Thursday, January 24, 2013

கடவுள்

நண்பன்:-- இந்த உலகில் கடவுள் இல்லை


நான்:--ஏன் ???


நண்பன்:--இன்றுவரை யார் கண்ணுக்கும் புலப்பட்டதே இல்லை


நான்:-- இந்த உலகில் WIFI , BLUE TOOTH இருக்கா ????


நண்பன்:--இருக்கு நான் USE பண்றனே


நான் :---எங்க காட்டுங்க ??


நண்பன் :--@@@******$$$$???????????????????????


#இருக்கு ஆனா இல்லை
 
 
 காற்று கண்ணுக்குத் தெரிகிறதா? அதுபோல் கடவுளும் கண்ணுக்குத் தெரியமாட்டார் என்ற பழங்காலத்து வாதத்தைத்தான் இங்கே புதிய வடிவில் பார்க்கிறோம். வித்தியாசம் எதுவுமில்லை.

கடவுள் விடயத்துக்கும் காற்று, ரேடியோ அலைகள், Wifi விடயத்துக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு.

காற்று இருக்கிறதென்றோ, காற்றில் 20 விழுக்காடு ஒக்சிசன் இருக்கிறதென்றோ ஒரு அறிவியலாளர் சொன்னால், அவரால் அதனை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட இயலும். அவ்வாறு நிரூபிப்பதற்கான வழிமுறைகளை அவ்வறிவியலாளர் வைத்திருப்பார். அவரது வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் உங்கள் முயற்சியாலேயே கண்டுகொள்ளவும் இயலும்.

ஏனைய கட்புலனாகா அலைகள் பற்றிய விவகாரமும் இப்படித்தான்.

Wifi, Bluethooth அலைகளின் இருப்பை ஒரு சாதாரண இலத்திரனியல் மாணவரால் கூட இலகுவாகவே நிரூபித்துக் காட்ட முடியும்.

காற்று இருக்கிறது என்று கேள்வி கேட்காமல் நம்பச்சொல்லி அறிவியல் ஒருபோதும் சொல்வதில்லை. முடியுமான எல்லாச்சாத்தியங்களுடனும் கூடிய பரிசோதனை வழிமுறைகளை அது முன்வைத்து ஒரு விடயத்தின் இருப்பினை அது முன்மொழிகிறது.

ஆனால், கடவுள் விவகாரம் இதற்கு மறுதலையானது.

அறிவியல் வளர்ச்சியற்ற குழந்தைகளின் நம்பிக்கை போன்ற ஒன்று தான் இந்தக் கடவுள்.

மீன்பொரியல் செய்வதற்கு அம்மா தேவை. எனவே உலகைப் படைப்பதற்கு ஒருவர் தேவை என்கிற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை.

கடவுள் என்பதற்கு தெளிவான வரைவிலக்கணங்களையோ, கடவுளின் இருப்பைக் கண்டறிந்த தெளிவான பரிசோதனை முறைகளையோ ஆத்திகர்கள் முன்வைப்பதில்லை. எந்தப் புனித நூலும் முன்வைத்ததில்லை.

இந்த உலகம் எவ்வளவு பெரியது; எவ்வளவு அழகியது.. இதனை சாதாரண மனிதனால் உருவாக்க முடியுமா; இதனை சக்தி மிக்க ஒருவரால் அல்லவா உருவாக்க முடியும்.. என்கிற சிறுபிள்ளைத்தனமான தர்க்க முறையை மட்டும் நம்பியே கடவுள் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.


உங்கள் நண்பர் சொல்லியிருக்க வேண்டியபதில், "நான் Bluetooth இனைப்பயன்படுத்தி ஒரு கோப்பினை எனது செல்பேசிக்கு அனுப்புகிறேன். நீ கடவுளைப் பயன்படுத்தி ஏதவது ஒரு வேலையயாவது செய்துகாட்டு பார்க்கலாம்" என்பதுதான்.


மனிதர் கூர்ப்படைந்த காலம் தொட்டு கடவுள் என்கிற எண்ணக்கரு எப்படி உருவானது, வளர்ச்சியடைந்து வந்தது, எப்படி எல்லாம் மாறிவந்திருக்கிறது, எப்படி இடத்துக்கிடம் மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது என்கிற தகவல்களை வரலாற்று ரீதியாகக் கற்றுக்கொள்ளும்போது கடவுள் பற்றிய மாயை எம்மிடமிருந்து விலகும்.



