Saturday, December 21, 2013

தமிழை இலத்தீன் எழுத்துக்களில் எழுதலாம் எனும் வாதம் பற்றி..

மொழிகள் பலவிதம். ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவை. இந்த வேறுபாடுகளால் மொழிப்பிரச்சினைகள் தோன்றுகின்றன. மொழிப்பிரச்சினைகள் பொதுவாக அரசியற் பிரச்சினைகளாக இருக்கின்றன. மொழிகளில் போதாமைகள் உண்டு. எல்லா மொழிகளிலும் எல்லா வசதிகளும் இருப்பதில்லை. சில மொழிகள் அழிகின்றன. சில மொழிகள் வளர்கின்றன.

அரசியல் - பொருளாதார - சமூக சூழ்நிலைகளால் தாய்மொழியறிவு குறைகிறது. ஆதிக்க மொழிகளின் அறிவு வளர்கிறது.

மொழிகளால் ஏகப்பட்ட முரண்பாடுகள் உலகில் நிலவுகின்றன.

முரண்பாடுகள் முட்டி மோதிப் புதிய தீர்வொன்றை எட்டுவது இயற்கை. தீர்வுகளைப் பல வழிகளில் எட்டலாம்.

அதில் ஒரு வழிதான் கருவிகள் மூலம் தீர்வினை எட்டுவது. மனித வளர்ச்சியில் கருவிகள் வழங்கிய தீர்வுகள் இன்றியமையாதவை. இயற்கைக்கும் மனிதருக்குமான முரண்பாட்டில் கருவிகள் தலையிட்டுத் தீர்வினை வழங்கின. கிரிக்கட் போட்டிகளில் தீர்ப்புவழங்குவதில் முரண்பாடு ஏற்படும்போது கமராக்கள் வந்து தீர்ப்பு வழங்குகின்றன.

வேடர்களுக்குள் தீண்டாமை

வேடுவர்களை "விளிம்பு நிலை மனிதர்கள்" என வகைப்படுத்துகிறார்கள். அந்த வேடுவர்களுக்குள் அவர்களால் தீண்டத்தகாத "தலித்துக்கள்" இருக்கிறார்கள் என்பது தெரியுமா? வேடுவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நோக்கில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் போயிருந்தோம். (இதுபற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்). நாம் சந்தித்த வேடுவர் குழுமத்தைச்சேர்ந்தவர்கள், தமக்கு சுண்ணாம்பு எடுத்துத்தரும் பணியைச் செய்யும் "குரங்கு தின்னி வேடர்கள்(?)" என்றொரு குழுமத்தைத் தீண்டத்தகாதவர்களாகவும் கண்ணிற்படக் கூடாதவர்களாகவும் ஒடுக்கி வைத்திருக்கும் தகவலைச் சொன்னார்கள்.

புதிய புரோகிதர்களாக வீடியோக்காரர்கள்

இன்று திருமணங்களில் மிக முக்கியமான இடத்தினை வீடியோக்காரர்களும் ஒளிப்படக் காரர்களுமே வகிக்கிறார்கள். அவர்களின்றித் திருமணத்தில் அணுவும் அசைவதில்லை. திருமணம் நடத்திவைக்கும் மதகுருமார் கூடப் படப்பிடிப்பாளர்களின் ஆணைக்குப் பணிந்தே ஆகவேண்டியிருக்கிறது. இது நல்லதா கெட்டதா என்பது பற்றி என்னிடம் தீர்ப்புக்கள் எதுவும் இல்லை.

ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் புதியதொரு "புரோகிதர்" குழுமமாக இந்தப் படப்பிடிப்பாளர்கள் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதே. 


"சுயவிமர்சனத்தில் இருந்து தான் ஜனநாயகம் பிறக்கிறது"

"சுயவிமர்சனத்தில் இருந்து தான் ஜனநாயகம் பிறக்கிறது"
என்று எடுத்துக்காட்டுடன் விளக்கி அன்றைய இரவுணவு உரையாடலைக் கதகதப்பாக்கினார் நண்பர்.

ஜனநாயகம் அங்கிருந்துதான் பிறக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னை விமர்சிக்கத் துணிவதும் தான் சார்ந்தவர்களை விமர்சிக்க ஆயத்தமாயிருப்பதும் ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகள். இதில் எனக்கு எந்த மறுப்புமில்லை.

ஜனநாயகப் பண்புகள் கொஞ்சமும் இல்லாத மிக மோசமான சமூகச்சூழல் நிலவும் நாடுகளில் வசிப்பவர்கள் நாங்கள். எம்மையோ எம்மைச் சார்ந்தவர்களையொ விமர்சிக்கும் உறுதியும் நற்பண்பும் எமக்குக் குறைவாகவுள்ளது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் குறைவாக இருக்கிறது.

