எக்ஸ் குரூப் காரரின் வர்க்கப் பிரிகோடு


"ஆடம்பரக் கார் வைத்திருக்கும் பணக்காரனை விட, அக்காரினை ஓட்டும் ஓட்டுனரே அதன் சொகுசை அதிகம் அனுபவிக்கிறார். இந்த இடத்தில் வர்க்க வித்தியாசத்தை எவ்வாறு புரிந்துகொள்வது; இன்று வர்க்கம் என்ற எண்ணக்கருவெல்லாம் கலைந்து போய்க்கொண்டிருக்கிறது" எனும் பொருள்படக் கருத்து உதிர்த்திருக்கிறார் ஒருவர். சிங்களச் சூழலில் அவர் அறியப்பட்ட எக்ஸ் குரூப் காரர். மேதினம் தொடர்பான கருத்தரங்கொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். இவர் இதே கருத்தை, இதே எடுத்துக்காட்டுடன் முன்னரும் நான் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சொன்னார்.

ஒரு விடயத்தை விமர்சிக்கமுதல், அது என்ன இழவு என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம். வர்க்க வேறுபாடு என்பதன் வரைவிலக்கணத்தைப் புரிந்துகொள்வதொன்றும் கடுமையான காரியமில்லை.

கமரா இல்லாமல் கண்களால் பாருங்கள்

හොරෙන් වීඩියෝ කරන්න දෙයක් නෑ. ඔය නැගලා ඉන්න මන්දිරේ තාප්පෙන් බැහැලා මහපොළොවට එන්න. කැමරාවෙන් නොව ඇස් දෙකෙන් දකින්න. මේ ඔබේ දරුවාගේ අරගලයයි

-http://lankaviews.com
திருட்டுத்தனமாக வீடியோ பிடிக்க எதுவுமில்லை இங்கே... நீங்கள் ஏறி நிற்கும் மாளிகைச் சுவர்களிலிருந்து இறங்கி நிலத்துக்கு வாருங்கள். கமரா இல்லாமல் கண்களால் பாருங்கள்... இது உங்கள் பிள்ளையின் போராட்டம்!

(படத்திலுள்ளவர் நேற்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்தினை அலரிமாளிகைச் சுவரிலில் ஏறிநின்று கமராவால் மறைவாகப் படம்பிடிக்கும் புலனாய்வாளர்)


Wednesday, July 30, 2014

3000 முசல்மான்களும் 701 சிங்களவர்களும்

செனரத் மன்னன் 3000 முசல்மான்களுக்கு நன்றியுணர்வுடன் இடம் கொடுக்க, இன்று 20 லட்சமாக பெருகி நிற்கிறார்கள் என்று கண்ணீர் உகுத்துக் கரைந்து சிவந்து கொலைவெறியோடு நிற்கிறார்கள் சிங்கள பவுத்தப் பேரினவாதிகள். விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் இடமே கொடுக்கவில்லை இலங்கையின் ஆதிக்குடிகள். அடாத்தாகத்தான் இடங்களைக் கைப்பற்றினர் மகாவம்ச சிங்கள முதற்குடிகள். இதை யார் கேள்வி கேட்பது? 701 இன்று 15,173,820 ஆகி நிற்கிறது

கண்ணடித்தல்

எமது மாமா/மாமி கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் "கண்ணடித்தல்" என்றொரு செயற்பாடு பிரபலமாக இருந்தது. "ஊர் சுழலும் பெடியெளெல்லாம் கன்னியரைக் கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ" என்ற பாடல் 1966 இல் இலங்கையில் வெளிவந்தது. இவ்வாறு "கண்ணடிக்கும்" காலத்தில் வாழ்ந்தவர்கள் அச்செயற்பாட்டினை எப்படிச்செய்வது; அதன் விளைவுகளும் பயன்களும் என்ன என்பது போன்ற தகவல்களைத் தந்துதவினால் நன்றாக இருக்கும்.

Ubuntu bug that dicriminates Tamils

Just installed Ubuntu 14.04 and noticed a strange bug in the installer. When I select my timezone as Colombo, Ubuntu automatically selects the default language as Sinhala and doesn't give any options to select Tamil in the list. After the installation, language settings window shows only Sinhala and a list of English language options. No Tamil there.

