Tuesday, January 29, 2013

கலையும் தணிக்கையும்

ஒரு கலைப்படைப்புக்கு தணிக்கை விதிகளே இருக்கக்கூடாது என்கிற பொத்தம்பொதுவான கருத்து அழகான ஒரு கற்பனை தான். ஆனால் நடைமுறை இவ்வழகிய கற்பனையைச் சாத்தியமற்றதாக்குகிறது.

கலைப்படைப்பொன்று பொதுவெளிக்கு மக்கள் பார்வைக்கு வரும்போது அது சமூகத்தோடு வினைபுரிகிறது. எந்தவொரு உற்பத்திப்பொருளையும்போல கலையும் ஓர் உற்பத்திப்பொருளே.



நீங்கள் உணவை உற்பத்தி செய்து நடுரோட்டில் கொண்டுபோய் வைத்தால் காகங்களும் நாய்களும் பிச்சைக்காரர்களும் அதனை உண்பார்கள். நஞ்சை உற்பத்திசெய்து வைத்தால் தற்செயலாகத்தானும் அதை உண்ணும் உயிரினங்கள் இறக்கும். புளூட்டோனியத்தை உற்பத்தி செய்து நடுரோட்டில் வைத்தால் மிகக்கடுமையான விளைவுகள் ஏற்படும்.

கலைப்படைப்பொன்று ஏற்படுத்தும் விளைவுகளைக் கருத்திற்கொண்டு அப்படைப்புக்கு, எந்தவொரு மனித உற்பத்திப்பொருளுக்கும் விதிக்கப்படுவதுபோல முழுமையான, பகுதியான, நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஒரு நடைமுறைத்தேவையாகும்.

"ஒழுங்குபடுத்தலின்" ஊடாகவே சமூக இருப்பு கட்டமைக்கப்படுகிறது. ஒழுங்குபடுத்தலின் தன்மையிலும் அளவிலும் மாறுதல்கள் ஏற்பட்டபடி இருக்கும். ஆனால் "ஒழுக்கம்" இல்லாதுபோக வாய்ப்பில்லை.

(தணிக்கையே வேண்டாம் என்று சொல்வதுகூட ஓர் ஒழுங்குவிதிதான். ஒழுக்கம்தான்.)

ஒழுங்குவிதிகள் யாரால்; எதற்காக; எப்படி உருவாக்கப்படுகிறது என்பது பற்றிய கேள்விகளும் சிக்கல்களும் வேற்ரு பிரச்சினை. அது ஒழுங்குவிதிகளின் தேவை பற்றிய பிரச்சினை அல்ல.

ஏனெனில் ஒழுங்குவிதிகளும் மனித உழைப்பால் உருவாகும் உற்பத்திப்பொருட்களே.

ஒழுங்குவிதிகள் கூடுதல் சனநாயகத் தன்மையோடு இருக்கும்படிப் பார்த்துக்கொள்வதும், சனநாயகம் கூடுதல் சனநாயகத்தன்மையோடு இருக்கும்படிப் பார்த்துக்கொள்வதும் அவசியமான வேலை.

இனவெறி ஊட்டும் கலைப்படைப்புக்கள், சாதிவெறி ஊட்டும் கலைப்படைப்புக்கள் எல்லாம் வெளிவந்திருக்கின்றன. அவற்றால் ஏற்பட்ட விளைவுகளுக்கான ஆதாரங்களையும் வரலாறு வைத்தே இருக்கிறது.


கலைஞர்களையும் கலைப்படைப்புக்களையும் ஏதோ இந்த உலகத்தோடு சம்பந்தமற்ற வானத்திலிருந்து வந்து விழுந்த அதி உன்னதமான விடயங்களாகச் சொல்லித்திரிவதெல்லாம் கலையோடும் கலைஞர்களோடும் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

இது திருமறைகள் தம்மைத்தாமே கடவுளின் வசனம் என்று அறிவிப்பதற்குச் சமமானது.