Android தமிழ்விசையில் ரெங்கநாதன்

இன்று என் பிறந்தநாள் பரிசாக ஓர் இனிய செய்தியை அறிவிக்க விரும்புகிறேன்

ஆன்ட்ரொய்ட் தமிழ் விசை செயலியில் ரெங்கநாதன் விசைப்பலகையை வெற்றிகரமாகச் சேர்த்திருக்கிறேன்.

யாழ்ப்பாணமும் "Mall" கலாசாரமும்

யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் கொழும்புக்கு அடுத்தபடியான மிகப்பெரிய நகரம். 77ம் ஆண்டுக்குப்பிறகு இலங்கைக்குத் திறந்த பொருளாதாரம் தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதன் தாக்கம் யாழ்ப்பாணத்துக்குள் போகிற வேளையில் உள்நாட்டுப் போர் வெடித்ததில் யாழ்ப்பாணம் எழுபதுகளின் இறுதியில் தனது திறந்த பொருளாதாரத்துக்குள் போகும் பயணத்தில் தேங்கிப்போய் நின்றுவிட்டது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு முற்றாகவே முற்றுகை நிலையில் தான் யாழ்ப்பாணம் இருந்து வந்தது. போர் நடந்துகொண்டிருந்த வடக்குக் கிழக்குப் பகுதிகள் அனைத்துக்கும் இது பொருந்தும்.

அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் தலைமையில் உலகநாடுகளின் வழிகாட்டலின் கீழும் உதவியின் கீழும் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுப் போர் முடிக்கப்பட்டது. போர் முடிந்தபிறகு தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குத் திறந்த பொருளாதாரமும் நுகர்வுக் கலாசாரமும் (Consumerism) வேகமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

கொழும்புக்கு எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வந்திறங்கியவை எல்லாம் இப்போதுதான் வடக்குக்கிழக்குக்குப் போகிறது. Shopping Mall கலாசாரமும் இப்படித்தான் இப்போது யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

உலகத்தின் ஒவ்வொரு மூலையையும் தமக்கான வரையறையற்ற சந்தையாக்காமல் முதலாளித்துவத்தால் வாழ முடியாது. வளங்களை அடிமட்ட விலையில் சுரண்டப் போர்களை உருவாக்குவதும் புதிய சந்தைகளைத்திறக்கச் சண்டைகளை முடிப்பதும் முதலாளித்துவத்துக்கு அவசியம்.

இந்த Mall ஒரு குறியீடு.

Tuesday, October 29, 2013

அவை யாழ்ப்பாணத் தமிழர். கெதியா வருவினம்.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் "வருவினம்", "செய்வினம்", "போகினம்" என்பன போன்ற பயன்பாடு பொதுவாகக் காணப்படுகிறது. வருவார்கள் என்ற சொல் "வருவினம்" என்று எப்படி மருவ முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறொரு பயன்பாட்டினை நான் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் எங்குமே அறிந்ததுமில்லை.

எனது பிரதேசத்திலும் ஏனைய பகுதிகளிலும் "வருவாங்க" என்று வழங்குகிறது. இது புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒரு மருவலாகும். நாங்கள் என்பது நாங்க என்று மருவும். அதையொத்த மருவலே "வருவாங்க" என்பதில் இருக்கிறது.

கம்யூனிஸ்டுக்களும் சமப்பாலுறவும்

Ndpfront தனது வலைத்தளத்தில் இந்தக் கதையைப் பிரசுரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கேல் ஜாக்சனின் இறப்பின் பின் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் சமப்பால் உறவு என்பது பாலியல் வக்கிரம் என இரயாகரன் குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாழ அதே காலப்பகுதியில் சமூகப் பெறுமதி ஏதும் இல்லாததால் சமப்பாலுறவு எதிர்க்கப்படவேண்டியது என 'செங்கொடியின் சிறகுகள்' தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அவர்கள் இருவருக்கும் சமப்பாலுறவினை இடதுசாரிகளாகவும் மனிதர்களாகவும் நாமேன் ஆதரிக்க வேண்டும் என்பதனை விளக்கி ஒரு பதில் எழுத விரும்பினேன்.

ஆனால் அப்போது இலங்கையில் அரசு இறுதிப்போர் என்று சொல்லி ஓர் இனப்படுகொலையை நடத்தத்தொடங்கியது அது தொடர்பான உரையாடல்களில் சமப்பாலுறவாளர் தொடர்பாக எழுத நினைத்தது விடுபட்டுப் போய்விட்டது. 


முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்


சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிசம் பற்றிய நீண்ட விவாதமொன்று எனது wall இல் போய்க்கொண்டிருந்தது. கம்யூனிசத்தை வெவ்வேறு விதமாக ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் அடங்கலாக பலரும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலைத் தொடர்ச்சியாக அவதானித்ததில் நான் வந்தடைந்த முடிவு என்னவென்றால், முதலாளித்துவம் என்றால் என்ன என்பது பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பதுதான்.

முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகக் கருதிக்கொண்டு பலர் சொன்ன கருத்துக்கள் முற்று முழுதாகவே முதலாளித்துவத்துக்கு எதிரானவை.

சோசலிசம், கம்யூனிசம் பற்றிய விமர்சனங்களுக்கு வருவதற்கு முன்னர் முதலாளித்துவத்தை விளங்கிக்கொள்வது அவசியமாயிருக்கிறது. இந்த உலகில் முதலாளித்துவம் ஏகப்பட்ட முற்போக்கான நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. முதலாளித்துவம் சினிமா வில்லன் மாதிரி ஒட்டுமொத்த வில்லத்தனம் அல்ல; அதற்கு முற்போக்கான நல்ல முகம் வரலாற்றில் இருந்துள்ளது. கைத்தொழில் புரட்சிக்காலத்தில் முதலாளித்துவம் இந்த உலகிற்குச் செய்த நன்மைகள் எவை; இந்த உலகில் முதலாளித்துவத்தால் தோற்கடிக்கப்பட்ட பொருளாதார முறைகள் எவை; முதலாளித்துவம் வந்து இல்லாதொழித்த பிற்போக்குத்தனங்கள் எவை என்பது பற்றி இங்கே உரையாடுவோம்.

இவ்வாறானதொரு உரையாடல் இல்லாமல் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் பற்றி உரையாடுவதென்பது பயனற்றது.

Saturday, September 21, 2013

கனவு துரத்தும் வாழ்வு :பயங்கரக் கனவு

நல்ல காலம்
உங்களிடம் கனவுகளை ஒளிபரப்பும் கருவிகள் இல்லை.

நாம் காண்பதற்கான போரையும் அமைதியையும்
நாம் காண்பதற்கான பாதுகாப்பையும் அபிவிருத்தியையும்
நாம் காண்பதற்கான சனநாயகத்தையும் சமவுரிமையையும்
நாம் காண்பதற்கான செய்திகளையும் மனிதர்களையும்

நீங்களே தேர்ந்தெடுத்து ஒளிபரப்ப இயன்றது போன்று
நாம் காண்பதற்கான கனவுகளையும் ஒளிபரப்ப உங்களிடம் கருவிகள் இல்லாது போயிற்று.

எமது கனவுகளைத் தேசிய மயமாக்கவோ குடும்பச் சொத்தாக்கவோ பணத்தினால் ஆளவோ
உங்களால் முடியாது போயிற்று..

கனவுகள் ஊற்றெடுக்கும் மனதின் ஆழங்களை
உங்கள் கருத்துக்களாலும் பரப்புரைகளாலும்
நறுமணம் வீசும் குப்பைகளாலும்  

அடைத்துவிட நீங்கள் முயன்றாலும்,

அதையெல்லாம் உடைத்துப் பீறிட்டு எம் கனவுகளுள் எரிய வல்லன,
நாயாய் நாம் உழைத்த பின்னும் எம் குழந்தை பசியில் வாடும் வலி.
ஆயுதக் கொலைப் படையின் சித்திரவதையின் முன் எம் உரிமைகள் நசுங்கிய வலி..  
எம் பிள்ளைகளுக்கான இயற்கையும் வளங்களும் கல்வியும் நல்வாழ்வும் உடல் நலமும் உள நலமும்
கண்முன்னே உங்களால் களவாடப்படும் வலி...

வாய் பேசவோ எதிர்த்து நிற்கவோ நீதி கேட்கவோ இயலாதவர்களாக்கப்பட்ட
அடிமைகள் எமக்கு விழித்திருத்தல் வலி நிறைந்தது..
வலி மறக்க,

எம் வலியில் வார்க்கப்பட்ட கனவுகளுக்குள் புகுந்து ஒடுங்கிச் சுருண்டு தூங்கிப்போகிறோம்..

நீங்கள் ஒளிபரப்பாத,
எம் வலியில் முளைத்த கனவுகளோ
உங்கள் தூக்கத்தைக் குத்திக் குத்திக் குழப்புவது பற்றி
நாம் அறியோம் ஆண்டைகளே..

ஆழ்மன வலிகளில் சுரந்த எம் அதிகாலைக் கனவுகள்
விடுதலைக் கனவுகளாக இருந்து விடுகின்றன.

அடிமைப்பட்ட மக்களின் அதிகாலைக் கனவுகளைக் கண்டு அஞ்சுவதேன் ஆண்டைகளே
உங்கள் அதிகாரக் கனவுகள் போன்று எம் அதிகாலைக் கனவுகள் பலிப்பதில்லை.