Tamil is an official language in Srilanka. It should be there as an option. Dear FOSS community friends, please file a bug report in launchpad and fix this bug as soon as possible. (I'm trying to file a bug report)


பாசிசமும் அம்மாப் பாசமும்

தாய்ப் பாசத்துக்கும் 'பாசிச'த்துக்கும் தொடர்புண்டோ என்று யோசிக்கிறேன்...
இன்று பேருந்தில் தாய்ப்பாசப் பாடல்களாகப் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலமாகவே ஓர் "அம்மா பாடல்" சிங்களத்தில் அநியாயத்துக்குப் பிரபலமாகியிருக்கிறது. தமிழகத்தில் காலையில் சுப்பிரபாதம் போடுவதுபோல் இப்போது சிங்களவர்கள் அப்பாடலைப் போடுகிறார்கள். பௌத்த விகாரைகளில் கூட "பண" போடுவதை விட அந்த அம்மா துதியைத்தான் அதிகம் ஒலிக்க விடுகிறார்கள் என்கிறார் அப்பா.
அம்மாவைப்பற்றி ஏதாவது சொன்னால் சொன்னவரைச் சீறிப்பாய்ந்து அடித்துத் துவைக்கவேண்டும் என்பது "ஆண்மை" க்கான ஒரு குறிகாட்டியாகச் சொல்லப்படுகிறது. ரவுடிகள் பெரும்பாலும் அம்மாவை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள்.
துணைவியைச் சமமாக நடத்த அஞ்சி அடக்கி ஆளும் ஆண்கள் அம்மாவை உயர்த்தி உருகி வழிந்தோடுவார்கள்.
ஆணாதிக்கத்தோடும், மதத்தோடும், தேசியவாதத்தோடும், சர்வாதிகாரத்தோடும் இந்த அம்மாப் பாச "சென்டிமென்ட்" பின்னிப் பிணைந்திருக்கும். நாட்டையும் மொழியையும் மதத்தையும் இனத்தையும் சாதியையும் அம்மாவாக்கி வழிபடுவார்கள்.
தாய்மீது காட்டவேண்டிய பற்றும் பாசமும் நிபந்தனைகள் அற்றதாக இருக்கவேண்டும் என்பார்கள். தர்க்கங்களுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
கண்மூடித்தனமான பற்றும் பாசமும் அம்மா மீது வைக்கப்படவேண்டியது என்கிற மனநிலை உருவாக்கப்படுகிறது. பின்னர் அம்மா தேசத்துக்கும் இனத்துக்கும் நிலத்துக்கும் மதத்துக்கும் உருவகிக்கப்படுகிறாள்...
அம்மாவை விமர்சிப்பவரை அடித்துத் துவைக்கவேண்டும். கதைத்து மினக்கெடக்கூடாது.
தேசத்தையோ மதத்தையோ சாதியையோ இனத்தையோ விமர்சிப்பவரையும் அப்படித்தான் கையாளவேண்டும்.
அயோக்கியரின் கடைசிப் புகலிடம் தேசியவாதம் என்பார்கள்.
அயோக்கியரின் கடைசிப் புகலிடம் எது தெரியுமா? எம்முள் ஊட்டி வளர்க்கப்படும் கேள்விகளுக்கு இடம் கொடுக்காத பற்றும் வெறியும் தாம்.

Monday, January 13, 2014

பாடல் : ஆளறியாக் காட்டுக்குள் சின்னஞ்சிறு பூக்கள்

யாருக்கும் தெரியாமல்
யாரையுமே அறியாமல்
ஆளறியாக் காட்டுக்குள்
    சின்னஞ்சிறு பூக்கள்

மணல் உருகும் பாலைவனம்
வெயிலெரியும் கானல்நிலம்
ஒருவருமே அறியாமல்
    தன்னந்தனி ஊற்று

(யாருக்கும் தெரியாமல்)

மாநகரின் பேரிரைச்சல்
வீதிகளின் புகைநெரிசல்
பேருந்தின் கதவோரம்
    கொஞ்சம் குளிர் காற்று

காட்டுக்குள் பூவாசம்
காணாத நீரோட்டம்
மாநகரில் குளிர் வீசும்
    என்னுடைய நேசம்

(யாருக்கும் தெரியாமல்)

கரும்பாறைக் கசிவுகளை
கதைகேட்டால் சிலவேளை
நூற்றாண்டு ஈரத்தின் கதை சொல்லலாம்

இரும்பான கண்ணுக்குள்
கசிகின்ற நெஞ்சத்தின்
முன் கதையின் ஈரத்தில் கடல் மூழ்கலாம்.

(யாருக்கும் தெரியாமல்)

தாய்பாலின் பாரம் போல்
பொழியாத மேகம் போல்
வழங்காத நேசம்தான் வலிக்கின்றதே

எதிர்க் காற்றில் இசைத்துளியாய்
எழுதாத கவி வரியாய்
காலத்தில் என் நேசம் கரைகின்றதே..

(யாருக்கும் தெரியாமல்)

[22-11-2013]

Wednesday, January 8, 2014

மெல்ல மறையும் Facebook காலம்


Facebook, Twitter போன்றவை உருவாக்கிய சமூக வலையமைப்புக் காலம் மெல்ல மறைந்து வருவதாக இப்போது இணையக் குடிமக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் வலைப்பதிவுகளின் காலம் மங்கி, சமூக வலைத்தளங்களின் காலம் உருவானதை நம்மிற் பலர் கண்முன்னே கண்டிருக்கிறோம். இப்போது Whatsup, Viber போன்றவை உருவாக்குகின்ற தனிப்பட்ட உரையாடல் வலையமைப்புக்களை நோக்கி இளைய சமுதாயம் நகர்வதாகப் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.

