Thursday, July 31, 2014

விபூசிகாவுக்கு நடந்ததும் நாட்டுக்கு நடப்பதும்

காணாமற் போனவர்களைத் தேடித் தரும்படிக் கோரிக்கை வைத்துப் போராடிய உறவினர்கள் இப்போது பிணந்தின்னும் சட்டங்களின் துணையுடன் கைது என்ற பெயரில் பழிவாங்கப்படுகிறார்கள். இப்பழிவாங்கல், ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தை முழுமையாக அச்சத்தில் உறைய வைக்கும் செயற்பாடாகும். இதே வகையான அச்சுறுத்தல் சிங்களத் தேசிய இனத்தின் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், பேரினவாத ஒடுக்குமுறை என்கிற மேலதிக இரும்புக் கரத்தின் தாக்குதலையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாகத் தமிழர் இருக்கிறார்கள். இச் செய்திகளை நூறோடு நூற்றியொன்றாகக் கடந்துபோகும்படி எம்மைத் தயார்படுத்தி வைத்திருக்கின்ற கொடிய மிகுந்த இராணுவச் சர்வாதிகாரம் நாளை ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டும்.


இத்தகைய அநியாயங்கள் தம்மீதானதல்லஎன்றும், தமக்குச் சார்பானதுதான் என்றும் ஏனைய தேசிய இனங்களை உணரவைப்பதிற்தான் பேரினவாதச் சர்வாதிகாரம் வெற்றி பெறுகிறது.

அநீதியான கைதுகளின் மூலம் நேரடியாகப் பழிவாங்கப்படும் தாய்மாரும் மறைமுகமாக, நன்னடத்தைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுப் பழிவாங்கப்படும் சிறுமி விபூசிகாவும் இந்த நாட்டின் மக்களுக்கெதிராக எதையுமே செய்யவில்லை. மக்களுக்காகவே பேசினர். அரசிடம் நீதிக்காக மன்றாடி, நீதி கிடைக்காத நிலையில் வேறு வழியின்றி வெளி நாடுகளிடம் கையேந்துகின்றனர். ஆனால், நாட்டுமக்கள், நாடு என்பதெல்லாம் மகிந்த அன்ட் கோ நிறுவனம் தான் என்றவாறாக நம்பவைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்கள் இவ் அநீதியான கைதுகளை ஏற்கவும் ஆதரிக்கவும் முன் நிற்கின்றனர்.

நாடு என்பது அந்நாட்டின் அரசாங்கம் அல்ல. நாடு என்பது அந்நாட்டின் மக்கள். இறைமை என்பது அம்மக்களின் இறைமை. இது புரியவைக்கப்படும்வரை இலங்கையின் இவ் அவல நிலையை எதனாலும் மாற்ற முடியாது.

No comments:

Post a Comment