ஏதுமற்ற இந்த அடிமைகளின் கனவுகள்
பயங்கரக் கனவுகளாய் உம் படுக்கைக்குள் புகுந்து பயமுறுத்துகிறதாமே?
விசமற்ற எம் விடுதலைக் கனவுகள் துரத்தத் துரத்த

கைகளிலும் கழுத்திலும் தாயத்துக் கயிறுகளைக் கட்டியிறுகிக் கதிகலங்கித் திரிகிறீர்களாமே?
உள்நாட்டு வெளி நாட்டு ஆலயங்கள் தோறும் நேர்த்தி வைத்துக் கிடக்கிறீர்களாமே?
தூங்கவே முடியாமல் துப்பாக்கிப் படைகளின் உள்ளாடைகளுக்குள்ளேயே நீரும் நும் குடும்பங்களும் ஒளிந்து கிடக்கிறீர்களாமே?
சின்ன எதிர்ப்புக்கும் முகம் வெளிறி உடல் உதறிச் சனத்தைச் சுட்டுச் சனத்தைச் சுட்டுச் சமாளிக்கப் பார்க்கிறீர்களாமே?
அசுவமேத யாகமாமே? ஆயிரம் பிக்குகளுக்குத் தானமாமே?
இன வாத மதவாத நெருப்பெரித்து நெருப்பெரித்தெம் கனவுகளைக் கையாளும் முயற்சியும் உளதாமே?


அஞ்சாதீர் ஆண்டைகளே
பலிக்குமென்ற நம்பிக்கை எமக்கில்லாத வரையினிலும் பயங்கரமற்றவை எம் வலி சுரந்த கனவுகள்

ஒடுக்குமுறையின் ஊமை வலியில் சுரந்த விடுதலைக் கனவொன்று
அதோ
அந்த அடிமை மனுசியின் தூக்கத்தினுள், அவள் மூளைக்குள் சிறு பொறியாய் ஒளிர்கிறது..

மெல்லிய சிறு பொறியை அஞ்சாதீர் ஆண்டைகளே...

அணு உலையுள் முதல் குஞ்சு அணு பிளப்பதைப் போன்று..
பெற்றோல் குதமொன்றில் குட்டித் தீக்குச்சி விழுவதைப் போன்று..
மாபெரும் வெடிபொருட் கிடங்கில் ஒரு  சின்ன.. செல்லத் தீப்பந்தம் விழுவதைப் போன்று

அவளது கனவு பயங்கரமற்றது..

அஞ்சாதீர் ஆள்வோரே..


தூங்காதீர் ஆள்வோரே..

அணு உலையுள் முதல் குஞ்சு அணு பிளப்பதைப் போன்றது..
பெற்றோல் குதமொன்றில் குட்டித் தீக்குச்சி விழுவதைப் போன்றது..
மாபெரும் வெடிபொருட் கிடங்கில் ஒரு  சின்ன..  தீப்பந்தம் விழுவதைப் போன்றது

அந்த ஏழை மனுசியின் பயமற்ற கனவு..



--
மு. மயூரன்
19-09-2013
[பாடிப்பறை கவியரங்கம்]

Tuesday, September 10, 2013

ஓசை பெருத்த குண்டு உலகம் அழுத குண்டு

குண்டுகளின் தன்மையைப் பொறுத்து அவற்றின் ஓசை மாறுபடுவதைக்காட்டிலும் அவை வெடிக்கும் இடங்களைப்பொறுத்து அவற்றின் ஓசை அதிகம் மாறுபடுகிறது.

வன்னியில் போடப்பட்ட பாரிய வான்குண்டை விடவும் கொழும்பில் வெடிக்கும் சிறு கைக்குண்டு ஓசை பெருத்தது. காசுமீரிலும் சத்தீஸ்காரிலும் அஸ்ஸாமிலும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுகளை விடவும் பம்பாயில் வெடிக்கும் குண்டொன்று பெரும் ஓசை எழுப்பக்கூடியது. பாலஸ்தீனத்தில் வந்து வெடிக்கும் ஆயிரக்கணக்கான குண்டுகள் ஓசையின்றியும் இஸ்ரேலில் என்றாவது வந்துவிழும் எறிகுண்டொன்று பேரிடியோசையுடனும் வெடிக்கின்றன.

Tuesday, September 3, 2013

தலித்திய சீசன் - தொகுப்பு 1

சாதி ஒடுக்குமுறை என்பது மனுதர்ம சாத்திரத்தோடு தான் தொடங்கியது என்றும் மனுதர்ம சாத்திரமே சாதி ஒடுக்குமுறைக்கும் வர்ணப்பிரிவுகளுக்கும் வித்திட்டதென்றும் நம்பச்சொல்லி ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறார்களோ தெரியவில்லை.

தொல்காப்பியர்தான் தமிழைக் கண்டுபிடித்தார் என்று சொல்வதற்கு ஒப்பான அறிவியல்முறையற்ற நம்பிக்கை இது.