மனிதர்கள் மூளையாலும் உடலாலும் உழைத்து, ஏற்கனவே உலகில் இருக்கிற பொருட்களையும் சிந்தனைகளையும் பயன்படுத்தி இன்னுமொரு புதிய சிந்தனை வடிவான/பொருள்வடிவான/செயற்பாட்டுவடிவான பொருளொன்றை உற்பத்தி செய்யும் சாதாரண நிகழ்வுதான் கலைப்படைப்பாக்கம்.

கலைப்படைப்புக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை, அதனை எதிர்ப்பவர்கள் தமது படைப்புக்களூடாக மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தி எதிர்கொள்ளவேண்டியதுதானே என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இது, பல்குழல் ஏவுகணையால் அப்பாவி மக்களை இலங்கை இராணுவம் தாக்கினால், வன்னியின் குடிசை வாழ் மக்களும் களி மண்ணால் பல்குழல் ஏவுகணை செய்து திருப்பித் தாக்கவேண்டியதுதானே என்று சொல்வதற்கு ஒப்பானது.

கோடிக்கணக்கான டொலர்களைக்கொட்டி எடுக்கப்படும் இனவெறியூட்டும் ஹொலிவூட் திரைப்படம் ஒன்று விதைக்கும் நச்சு மனநிலையை, பறை ஒன்றைத் தூக்கிக்கொண்டு போய் ரோட்டில் அடித்து மாற்றுக்கருத்தைச் சொல்லி எதிர்கொள்ளவேண்டியதுதானே எனும் வாதத்துக்கு ஒப்பானது.

அதிகாரம், பலம் போன்றவற்றின் சமமற்ற நிலையைக் கருத்திலெடுக்காமல் கூறப்படும் இத்தகைய கருத்துக்கள் சனநாயகத்தின் அடிப்படைகளுக்கே எதிராவை.

--

/ இணைய உலகத்தில் கலைப்படைப்புகளுக்கு வேலி போட முடியாது. கலைப்படைப்புகளைத் தடை செய்யும் எண்ணமே பிற்போக்குத் தனமானது./

மணி மு. மணிவண்ணன்

இணையத்தில் நான் child pornography படைப்புக்களை பகிர்ந்தால் அடுத்த நிமிடமே என்னை கைது பண்ண காவல்துறை வரமுடியும்.

நவநாசிக்களையோ ஹிட்லரையோ ஆதரித்து ஒரு facebook page என்னால் ஆரம்பிக்க முடியாது.

போதைப்பொருட்களை விற்கும் இடங்கள் எவை என்பது பற்றியோ, தலைமறைவு ஆயுத விற்பனைக்குழுக்கள் பற்றியோ கலந்துரையாடுவதற்கு ஓர் இணைய உரையாடல் மன்றத்தினைத் திறந்த நிலையில் தொடங்கிப் பராமரிக்க முடியாது.

பிறகு எங்கே இருக்கிறது இணையத்தில் கருத்து/படைப்பு சுதந்திரம்?


--

@மணிவண்ணன் கூறிய கலிலியோ எடுத்துக்காட்டு இந்த விவகாரத்தின் இன்னுமொரு பக்கம். தணிக்கையின் மோசமான பக்கவிளைவு.

Child Porn இனையும் நவநாசி ஆதரவுFB Pages ஐயைம் தடுக்கின்ற நியாயமும் கலிலியோவுக்கு நிகழ்ந்த அநியாயமுமான இரண்டு முரண்கள் இங்கே எதிரெதிரே மோதிக்கொள்கின்றன.

இந்த மோதலில் தான் இங்கே உரையாடலே இயங்கப்போகிறது.

இந்த மோதலை எதிர்பார்த்தும் வரவேற்றுமே இந்தக் கருத்தினைப் பகிர்ந்தேன்.

No comments:

Post a Comment