"சுயவிமர்சனத்தில் இருந்து தான் ஜனநாயகம் பிறக்கிறது"
என்று எடுத்துக்காட்டுடன் விளக்கி அன்றைய இரவுணவு உரையாடலைக் கதகதப்பாக்கினார் நண்பர்.
ஜனநாயகம் அங்கிருந்துதான் பிறக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால்
தன்னை விமர்சிக்கத் துணிவதும் தான் சார்ந்தவர்களை விமர்சிக்க
ஆயத்தமாயிருப்பதும் ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகள். இதில் எனக்கு எந்த
மறுப்புமில்லை.
ஜனநாயகப் பண்புகள் கொஞ்சமும் இல்லாத மிக மோசமான
சமூகச்சூழல் நிலவும் நாடுகளில் வசிப்பவர்கள் நாங்கள். எம்மையோ எம்மைச்
சார்ந்தவர்களையொ விமர்சிக்கும் உறுதியும் நற்பண்பும் எமக்குக்
குறைவாகவுள்ளது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் குறைவாக
இருக்கிறது.
ஏனைய இனங்களை, மதங்களை, சமூக வழக்கங்களை
விமர்சிக்கும் எமக்கு எம்முடைய சொந்த இனத்தை மதத்தை விமர்சிக்க
விருப்பமில்லை. எம்முடைய குடும்பத்தில் நிகழும் தவறுகளை விமர்சிக்க
விருப்பமில்லை. எமது இனத்தவர் செய்யும் அநியாயங்களை விமர்சிக்க
விருப்பமில்லை.
என்னுடைய பல சிங்கள நண்பர்களுக்கு இலங்கையின்
பௌத்த சிங்களப் பேரினவாதத்தை விமர்சிக்க விருப்பமில்லை. அநகாரிக தர்பாலவை
விமர்சித்தால் அவர்களது ஆளை வெளியாளாகிய நான் விமர்சிக்கிறேன் என்ற
அடிப்படையில் தனிப்பட, குரோதமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
எம்முடைய ஆள், மற்றவர்களுடைய ஆள் என்பதெல்லாம் தாண்டி, அறத்தின் வழி
நிற்பவர்கள் எம்முடையவர்கள், அறத்தினை மதியாதோர் வெளியாட்கள் என்ற எண்ணம்
ஏற்படும் வரை ஜனநாயத்திலிருந்து நாம் வெகு தூரத்தில் தான் நிற்போம்.
எமது குழுவை விமர்சிக்க மறுக்கும் குறுங்குழு இயல்பே இன்று பகை எனும்
தீயாகி எல்லாருடைய ஜனநாயக்கதையும் குழி தோண்டிப்புதைத்திருக்கிறது.
எம்மை விமர்சிக்கும் நல்ல பழக்கத்தைப் பரவலாக்க முயற்சி செய்வோம். அதை ஒரு நல்ல பழக்கமாகப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்போம்.
சிறிய
வயதிலிருந்தே "விமர்சனமற்ற ஆதரவு" என்பது நல்ல விடயமாகச்
சொல்லித்தரப்படுகிறது. தேசபக்தி, மொழிப்பற்றி, இனப்பற்று, மதப்பற்று என்று
எல்லா விதமான பற்றுக்களைப்பற்றியும் போதிக்கும்போது மறைமுகமாக இந்த
"விமர்சனமற்ற ஆதரவே" போற்றப்படுகிறது.
சரியானது, உயர்ந்தது
என்று காட்டப்படுவதெல்லாம் நூறுவீதம் சரியானதாக மட்டுமே
அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் பிள்ளைகள் மனதில் சரியானதெல்லாம்
நூறுவீதம் சரியானதாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பசுமரத்தாணி போல்
அறையப்படுகிறது. ஆறுமுகநாவலர், காந்தித்தாத்தா போன்ற பெரியார்கள் தவறே
செய்யாதவர்களாகவே சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
சினிமாவும் அதையே செய்கிறது.
இது
மாற்றம் காண வேண்டும். ஒவ்வொரு மனிதரதும், ஒவ்வொரு அமைப்ப்னதும், ஒவ்வொரு
விடயத்தினதும் நன்மை தீமைகளை வெளிப்படையாஅச் சொல்லிக்கொடுத்து நல்லவற்றை
ஏற்கவும் அல்லவற்றை விமர்சித்து ஒதுக்கவும் பழக்க வேண்டும்.
No comments:
Post a Comment