Thursday, July 31, 2014

எக்ஸ் குரூப் காரரின் வர்க்கப் பிரிகோடு


"ஆடம்பரக் கார் வைத்திருக்கும் பணக்காரனை விட, அக்காரினை ஓட்டும் ஓட்டுனரே அதன் சொகுசை அதிகம் அனுபவிக்கிறார். இந்த இடத்தில் வர்க்க வித்தியாசத்தை எவ்வாறு புரிந்துகொள்வது; இன்று வர்க்கம் என்ற எண்ணக்கருவெல்லாம் கலைந்து போய்க்கொண்டிருக்கிறது" எனும் பொருள்படக் கருத்து உதிர்த்திருக்கிறார் ஒருவர். சிங்களச் சூழலில் அவர் அறியப்பட்ட எக்ஸ் குரூப் காரர். மேதினம் தொடர்பான கருத்தரங்கொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். இவர் இதே கருத்தை, இதே எடுத்துக்காட்டுடன் முன்னரும் நான் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சொன்னார்.

ஒரு விடயத்தை விமர்சிக்கமுதல், அது என்ன இழவு என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம். வர்க்க வேறுபாடு என்பதன் வரைவிலக்கணத்தைப் புரிந்துகொள்வதொன்றும் கடுமையான காரியமில்லை.


எவரெல்லாம் தமது உழைப்பு சக்தியைப் பேரம் பேசி விற்று தமது வாழ்க்கையை ஓட்டுகிறார்களோ, அவர்கள் உழைக்கும் வர்க்கம். அவர்கள் மூலதனத்தை வைத்திருப்பவர்களிடம் தமது உழைப்புச் சக்தியைப் பேரம் பேசி விற்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்த வழிமுறையைத்தவிர வாழ்க்கையை நடத்த அவர்களுக்குப் பெரிதாக வேறு தெரிவுகள் இருப்பதில்லை.

எவரெல்லாம் மூலதனைத்தைக்கொண்டு, அம்மூலதனத்தைப் பெருக்குவதற்குத் தேவையான உழைப்புச்சக்தியைப் பேரம்பேசி வாங்குகிறார்களோ, அவர்கள் முதலாளி வர்க்கம். மூலதனத்தைப் பெருக்க, உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்திருப்பதைத்தவிர இவர்களுக்கும் வேறு தெரிவுகள் இல்லை.

இவ்விரு வர்க்கங்களும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. ஆனால் நட்புடனல்ல. பகையுடன். இப் பகை, சூழ்நிலைக்குத் தக்கவாறு வெவ்வேறு அளவிலும் தன்மையிலும் இருக்கும்.

ஒருவர் ஓரிடத்திற் கூலியைப் பெற்றுக்கொண்டு இன்னோரிடத்தில் மூலதனத்தைப் போட்டு உழைக்கும் சக்தியை வாங்கியிருக்கிறாரென்றால், அவர் உழைக்கும் வர்க்கத்தினுட் பொருந்த மாட்டார்.

இதில் இன்றுள்ள வளர்ச்சிகளின் பிற்பாடு வர்க்க வித்தியாசம் எங்கே கலைந்துள்ளது? வர்க்கப்பிரிகோடு எங்கே மங்கியுள்ளது? வர்க்கப்பகை எங்கே இல்லாதொழிந்துள்ளது?

வேலைசெய்யுமிடத்திற் தரைக்கு மெத்தை போடப்பட்டுக் குளிரூட்டப்பட்டிருக்கிறது என்பதற்காக, தொழிலாளி முதலாளி ஆகிவிட முடியாது.

எக்ஸ் குரூப் காரர்கள் தமது குழப்பவாதத்தை நகரத்து இளைஞர்களிடமும் பணக்காரர்களிடமும் பல்கலைக்கழகங்களிலும் தான் விற்கலாம். முதலாளி தொழிலாளி வேறுபாடெல்லாம் மங்கிப்போய்விட்டதென்று ஆடைத்தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டங்களிலும் போய்ச் சொல்லிப் பார்க்கட்டுமே..

No comments:

Post a Comment