Facebook போன்றவற்றை இளம் சமுதாயம் அயர்ச்சியுடன் பார்க்கிறது. இது பயன்படுத்தக் கடினமானதாயும் பயனற்றதாயும் இருப்பதாக உணர்கிறது.

கடவுட்துணியின் பின்னல்கள் அவிழும்போது கவிதைகள் பிறக்கின்றன




இந்தச் சிவன் படம் பலநூறாண்டுகால ஆன்மீக வரலாற்று அலைக்கழிவை மனதினுள் சொட்டிச் சென்றது.
சுடலையில் ஆடும் பிணந்தின்னிச் சிவனின் உருவம் எம் மனிதர்களது வரலாற்றின் நுண்ணிய பக்கங்களுக்குள் மனதைக்கொண்டு செலுத்த வல்லது.
சிவன் என்று இன்று "இந்துக்" காரர்களால் மதம் மாற்றி உள்வாங்கப்பட்ட சாமி ஒன்றல்ல. பல.

குறிப்பாக இந்தச் சுடலைச்சிவனின் உருவம் மானிடவியல் ரீதியாக ஆர்வத்தைப் பெருக்குவது.

ஆலன் டூரிங் : சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு


சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு எவ்வளவு தூரம் மனித இனத்துக்கு எதிரானது என்பதற்குக் குறியீடாகி நிற்கிறார் ஆலன் டூரிங் (Alan Turing).

ஒரு மனிதரது ஆளுமை, திறமை, சமூகப்பயன், உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒரே கணத்தில் தூக்கி எறிந்துவிட்டு அம்மனிதரது பாலியல் தெரிவு என்கிற தனிப்பட்ட விடயத்துள் தலையிட்டு வெறுப்பை உமிழ்வதால் மனித குலம் இழப்பினையே சந்திக்கிறது.

சமப்பாலுறவாளர் மீதான வெறுப்பென்பது ஒரு பாலியல் வக்கிரம். நாம் எதிர்ப்பால் சேர்க்கையை மட்டும் விரும்புகிறோம் என்பதற்காக எம்மைத்தவிர மற்ற அனைவருமே கிரிமினல்கள் என்று முத்திரை குத்துவது ஒரு மனநோய்.

கணினித்துறை வரலாற்றில் தவிர்த்துப் பார்க்க முடியாத கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் டூரிங். அவரது அறிவு மனிதகுலத்துக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே அவரை ஆண்மை நீக்கி வதைத்து தற்கொலைக்குத் தள்ளியது இந்தப் பாலியல் வக்கிரம் பிடித்த சமூகமும் அதன் சட்டங்களும்.

வட்டிக் கடைக்காரர் பெட்டி

அவர் அந்த ஊரின் பெரிய வட்டிக்கடைக்காரர். நகை அடகு வைப்பது, வட்டிக்குக் கடன் வாங்குவதென்று அவ்வூர் மக்கள் அனைவரும் நாடுகின்ற ஒரே நபர் அவர்தான். அவரிடம் ஏராளமான செல்வம் புரண்டது. பணத்தைப் பதுக்கிப் பூட்டி வைப்பதிலும் கெட்டிக்கரர் அவர்.

ஒரு நாள் அவர் பணப்பெட்டியுடன் ஆற்றைக் கடந்து அக்கரை செல்லவேண்டியதாக இருந்தது. ஆற்றிலோ கடும் வெள்ளம். அடைமழைக்காலம்.

தங்க நகைகளும் பணமும் நிரம்பிய பெரிய கனமான பெட்டி ஒன்றையும் கையில் வைத்திருந்தார். நான்கைந்து பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்ட இரும்புப் பெட்டி அது.

ஆற்றைக்கடந்து படகில் போகும்போது ஆற்று வெள்ளத்தில் படகு அலைக்கழிந்தது. திடீரெனப்பெருகிய பெரும் வெள்ளத்தில் படகு சரிந்து கவிழ்ந்து பின் நிலை மீண்டது. அனைவரும் உயிர்தப்பியதை எண்ணி மகிழ்ச்சிக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

நம் வட்டிக்கடைக்காரும் நல்ல மகிழ்ச்சியாக இருந்தார். படகில் இருந்த மற்றவர்களுக்கு வியப்பாய்ப் போய்விட்டது.

"ஐயா, உங்களுடைய பெட்டிதான் ஆற்றோடு போய்விட்டதே, அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்கள்.

ஐயா மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், ,

"திறப்பு என்னிடம் தானே இருக்கிறது?"