---

//அந்த ஷக்திக்கும் எமக்கும் உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ள மனித மூளைக்கு இன்னும் பல ஆயிர வருட கூர்ப்பு தேவைப்படும்..//

அப்படியானால் அந்தக்கடவுளை எப்படி மனிதர்கள் கண்டுபிடித்தார்கள்? எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? @ Yogendran Mathushangar

ஒன்றை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் தேவை. அப்படி ஆதாரங்கள் இல்லாமல் நம்புவது மூடத்தனமா இல்லையா?

கடவுள் இருப்பதற்கான போதிய ஆதாரங்களில்லை. கடவுளின் இருப்பு விஞ்ஞான முறைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நம்புவதில் எனக்குப் பிரச்சினை இல்லை.

காற்றை நம்புகிறோம். WiFi இனை நம்புகிறோம். ஏனெனில் அவை இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. கடவுளை நம்புவதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை. கேட்டால் யாரும் தருகிறார்களுமில்லை.


--

நிரூபணம் இல்லாத ஒன்றை நம்ப வலியுறுத்தும் மதங்களையும் கடவுள் கோட்பாட்டையும் நான் வெறுப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த "கண்மூடித்தனமான நம்பிக்கை" என்கிற பண்பாடு எமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. கடவுட் கோட்பாடு, மதம் போன்றவை மூலம் தான் இவ்வகை நம்பிக்கைக்கு மக்கள் சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

மக்களது இந்த கண்மூடித்தனமாக நம்பும் பழக்கத்தை பலரும் தமது சுயநலத்துக்கு இலகுவாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இனவாதம், மதவாதம் பரப்படுவதிலிருந்து போலிச்சாமியர்கள், பெண்ணடிமைத்தனம், சாதி, அதிகாரங்களைக் கேள்விகேட்காமலிருப்பது போன்றவை எல்லாமே இந்த "கண்மூடித்தனமான நம்பிக்கையின்" அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது.

அறிவியல் அடிப்படையில், ஆய்வு ரீதியாக, போதிய ஆதாரங்களினூடாக மட்டுமே எதனையும் நம்பும் சமூகம் வளர்த்தெடுக்கப்படுமானால் எத்தனையோ பிரச்சினைகளை இல்லாதொழிக்கலாம்.

அதற்கு முதல் நிபந்தனையே கடவுளை அழித்தொழிப்பதுதான். அதுதான் மனித மூடத்தனங்களின் மூலவூற்று.

--

இங்கே ஒருவர் கடவுள் என்பது எம்மை மீறிய சக்தி, அது வெளியே இருக்கிறது என்கிறார். இன்னொருவர் அது பிரபஞ்சத்தைப் படைத்தது என்கிறார். சிறுவயதில் என்னிடம் கடவுள் முகிலுக்கு மேலே இருக்கிறார் என்றார்கள்.

இதில் யார் சரி?

இதில் யார் சொல்வது சரி என்பதற்கு ஆதாரங்கள் உண்டு?

--

@Yogendran Mathushangar ஒன்றை இல்லை என்று சொல்லும்போது இருக்கலாம் என்கிற சந்தேகத்தை எப்போதும் கொண்டிருக்கவேண்டும் என்பது அறிவியலின் அடிப்படைதான்.

அதேபோல இருக்கு என்றும் சொல்லும் போது அது இல்லாமலும் இருக்கலாம் என்று கொள்வதும்தான் அறிவியல்.

கடவுள் இல்லாமலிருக்கலாம் என்கிற சந்தேகம் உங்களுக்கு எப்போதும் உண்டா?

--


கடவுளுக்கும் மேலான சக்தி ஒன்று இருக்கிறது அது உங்களுக்குத் தெரியுமா?

அதற்குப் பெயர் "பளாய்".
அது சதுர வடிவாக இருக்கும். மேற்பரப்பில் மூன்று உணர்கொம்புகள் இருக்கும்.

அதுதான் கடவுளைப் படைத்தது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கும்போது கடவுளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதும் கையில் பிரம்பை வைத்துக்கொண்டு கடவுள் ஐசடிக்காமல் வேலை பார்ப்பதைக் கண்காணித்ததும் "பளாய்" தான்.

பளாயினுடைய கை கண்களுக்குத் தெரியாது. அதன் பிரம்பும் கட்புலனாகாது.

பளாய் கடவுளை விட 100,345.4302 மடங்கு வேகமாகப் பயணிக்கக்கூடியது. இதனைக் கடவுளாலேயே சரியாக உணர முடியாது.

