அரசியல் - பொருளாதார - சமூக சூழ்நிலைகளால் தாய்மொழியறிவு குறைகிறது. ஆதிக்க மொழிகளின் அறிவு வளர்கிறது.
மொழிகளால் ஏகப்பட்ட முரண்பாடுகள் உலகில் நிலவுகின்றன.
முரண்பாடுகள் முட்டி மோதிப் புதிய தீர்வொன்றை எட்டுவது இயற்கை. தீர்வுகளைப் பல வழிகளில் எட்டலாம்.
அதில் ஒரு வழிதான் கருவிகள் மூலம் தீர்வினை எட்டுவது. மனித வளர்ச்சியில் கருவிகள் வழங்கிய தீர்வுகள் இன்றியமையாதவை. இயற்கைக்கும் மனிதருக்குமான முரண்பாட்டில் கருவிகள் தலையிட்டுத் தீர்வினை வழங்கின. கிரிக்கட் போட்டிகளில் தீர்ப்புவழங்குவதில் முரண்பாடு ஏற்படும்போது கமராக்கள் வந்து தீர்ப்பு வழங்குகின்றன.
மொழிகள் வேறுபடுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கும் (மென்பொருட் கருவிகள் உட்பட்ட) தொழிநுட்பக்கருவிகள் தாம் தீர்வினை வழங்கப்போகின்றன.
நீங்கள் ஒரு கண்ணாடியைப் போட்டுக்கொண்டால் பிரேஞ்சு எழுத்துக்களை நீங்கள் தமிழ் எழுத்தாக ஒலி பெயர்த்துப் படிக்கலாம். ஏன், மொழிபெயர்த்தே படிக்கலாம். இவ்வாறான கருவியை உருவாக்குவது ஒட்டுமொத்த பிரேஞ்சு மொழியையே தமிழர்கள் படிக்க வசதியாக தமிழ் எழுத்துக்கு மாற்றுவதை விடச் சுலபமானது. எல்லா மொழிக்காரர்களும் பயன்படுத்தலாம். இந்தக்கண்ணாடியின் அடிப்படை ஏற்கனவே கூகிள் கண்ணாடியாக வெளிவந்துவிட்டது.
வரலாற்றினை இயங்கியலாக, உழைப்பினதும் கருவிகளினதும் வளர்ச்சியினூடாகக் காணாமல் சனாதனமாக/ மாறாத ஒன்றாகக் காண்பவர்களுக்கே கதிரை அளவில்லாமற்போனால் குண்டியை வெட்டி அளவாக்குங்கள் என்று இந்துப் பேப்பரில் கட்டுரை எழுதத் தோன்றுகிறது.
தமிழ் எழுத்துக்களைக் குறைக்கப்போகிறோம், ஆங்கில எழுத்துக்குப் பக்கத்தில் கொம்பு அரவெல்லாம் போட்டு உச்சரிப்பைத் துல்லியமாக எழுதிப் புரட்சி செய்யப்போகிறோம் (பக்கத்தில் அடைப்புக்குள் உச்சரிப்பை இலத்தீன் எழுத்துக்களில் போட்டுவிட முடியும் என்ற எளிய தீர்வு கூடவா உங்கள் மூளைக்குள் உதிக்கவில்லை?) என்பவர்களெல்லாம் இந்தக் குண்டிவெட்டிக் கேசுகள்தாம்.
எழுத்துலகப் பவர்ஸ்டார் இந்துவில் ஒரு மொக்கை போட்டதும்போட்டார் நல்லதொரு உரையாடல் இணையமெங்கும் நடக்கிறது.