மனுதர்மத்தின் கைகள் எட்டியிருந்திருக்க முடியாத ஆபிரிக்காவில் இருக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் சாதியத்துக்கும் கூட மனுதர்மமேதான் வித்திட்டதா?

ஒரு நூல் குறுகிய காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்த சமூக அடுக்குகளையும் நிறுவி ஏற்றதாழ்வுகளை உண்டாக்கிக் கட்டிக்காத்து நிர்வகித்தது என்று நம்புவது கடவுள் ஏழு நாளில் உலகைப்படைத்தார் என்று நம்புவது போன்ற சிறுபிள்ளைத்தனமாகும்.

சாதியத்தையும் வருணாச்சிரமத்தையும் மனுவில் தொடங்குவதென்பது அச்சமூக ஏற்றதாழ்வுகளின் வரலாற்று இயங்கியல் வளர்ச்சியையும் அடிப்படைகளையும் மறைக்கும் அரசியல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

வளங்களுக்கான ஆக்கிரமிப்புப் போர்கள், ஆட்சி அதிகாரம், அதிகாரப் படிநிலையாக்கம், அதிகாரமும் மதங்களும் செய்துகொள்ளும் வழக்கமான சமரசம், போரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து எழும் தொழிற்பிரிவினைகளும் வர்க்கப்பிரிவினைகளும், மரபான தொழிற்குழுக்கள், குடும்பங்கள் என்று பல்பரிமாணமுள்ள நீண்ட வரலாற்று வளர்ச்சியினூடாகவே சாதியமும் வர்ணாச்சிரமமும் நிலைபெற்றிருக்க முடியும்.

மனுதர்ம சாத்திரத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதெல்லாம் அந்நூலின் காலத்தில் இந்த சமூக அமைப்பு எப்படி இருந்தது, எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பன போன்ற தகவல்களையே.

சாதி-வர்ண அரசியலை முற்றுமுழுதாக "வர்க்க நீக்கம்" செய்கிற அடையாள அரசியலின் அரசியலுக்கு ஆரியதிராவிடக் கதைகளும் மனுதர்மத்தில் சாதியைத்தொடங்கும் படைப்புக் கோட்பாடும் அவசியப்படுகிறது என்று தான் நினைக்கிறேன்.

Friday, April 26, 2013

மாணவர் எழுச்சி பற்றி..

[Facebook உரையாடல்]


மக்களுக்கும் அவர்களுள் ஒரு பகுதியான மாணவர்களுக்கும் கோபம் வருவது இயற்கை. ஒரே கோபம் பலருக்குக் கூட்டாக வரும்போது அது அரசியற் பெறுமதி கொண்ட கோபமாக, உணர்வெழுச்சியாக மாறுகிறது. மக்களுக்கு வரும் இந்தக் கோபம் நல்ல நோக்கத்தோடுதான் வரவேண்டுமென்றில்லை. சக மனிதர்கள், சிறுபான்மைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், மத மறுப்ப்பாளர்கள் மேலெல்லாம் மக்களுக்குக் கூட்டாகக் கோபம் வரலாம். தவறான பிரசாரங்கள் நன்கு எடுபட்டுப்போய்க் கோபம் வரலாம். 

Saturday, March 23, 2013

செயமோகப் பவர் ஸ்டார்

திரையுலக பவர்ஸ்டார் எம்மைச் சிரிக்க வைப்பார் கொஞ்சம் செல்வாக்கும் காசும் சம்பாதித்துத் தனக்குப் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், இந்த எழுத்துலகில் ஒரு பவர்ஸ்டார் இருக்கிறான். ஆக்கத்திறனோ எழுத்தாற்றலோ இல்லாத இவனை எதுக்கோவெல்லாம் ஆளாளுக்குத் தூக்கிவிட்டு கடைசில் சிறுதொகை வாசகர்களிடையே "பவர் ஸ்டார்" ஆகியிருக்கிறன். இவன் நச்சுப்பாம்பு. நச்சு அரசியலை இனிப்பில் தடவி சுவைக்கத்தருவதில் கெட்டிக்காரன்.

அவன் பெயர் செயமோகன்.

And உம் தமிழும்



இக்காலத்தில் And உம் தமிழும் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. இலங்கைத் தமிழர் மீது பண்பாட்டு ரீதியான ஆதிக்கம் செலுத்தும் மூன்று முக்கிய மொழிகள் உண்டு. ஆங்கிலம், இந்தி , சிங்களம் ஆகியவையே அம்மொழிகள். அம்மூன்று மொழிகளது இலக்கணத்திலும் அன்றாடப் பயன்பாட்டிலும் (சிங்களத்தில் குறைவெனினும்) And எனும் சொல் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அம்மொழிகளில் எழுதப்பட்டவற்றில் நிறைய இடங்களில் And வரும். தொலைக்காட்சி விளம்பரங்கள், செய்திகள் என்று எல்லாவற்றிலும் அவர்கள் மொழிகளில் நிறைய And இருக்கும்.