மனித அறிவியலுக்கோ, மனிதக் கருவிகளுக்கோ இதனைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் பளாய் , கடவுளைக்கொண்டு மனித அறிவியலைப்படைக்கும்போது தன்னை உணர முடியாதபடியே படைத்தது. கடவுளாலும் தன்னை உணரமுடியாதபடிக்குத் தான் அது கடவுளையே படைத்தது.

பளாயை வணங்காமல் விடுபவர்களுக்கோ, நம்ப மறுப்பவருக்கோ நரகம் நிச்சயம்.

பளாயை நம்பாதவர்களுக்கு வாழ்வில் நிறையத் துன்பங்கள் இருக்கும். நோய்கள் வரும். உறவுகளிடையே முரண்பாடுகள் வரும். திருப்தியான தொழில் இருக்காது. தாம்பத்ய உறவில் திருப்தி இருக்காது. குடும்பத்தில் மரணங்கள் நிகழும். வீணான செலவுகள் நிறைய ஏற்படும்.

நீங்கள் பளாயை நம்புகிறீர்களா, இல்லையா?


--


 கடவுளின் இருப்புப் பற்றிய உரையாடல்கள் ஒரு படிமுறையில் நிகழும்.
கட-உள் போன்ற மாற்று விளக்கம் கொடுக்கும் போலி வாதங்களுக்கு அடுத்ததாக இவ்வுரையாடல் வந்தடைய வேண்டிய இடத்துக்குத்தான் வந்தடைந்திருக்கிறது.

தண்டனைக்குப் பயந்து தான் தவறுகள் நிகழாமல் இருக்கின்றன என்பது மேலோட்டமான ஒரு கருத்தாகும்.

உலக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பெரும்பாலான போர்கள் மத அடிப்படையிலும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாலுமே நடத்தப்பட்டுள்ளது. ஹிட்லர் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவர். தாவர உணவாளரும்கூட. சிலுவைப்போர் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தது. அப்போரளவுக்கு வரலாற்றில் இரத்தக்களறி வேறெங்கு ஏற்பட்டுள்ளது?

போர்த்துக்கீசர்கள் தாம் கைப்பற்றிய மூன்றாமுலக நாடுகளில் நடத்திய கொலை வெறியாட்டமே, அவர்களது ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலும் தான் நிகழ்ந்தது.

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்களெல்லாம் ஆழ்ந்த இறைநம்பிக்கையாளர்கள்.

சிறைச்சாலைகளில் போய் கணக்கெடுப்பு நடத்திப்பாருங்கள், எத்தனை பேர் அங்கே நாத்திகர்கள்?

பிள்ளைகளுக்கு மற்றவரை தாமாக நினைக்கும் அன்புள்ளத்தை வளர்க்கவேண்டும். உலகில் அனைவரும் சமான உரிமையுடையவர்கள் என்கிற அகன்ற பார்வையை விதைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சம மரியாதைக்குரிய ஏற்றதாழ்வற்ற ஆளுமைகள் என்ற எண்ணம் உருவாக்கப்படவேண்டும். மற்ற உயிர்களுக்காக கண்ணீர்விடும் மெல்லிய இதயத்தை உருவாக்க வேண்டும். எதையும் கேள்விகள் கேட்காமல் ஆதாரமற்று நம்பக்கூடாது என்ற பகுத்தறிவு பயிற்றுவிக்கப்படவேண்டும்.

கூடவே தவறுகளை நோக்கி மனிதரைத்தள்ளாத அரசியல் பொருளாதார சமூகச்சூழல் மனிதர்களுக்கு உருவாக்கிக்கொடுக்கப்படவேண்டும்.

இவற்றின் மூலம் மட்டும்தான் தவறுகளைத் தடுக்க முடியும்.

இவற்றைக் கடவுளைக்கொண்டு செய்ய முடியாது.


--


இங்கே உரையாடல் மிகவும் நீண்டுகொண்டு போய்விட்டது.

கடவுள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டினை முடிந்தளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்லிவிடுகிறேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. போதிய ஆதாரங்கள் சான்றுகள் இல்லாத ஒன்றினை நான் நம்புவதில்லை. 13 வயதில் அரைகுறையாகவும் 16 வயதில் முழுமையாகவும் அற்றுப்போன போன நம்பிக்கை. பாடசாலையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட சைவ சமயப் பாடப்புத்தகங்களே எனக்குக் கடவுள் நம்பிக்கையை இல்லாமலாக்கின. அந்த ஒரு காரணத்துக்காகவேனும் நான் சமயபாடக் கல்விக்கு நன்றியுடையவனாகிறேன்.

