வேடுவர்களை
"விளிம்பு நிலை மனிதர்கள்" என வகைப்படுத்துகிறார்கள். அந்த
வேடுவர்களுக்குள் அவர்களால் தீண்டத்தகாத "தலித்துக்கள்" இருக்கிறார்கள்
என்பது தெரியுமா? வேடுவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நோக்கில் கடந்த
சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் போயிருந்தோம். (இதுபற்றி பின்னர்
விரிவாகச் சொல்கிறேன்). நாம் சந்தித்த வேடுவர் குழுமத்தைச்சேர்ந்தவர்கள்,
தமக்கு சுண்ணாம்பு எடுத்துத்தரும் பணியைச் செய்யும் "குரங்கு
தின்னி வேடர்கள்(?)" என்றொரு குழுமத்தைத் தீண்டத்தகாதவர்களாகவும்
கண்ணிற்படக் கூடாதவர்களாகவும் ஒடுக்கி வைத்திருக்கும் தகவலைச் சொன்னார்கள்.
இந்தத்தகவல் சாதியினதும் தீண்டாமையினதும் தோற்றம் பற்றிய எனது
கருதுகோள்கள் சிலவற்றை மெய்ப்பிக்கக்கூடியதாய் இருந்தது. வேடுவர்களிடையே
மனுதர்மத்தின் செல்வாக்கால் நிறுவனமயப்படுத்தப்பட்ட சாதியமோ தீண்டாமையோ
வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மனு தர்மம் இல்லாமலே அவர்களிடையே சாதி
நிறுவனமயப்பட்டுள்ளது. குலக்குழுக்கள் இடையேயான மோதல், அதிகாரச் சமமின்மை,
வேலைப்பிரிவினை, வேலைப்பிரிவினையை உருவாக்கிக் கட்டிக்காக்கும் அதிகார
வேறுபாடுகள் போன்ற காரணிகளே இந்தத் தீண்டாமையை நிறுவனமயப்படுத்தியது என்று
கருதலாம். அவர்களது வழிபாட்டுச் சடங்குகளூடாக இத்தீண்டாமை
பாதுகாக்கப்படுகிறது.
சுண்ணாம்பு எடுத்துத்தரும் அந்த
தீண்டப்படாத வேடுவர்களுக்கு ஆதிக்கத்தில் இருக்கும் வேடுவர் குழுமத்தினர்
எதனையும் கைம்மாறாகக் கொடுப்பதில்லை. பொதுவாகத் தீண்டாமைக்குப் பின்னே
இருக்கும் உழைப்பு/வளச் சுரண்டலின் கூறுகள் இங்கேயும் காணப்படுவது
வியப்பானது.
[எங்கள்
பின்னவீனத்துவ தலித்தியப் போதகர்களும் ஈவெரா பெரியார் வழிபாட்டாளர்களும்,
மிசனரிகளும் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய இயங்கியல் பார்வையினை
முற்றாக மறுத்து, அதன் வர்க்க அரசியலை முற்றாக நீக்கி தட்டையான ஒற்றைப்
பரிமாணம் கொண்ட பார்வையையே பரப்பி வருகிறார்கள். இலங்கையில் முளைத்துள்ள
புதிய தலித் சாதிச்சங்கக்காரர்கள் கொஞ்சம் தமது மனங்களைத் திறந்து சாதிகள்
பற்றிய ஆய்வுகளைச் செய்து நடைமுறைக்கு ஒத்த சாதி ஒழிப்புப் பணிகளில் தம்மை
இணைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.]
No comments:
Post a Comment