ஆனால் தமிழில் And இற்குச் சமமான சொற்கள் இயல்பாகப் புழக்கத்தில் இல்லை. அதற்குப்பதிலாக "உம்" விகுதி வழக்கத்திலிருக்கிறது. சிங்களத்திலும் "உய்" என்றொரு விகுதி இவ்வாறு வழக்கத்தில் இருக்கிறது. "அவளும் நானும் பயணம் போனோம்", "தொழிலாளர் உரிமைகளுக்கும் சம்பள உயர்வுக்குமாகப் போராட்டம் நிகழ்ந்தது" என்றவாறாகவே தமிழ் வசன அமைப்பு உள்ளது.

மொழிபெயர்ப்பின் போது மிக மிக இக்கட்டான, இன்றியமையாத சூழலில் And வரும்போது முடியாத கட்டத்தில் "மற்றும்" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

தேர்ச்சியற்ற, அக்கறையற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது And எனும் சொல்லை எங்கு கண்டாலும் அதற்கு "மற்றும்" என்ற சொல்லைப் போட்டு மொழிபெயர்க்கும் மோசமான நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சாதாரணமாக And வருவதாலும் அம்மொழிகள் எம்மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துவதாலும், அம்மொழிகளிலிருந்து ஏராளமான விடயங்கள் மொழிபெயர்ப்பாக எம் பண்பாட்டினுள் நுழைவதாலும் இந்த "மற்றும்" இப்போது சாதாரணமாக ஊடகங்களில் புழங்கிவருகிறது.

மொழிபெயர்ப்புக்களையும் தாண்டி, தமிழிலேயே எழுதப்படும் ஆக்கங்களிலும் இந்த "மற்றும்" கண்டபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தமிழில் எழுதப்படும், சொல்லப்படும் விடயங்களைப் புரிந்துகொள்வதில் சிரமத்தினையும் மயக்கத்தினையும் ஏற்படுத்தி விடுகிறது. ("இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் தமிழில் எழுதப்படும் மற்றும் சொல்லப்படும் விடயங்களைப் புரிந்துகொள்வதில் சிரமத்தினை மற்றும் மயக்கத்தினை ஏற்படுத்தி விடுகிறது" என்றுதான் இப்போதெல்லாம் எழுதுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு கடூரமாக இருக்கிறதென்று..)

எனவே ஊடகங்களிலில் இருப்பவர்கள் எழுத்தாளர்களும் தயவு செய்து தமிழை அதற்குரிய எளிய, இயல்பான இலக்கண அமைப்போடு எழுதவும் பேசவும் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற மோசமான தவறுகள் தமிழர் மத்தியில் மோசமான மொழிப் பயன்பாட்டினை உருவாக்கிவிடுகிறது.

ஒரு நூறு பேர்களின் பெயர்களை தொடர்ந்து எழுதும் போது, ஒவ்வொரு பெயரின் பின்னால் “உம்” போடுவதை விட, பக்கத்தில் கமா போட்டு கடைசிப்பெயருக்கு முன்னுக்கு மற்றும் போட்டால் கொஞ்சம் இலகுவானது. -விமலாதித்தன் 

அது ஆங்கிலத்திலுள்ள நடைமுறையாகும். தற்கால ஆங்கில இலக்கணமும் அதுவேயாகும்.

மாறாக, தமிழில் உள்ள நடைமுறை என்ன?

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
--
குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொ்ற் புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை
என்றிவை யீரைங் குற்ற நூற்கே.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளிலும் இருவேறு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது.
முதலாவதில் தொடர்ச்சியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இரண்டாவதில் பட்டியலுக்குப் பிறகு "ஆகியவை" என்று முடிக்கப்படுகிறது.

இரு வகையிலும் காற்புள்ளி (கமா) வின் பயன்பாடு உள்வாங்கக்கூடிய நல்ல முறையாகும். பட்டியலிடும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது வேறு பொருளையோ பொருள் மயக்கத்தையோ தருமாயின் காற்புள்ளி மிகவும் அவசியமானது.

எடுத்துக்காட்டாக, கந்தன் கமலா வெள்ளையன் முருகன் என்ற பட்டியலில் வெள்ளையனும் முருகனும் தனித்தனியான பெயர்களா அல்லது "வெள்ளையன் முருகன்" என்ற ஒரே பெயரா என்ற மயக்கம் வருகிறது. இங்கே காற்புள்ளி மிகுந்த பயனுடையதாகும். "திங்கள் செவ்வாய் புதன் வியாழக் கிழமைகளில்" என்று சொல்லும்போது காற்புள்ளிகூட அவசியமற்றுப் போகிறது.

