தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றினை இலங்கையில் ஏற்படுத்த, அல்லது இலங்கை அரசினை அச்சுறுத்தித் தமது திட்டங்களை இலங்கையில் நடத்திச்செல்ல இந்தப் போர்க்குற்ற விவகாரத்தை வல்லரசுகள் கையிலெடுக்கின்றன.
இலங்கையின் அரசபடைகள் நடத்திய படுகொலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்துவந்த அதே வல்லரசுகள் தாம் இன்று போர்க்குற்றம் என்ற பகடைக்காயைத் தூக்கிக்கொண்டு ஐநாவில் விளையாடுகின்றன.
இந்தப் போர்க்குற்ற விவகாரமும் அதில் வல்லரசுகளின் அக்கறையும் ஈழத்தமிழர் தொடர்பான ஒரு விடயம் என்று எவரேனும் நம்பினால் அவர்களையிட்டுக் கவலை கொள்ளவே முடியும்.
இந்தப் போர்க்குற்ற அரசியலுக்கும் ஈழத்தமிழருக்கான நீதிக்கும் எந்த விதமான சம்பந்தமுமே இல்லை.
ஜெனீவாவில் இலங்கை அரசினை எதிர்க்கும் நாடுகளும் ஆதரிக்கும் நாடுகளும் தமக்குள் முரண்பட்டுக்கொள்வது தம்முடைய அரசியல் நலன்களுக்காகவே. இரு தரப்பினதும் அரசியல் நலன் இலங்கை மக்களது நலனுக்கு எதிரானதே. இலங்கையை எவர் எவ்வாறு பங்குபோட்டுக்கொள்வது என்பது பற்றிய பங்காளிச்சண்டைதான் ஜெனீவாவில் நடக்கிறது.
ஜெனீவாவில் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்று பலரும் அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.
இதுவரை பாலஸ்தீனம் தொடர்பாக ஆயிரக்கணக்கான தீர்மானங்களைக் கொண்டுவந்த ஜெனீவா அது.
--
இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பாதுகாப்பாகவும் சம அதிகாரத்துடனும் நல்லபடியும் வாழ்வதற்குத் தேவையான அரசியல் தீர்வானது வேறு விதமாகக் கொண்டுவரப்படவேண்டியது. இதனை வெளியிலிருந்து ஒரு வல்லரசு கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும் என்று நம்பிக்கொண்டிருந்தால் தமிழர்கள் தமது போராட்ட வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும்.
--
ஜெனீவா விவகாரம் ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் மத்தியிலான செல்வாக்கினை உயர்த்த எவ்வாறு பயன்படுகிறது என்பதை இலங்கையில் இருக்கும் ஒருவரால் எளிதாகவே கண்டுகொள்ள முடியும்.
ஏனெனில் இலங்கை அரசியல் தொடர்பிலான சிங்கள வெகுமக்களது அபிப்பிராயத்தினை ஆளும் வர்க்கங்கள் தமக்குச் சாதகமானபடி மாற்றி வைத்திருக்கின்றன. தமது பிள்ளைகளும் பணியாற்றும் இலங்கைப்படை போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டாது என அப்பாவிச் சிங்களமக்கள் மானசீகமாக நம்புகிறார்கள். இந்தியப்படை காஷ்மீரிலும் இலங்கையிலும் அஸ்ஸாமிலும் நடத்தும் போர்க்குற்றங்களை இந்திய மக்கள் நம்ப மறுப்பதோடு இதனை ஒப்பிடலாம்.
ஜெனீவா விவகாரமெல்லாம் இந்த உலகிலும் இப்பிராந்தியத்திலும் மிக மிகச்சிறுபான்மையாக இருக்கும் சிங்கள இனத்தினை அழிப்பதற்கான பிராந்தியப்பெரும்பான்மையான தமிழர்களோடு இணைந்து மேற்குலகம் செய்யும் சதி என்று அவர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மனநிலை, ஜெனீவா பிரச்சினை வரும்போதெல்லாம் மகிந்த ராஜபக்சவை பெரும் வீர நாயகனாக மாற்றுகிறது.
--
இலங்கையில் பிற வல்லரசுகளின் தலையீட்டுக்கும் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் இலங்கை அரசின் இராணுவச் சர்வாதிகார ஊழல் ஆட்சிக்கும் எதிராக ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் ஏனைய ஒடுக்கப்படும் மக்களும் இணைந்து போராடினால் மட்டும்தான் நல்ல எதிர்காலத்துக்கான அரசியற் தீர்வொன்றினைப்பெறமுடியும். ஆனால் இது நிதானமான நீண்ட போராட்டம். அதிரடிச் சாகசங்களை இப்போராட்டத்தில் நிகழ்த்த முடியாது.
முதலில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களனைவரையும் நான்கு தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கலான பொதுக் கோரிக்கை ஒன்றின் கீழ் திரட்டும் போராட்டம் தொடங்கப்படவேண்டும். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையைத் தமிழர்கள் விரும்பாத, தமிழரது அவ்வுரிமையைச் சிங்களவர்கள் விரும்பாத இன்றைய சூழலில் இப்போராட்டமே மிகக்கடுமையானதுதான்.
No comments:
Post a Comment