இதுவரை காலமும் வாழ்வில் நான் எத்தனையோ தோல்விகளை, சோதனைகளை, வலிகளைத் தாண்டிவந்திருக்கிறேன். எந்த ஒரு இக்கட்டான இடத்திலும் எனக்குக் கடவுள் நம்பிக்கை திரும்பி வந்ததில்லை. ஏனெனில் வீம்புக்காகவோ விவாதத்துக்காகவோ நான் கடவுளை மறுக்கவில்லை. இத்தனை ஆண்டுகால தேடல், சிந்தனை வாயிலாக புத்திபூர்வமாக, பிரக்ஞை பூர்வமாக நான் கடவுளை மறுக்கிறேன்.

கடவுள் என்கிற எண்ணக்கருவை மனிதர்கள் உருவாக்கி வரலாற்றுப்போக்கில் வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள் என்பதனை எனது தேடல்களின் வாயிலாக நான் அறிகிறேன். இக்கருத்தினை நம்புவதற்கு எனக்குப் போதிய சான்றுகள் உள்ளன.


மற்றவர்களுடைய கடவுள் நம்பிக்கை தொடர்பான எனது நிலைப்பாடு இடத்துக்கிடம் மாறுபடும்.

சிலர் கடவுள் நம்பிக்கையை தமது தனிப்பட்ட தெரிவாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் பற்றிய புரிந்துணர்வினூடாக அவர்களது கடவுள் நம்பிக்கையை நான் எதிர்ப்பதில்லை. ஆனால் எனக்கு அந்நம்பிக்கை இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லிவிடுவதுண்டு.

பின்வரும் விடயங்களைக் காணுமிடத்து நான் அவர்களின் கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பேன்; விமர்சிப்பேன்; எதிர்த்துப் பிரசாரம் செய்வேன்.

1. கடவுள் நம்பிக்கை அவர்களது தன்னம்பிக்கையை சிதைக்கும் இடங்களில்
2. கடவுள் நம்பிக்கை காரணமாக அநீதிகளை நியாயப்படுத்துமிடங்களில்
3. பிரச்சினைகள் ஏற்படும்போது உண்மையான காரணங்களைத் தேடுவதை விட்டுவிட்டு நம்பிக்கை சார்ந்த காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இடங்களில்
4. சாதி, பெண்ணடிமைத்தனம், ரவுடித்தனம், அடக்குமுறை போன்றவற்றை கடவுள், மதம் போன்றவற்றைக் கொண்டு நியாயப்படுத்தும் இடங்களில்
5. கடவுள் அனுப்பியது என்று ஒரு புத்தகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மாற்றங்களை ஏற்காது கற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில்
மேலும் பல...

அவ்வாறிலாமல், கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு எவராலும் கொடுக்கமுடியாத உளவியல் துணையாக, மற்றவருக்குப் பாதிப்பில்லாமல் செயற்படுகிறதென்றால், அந்தக் கடவுள் நம்பிக்கையில் நான் கைவைப்பதில்லை.


கடவுள்-மதம் தொடர்பான கார்ல் மார்க்சின் கருத்து அருமையானது.
அதன் பருமட்டான சுருக்கம் வருமாறு :

அநீதிகளுக்குள்ளும் அடக்குமுறைகளுக்குள்ளும் சுரண்டலுக்குள்ளும் வாழும் மக்களுக்கு மதம் தற்காலிக ஆறுதலைத் தருகிறது. ஆன்மா அற்ற இந்த உலகின் ஆன்மாவாக அது இருக்கிறது. இதயமற்ற இந்த உலகின் இதயமாக அது இருக்கிறது. வெகுமக்களுக்கு மதமானது ஒரு வலி நிவாரணி மருந்து போல் இயங்குகிறது.

உடலினுள் புரையோடிப்போயிருக்கும் நோயினால் ஏற்படும் வலியை வலி நிவாரணி மருந்து தற்காலிகமாகத் தீர்த்து ஆறுதலளிக்கலாம். ஆனால் நோய்க்கான மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் இல்லாமல் வலிக்குக் காரணமான நோயானது நிரந்தரமாக தீர்ந்துவிடாது.

வலி நிவாரணியையே (pain killer) குடித்துக்கொண்டு மனிதர்கள் இருந்தால் நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்க்காமல் விட்டுவிடுவார்கள்.

இது மக்களை அடக்குபவர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
 

No comments:

Post a Comment