மிக நீண்ட பட்டியலாயின்,

"வருணன், சோமன், அக்னி, பூசன், இந்திரன், வாயு ஆகிய தேவைதகளைத்தாம் ரிக் வேதம் குறிப்பிடுகிறதே அன்றி, இன்றுள்ள சிவன், திருமால், முருகன், காளி, பிள்ளையார், ஐயப்பன், இலக்குமி, கண்ணகி ஆகிய/எனும் கடவுள்கள் எவையுமே அவ்வேதத்தில் இல்லை" என்றவாறு எழுதலாம்.

Tuesday, March 5, 2013

ஓசோன் ஓட்டையும் மார்க்சிசத்தின் ஓட்டையும்

புருஷோத்மனுக்கும் எனக்கும் FB இல் நடந்த உரையாடல் ஒன்று


Vivek Purushoth :

இல்லை மார்க்ஸ் ஒன்றும் கடவுள் இல்லையே. கடவுளாய் இருந்தாலும் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அவர் காலத்தில் இருத்ததை விட இப்போது பிரச்சனைகள் பல்கிப் பெருகி விட்டன. அவர் காலத்தில் இருந்த பிரச்சனைகள் இப்போது ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது தளத்தில் இருக்கும் பிரச்சனைகள் அவர் காலத்தில் பேசப்படவில்லை. உதாரணம் லெஸ்பியன்,அரவாணிகள்... பற்றிய பிரச்சனைகள்.

மேலும் அவர் ஆசியாவில் காணப்பட்ட ஜாதி(தொழில்) முறை பற்றி விரிவாக ஏதும் சொல்லவில்லை. அவருடைய இலக்கில் தொண்ணூறு வீதமானது முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்பதாகவே அமைந்தது.இவ்வாறு சில குறைபாடுகள் உள்ளன. இது அவர் மேல் உள்ள பிழை அல்ல. சர்வதேச ஊடகங்களும், தொலைபேசி வசதிகளும் இல்லாமை அவர் இது பற்றி அறிய முடியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.(அவர் காலத்தில் அம்பேத்கரும் இல்லை)

அவர்(karl marx) மேல் தனி மனித விமர்சனம் என்று பார்க்கும் போது அவர் காதலியும் உற்ற நண்பியுமான 'ஹெலன் டெமூத்' பற்றி வெளி உலகிற்கு சொல்லாமல் மூடி மறைத்தமை பற்றி எனக்கு அவர் மேல் கடுமையான விமர்சனம் உண்டு.ஹெலன் டெமூத் இறந்த பின்னர்தான் மார்க்ஸின் காதலி என்று அங்கீகாரம் கிடைத்தது. மற்றப் படி 1800 களின் சிறந்த சமூக விஞ்ஞானி அவர் என்பதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.

ஐ. நாவும் அறிக்கைகளும் இலங்கைத்தமிழரும்

கூட்டு அமைப்பொன்று எப்போது சக்தி வாய்ந்ததாக இருக்குமென்றால், அதன் உறுப்பினர்களிடையே சமமான பலம்/அதிகாரம் இருக்கும் நிலையில் மட்டுமேயாகும்.

உலகம் முழுக்கக் கொள்ளையடித்துத் தாம் மட்டும் வாழ நினைக்கும் கார்ப்பரேட்டுக்களின் கையாளான சில நாடுகள் மட்டுமே பலத்துடன் இருக்கும் நிலையில் அவ்வமைப்பு சக்தி வாய்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை.


Friday, February 22, 2013

ஜெனீவா 2013

தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றினை இலங்கையில் ஏற்படுத்த, அல்லது இலங்கை அரசினை அச்சுறுத்தித் தமது திட்டங்களை இலங்கையில் நடத்திச்செல்ல இந்தப் போர்க்குற்ற விவகாரத்தை வல்லரசுகள் கையிலெடுக்கின்றன.

இலங்கையின் அரசபடைகள் நடத்திய படுகொலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்துவந்த அதே வல்லரசுகள் தாம் இன்று போர்க்குற்றம் என்ற பகடைக்காயைத் தூக்கிக்கொண்டு ஐநாவில் விளையாடுகின்றன.


Tuesday, January 29, 2013

கலையும் தணிக்கையும்

ஒரு கலைப்படைப்புக்கு தணிக்கை விதிகளே இருக்கக்கூடாது என்கிற பொத்தம்பொதுவான கருத்து அழகான ஒரு கற்பனை தான். ஆனால் நடைமுறை இவ்வழகிய கற்பனையைச் சாத்தியமற்றதாக்குகிறது.

கலைப்படைப்பொன்று பொதுவெளிக்கு மக்கள் பார்வைக்கு வரும்போது அது சமூகத்தோடு வினைபுரிகிறது. எந்தவொரு உற்பத்திப்பொருளையும்போல கலையும் ஓர் உற்பத்திப்பொருளே.