இரா. சிவநேசன் உத்தமம் மடற்குழுவில் இது தொடர்பாக ஒரு திருக்குறள் பகிர்ந்திருந்தார்
"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்" (குறள் 463)
(வரவை எண்ணி மூலப் பொருளை இழக்கும் செயலை செய்ய தூண்ட மாட்டார் அறிவுடையவர். அதாவது தூண்டில் விற்று மீன் வாங்கக்கூடாது)
ஒருவேளை உலக மொழிகள் எல்லாமே இலத்தின் எழுத்துருக்களில் எழுதப்பட்டாலும் கூட அதனாற் பெரிதாக எந்தப் பயனும் விளைந்துவிடப்போவதில்லை. ஏனெனில் உலக மொழிகளின் உச்சரிப்புக்கள் எல்லாவற்றையும் இலத்தீன் எழுத்துக்களால் எழுத முடியாது.
சீன மொழியில் ஏற்கனவே இந்தத்திட்டம் நடைமுறையிலுள்ளது. Hanyu Pinyin எனப்படும் இலத்தின் வரியுருக்களைக்கொண்டு எளிதாக்கப்பட்ட சீன மொழியை எழுதும் இத்திட்டம் மாவோ காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று.
அந்தத் திட்டத்தின் படி எழுதப்பட்ட சீனத்தை இலத்தீன் வரியுருக்களைக் கரைத்துக்குடித்த ஒருவராற்கூடப் படிக்க முடியாது.
Hanyu Pinyin என்பதே கூட உண்மையில் "ஹான்யு பீயீ" என்றுதான் உச்சரிக்கப்படும்.
சீன மொழியில் உச்சரிப்பு மட்டுமல்ல, சுருதி ஏற்றதாழ்வுகூட சொற்களின் பொருளை வேறுபடுத்தும். இதற்கெல்லாம் சிறப்பான குறியிடுகளை Hanyu Pinyin கொண்டிருக்கிறது. இந்த சுருதி வேறுபாடு இல்லாவிட்டால் சீன மொழியே இல்லை.
இதனால் Hanyu Pinyin ஐ ஒரு மொழியைக் கற்பது போலக் கற்க வேண்டியுள்ளது.
உலக மொழிகளுக்கெல்லாம் இலத்தீன் வரியுருவந்தாலும் இதுதான் நிலை. முரளிதரன் மயூரன் என்கிற என்னுடைய பெயரை இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் எழுதி ஒரு அமெரிக்கரைச் சரியாக வாசித்து உச்சரிக்க வையுங்கள் பார்க்கலாம்.
கா. சேது : //சீன மொழியில் ஏற்கனவே இந்தத்திட்டம் நடைமுறையிலுள்ளது. Hanyu Pinyin எனப்படும் இலத்தின் வரியுருக்களைக்கொண்டு எளிதாக்கப்பட்ட சீன மொழியை எழுதும் இத்திட்டம் மாவோ காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. //
சீன எழுத்துவடிவங்களைத் தூக்கி வீசிவிட்டு இலத்தின வரியுருக்களால் தம் மொழியை எழுதலாம் என்பதற்காக பின்யின் முறைமையை அவர்கள் ஏற்படுத்தவில்லை. மாறாக மண்டரின் மொழிக்கு ஒலிப்புக்குறிப்புகளாகப் பயன்படுத்துவதற்காகத்தான் ஏற்படுத்தினர்.
பின்யின்னை அதிகாரபூர்வமாக ஏற்கமுன் மண்டரின் மொழியின் ஒலிப்புகுறிகளுக்கு சீன நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது சூயின் (zhuyin). 1949 இல் ஆட்சியைக் கைபற்றிய கம்யூனிச அரசு பின்னர் சூயின்னுக்குப் பதில் பின்யின்னை பயன்படுத்துவது சிறந்தது என முடிவு செய்த்தது. இத்தகைய மண்டரின் ஒலிப்புக்குறிகளுக்காக ஆக்கப்பட்ட எழுத்தொழுங்கியல்கள் (orthography) சிலவற்றின் ஒப்பீடுகளை இங்கு காணலாம் : http://en.wikipedia.org/wiki/Pinyin...