உன்னைப்போலொருவனும் விசுவரூபமும்

"உன்னைப்போல் ஒருவ"னில் நீ என்னை அவமானப்படுத்தினாய். ஒடுக்குமுறைக்குள்ளாகும் எனது/எமது நியாயங்களைக் கேவலப்படுத்தியும் திரித்தும் படமெடுத்தாய். என்னை/எம்மை ஒடுக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் வாலைப்பிடித்துக்கொண்டு அதனைப் போற்றித்துதித்தாய். அந்த அதிகார வர்க்கத்தின் எடுபிடி ஊடகங்கள் உன்னை தூக்கி வைத்துக் கொண்டாடின.
அப்போது உன்னைத் தண்டிக்கவும் திருப்பி அடிக்கவும் என்னிடம் எழுத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

இப்போது நீ தண்டிக்கப்படும்போது உனது நியாயங்கள் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் உனக்கு என்னால் தரமுடியாமற்போன தண்டனையும், நீ என்னைக் கேவலப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. அதனால் என்னால் "நடுநிலையாக" சிந்திக்க முடியாது. நீ தண்டிக்கப்படுவதாய் எண்ணுகையில் நான் மகிழ்கிறேன்.

இந்திய அதிகாரவர்க்கத்துக்கு எதிரானவர்களை விசாரணை இன்றிக் கரப்பான் பூச்சியைப்போல நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றாய். இப்போது படத்தைப் பார்க்காமலே உன்னை அடித்து நொறுக்கும் "நியாயத்தை" நான் எதிர்க்காமலிருக்கவேண்டியதாகிறது.

இந்த எதிர்ப்பும் ஒரு நாடகமாக இருக்கலாம் என்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் உணர்ந்தவனாக, உன்னை ஆதரிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி ரசிகர்களுக்காக இதனை நான் சொல்லவேண்டியவனாகிறேன்.

Thursday, January 24, 2013

கடவுள்

நண்பன்:-- இந்த உலகில் கடவுள் இல்லை


நான்:--ஏன் ???


நண்பன்:--இன்றுவரை யார் கண்ணுக்கும் புலப்பட்டதே இல்லை


நான்:-- இந்த உலகில் WIFI , BLUE TOOTH இருக்கா ????


நண்பன்:--இருக்கு நான் USE பண்றனே


நான் :---எங்க காட்டுங்க ??


நண்பன் :--@@@******$$$$???????????????????????


#இருக்கு ஆனா இல்லை
 
 
 காற்று கண்ணுக்குத் தெரிகிறதா? அதுபோல் கடவுளும் கண்ணுக்குத் தெரியமாட்டார் என்ற பழங்காலத்து வாதத்தைத்தான் இங்கே புதிய வடிவில் பார்க்கிறோம். வித்தியாசம் எதுவுமில்லை.

கடவுள் விடயத்துக்கும் காற்று, ரேடியோ அலைகள், Wifi விடயத்துக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு.

Saturday, January 19, 2013

FLSP எனும் நிகழ்வு

//
இப்போ ஒண்றுபட்ட போராட்டம் என பல அமைப்புக்கள் முளைத்துள்ளது. இது ஒரு சந்தோசமான் விடயம் கூட , ஆனால் ஒரு சின்ன சந்தேகம் முள்ளிவாய்க்காலலில் மக்களை கூட்டி ஒதுக்கி சுறிவளைத்து செல் அடித்தபோது படுகொலைக்கு எதிராக ஒரு குரல் தெற்கில் இருந்து எழுமா என ஏங்கியவர்களுக்கு இப் பொற்காலத்தை நம்புவது கஸ்டமாக உள்ளது.மேலும் ஒரு அமைப்பியல் மாற்றத்தை மறுப்பது (அதிகாரப் பகிர்வு)மற்றும் வெறும் இனங்களிடையே யான நல் இனக்கம் என்னும் வெறும் கருத்தை மாத்திரம் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்ப முயற்சிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை “தோற்ற தமிழன்தான்” நல்ல தோழமைத்தமிழன் என இந்த முற்போக்குகள் நினக்கிறார்களோ என்னவோ?//
உங்களுடைய இந்த விமர்சனம் FLSP, அதன் தோழமை அமைப்பான "சம உரிமை இயக்கம்" ஆகியவற்றைக் குறித்தே முன்வைக்கப்பட்டுள்ளது.

JVP இலிருந்து FLSP பிரிந்தபொழுது நானும் நான் சார்ந்துள்ள அமைப்புக்களும் அவர்களை JVP இன் ஒரு நீட்சியாகவே மட்டுக்கட்டினோம். அவர்கள் மீதான காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தோம்.

காலவோட்டத்தில் அவர்களுடனான தொடர்பாடல் முன்னேற்றமடைந்தபோது அவர்களை முப்பரிமாணமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.