தற்காலங்களிலும் தைவானில் மண்டரின் மொழிக்கு ஒலிப்புக்குறிகளாக பயன்படுத்தப்படுவது சூயின்தான். (பேச்சுவழக்கில் bopomofo எனகின்றனர்). மேலும் தைவானில் மண்டரின் மொழிக்கு பயன்படுத்தும் சீன வரிவடிவங்கள் மிகப்பழமையானவை. சீனாவில் சீன மொழி வரிவடிங்கள் பலதடவை சீர்திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டவை.
பின்யின் எழுத்தொழுங்கியலுக்கு அதிகார்வபூர்வ ஆதரவை சீன அரசு வழங்கியமை பல மாங்காய்களை ஒரு கல்லினால் வீழ்த்துவதற்கு எனவேத் தெரிகிறது. அவை:
1. கற்கையைத் தொடங்கும் சிறார்களுக்கு ஒலிப்புகளை கற்றுக்கொடுபதற்கு. ஆனால் ஆரம்பநிலை தாண்டி தம் மொழியின் வரிவடிங்களை பயின்றதும் பின்யினை மறந்துவிடுகிறார்களாம்.
2. அக்காலங்களில் (1950-60 களில்) சீனாவில் இருந்த பாரியளவிலான எழுத்தறிவில்லாதா முதியோர்களுக்கு விரைவில் முறைசாரா கல்வியை (adult education) கொண்டு செல்ல.
3. சீனாவில் உள்ள ஏனையை மொழிகள் (கண்டோனீயம், திபெத்தியம்... இன்னபிற) மற்றும் கிளைமொழிகள் பேசும் அனைவரும் அதிகாரபூர்வ செம்மையாக்கப்பட்ட மண்டரின் கட்டாயமாக கற்கவேண்டும் என்னும் கொள்கைப்படி ஏனைய சீனவாழ் மொழியினங்களும் தேசியங்களும் மண்டரின் கற்பதற்கு முதல் வரியுருவாக பின்யினைப் பயன்படுத்துவது.
4. பிற்காலங்களில் கணினிகளில் உள்ளிடவும்
5. வெளிநாட்டவர்கள் மண்டரின் மொழிச் சொற்களை பலுக்குவதற்கும் எழுதுவதற்கும். குறிப்பாக டங் சியாவுபிங் காலத்தில் உலகமெங்கும் பின்யின் எழுத்தொழுங்கியல் அறிமுகப்படுத்தப்பட முன்னர், பீப்பிங், பீக்கிங் என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருந்த நகரின் பெயர் "பெய்ஜிங்க்" எனவே பலுக்கப்படவேண்டும் என உலகம் அறிந்தது பின்யின் வாயிலாகவே.
சீன மண்டரின் மொழியினத்தவர்கள் தமது வரிவடிவங்களுக்கு மாற்றீடாக ஓர் உலக மொழியின் வரியுருக்களைப் பயன்படுத்துவதற்காக பின்யின் எழுத்தொழுங்கியல் ஆக்கப்பட்டது என தாங்கள் கருத்தேற்றம் செய்துளதை நான் ஏற்கவில்லை.
ஆனால் சீனர்களுக்கு ஒலிப்புகளை கற்பிற்பதற்கும் புறமொழியினருக்கு மண்டரின் மொழியை எழுதுவதற்கும் பலுக்குவதற்கும் பின்யின் எழுத்தொழுங்கியல் கூட போதுமானதாயில்லை என சீனர்களின் விமர்சனங்கள் உள்ளதைக் கண்டிருக்கிறேன். மேலும் தாங்கள் கூறியபடி "சுருதி" வேறுபாடுகளுக்கான சிறப்புக்குறியீடுகளை உள்ளடக்காமல் தட்டையாக ஆங்கிலத்துக்கான இலத்தின வரியுருக்களை மட்டும் பெயர்பலகைகள் போன்றவற்றில் எழுதப்பட்டுளதான் காரணமாக பல சொற்கள் மிகத் தவறாக வெளிப்படுவதாகவும் அறிகிறேன்.
No comments:
Post a Comment