கூட்டு அமைப்பொன்று எப்போது சக்தி வாய்ந்ததாக இருக்குமென்றால், அதன் உறுப்பினர்களிடையே சமமான பலம்/அதிகாரம் இருக்கும் நிலையில் மட்டுமேயாகும்.
உலகம் முழுக்கக் கொள்ளையடித்துத் தாம் மட்டும் வாழ நினைக்கும் கார்ப்பரேட்டுக்களின் கையாளான சில நாடுகள் மட்டுமே பலத்துடன் இருக்கும் நிலையில் அவ்வமைப்பு சக்தி வாய்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை.
உலகம் இரு துருவமாக இருந்த காலத்தில் கார்ப்பரேட்டுக்களின் கையாள் நாடுகளை அதட்டிப் பணியவைக்கும் அதிகாரம் கொண்ட எதிரணி நாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் அவ்வெதிரணிக்குத் தலைமை தாங்கியது. அதனாற்தான் மக்கள் சீனத்துக்கெல்லாம் பாதுகாப்புச்சபையில் இடம் கிடைத்தது. ஐ. நா உருவான காலத்தில், இரண்டாம் உலகப்போரை முடித்துவைத்து ஜேர்மனியை மண்டியிட வைத்த இரும்பு மனிதராக ஸ்டாலின் நின்றார். அப்போது அவரை எதிர்த்து நிற்க மேற்குலகம் துணியவில்லை.
அக்காலத்தில் சோவியத்தும் சீனமும் மக்கள் சார்பாக நடந்துகொண்டன. அதனால்தான் ஐ. நா சாதாரண பொதுமக்களுக்கான அக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றது.
பிற்பட்ட காலங்களில் சோவியத் யூனியன் வெறும் கார்ப்பரேட் ரஷ்யாவாக மாறிப்போனது. மக்கள் சீனம் சர்வாதிகார முதலாளித்துவச்சீனமாக மாறிவிட்டது.
அதன்பிறகுதான் யுனெஸ்கோ போன்ற ஐ. நாவின் மக்கள்சார்பான ஆக்கபூர்வமனா வேலைத்திட்டங்கள் எல்லாம் கைகழுவி விடப்பட்டது.
மேற்குலகம் அடாத்தாக நடத்தும் படையெடுப்புக்களை ஆதரித்துக் கையெழுத்துப்போடும் கடமையை மட்டும் செய்யும் ஒரு வாழைப்பழ அமைப்பாக ஐ. நா மாறிப்போனது.
இப்போது ஐ. நா வின் மனித உரிமைக் கவுன்சில், அமெரிக்காவுக்கும் மேற்குலத்துக்கும் எவரையெல்லாம் அதட்டிப் பணிய வைக்கவேண்டுமோ அவரையெல்லாம் அச்சுறுத்தும் ஒரு ரவுடி என்ற நிலையை அடைந்திருக்கிறது.
இலங்கையின் போர்க்குற்றங்களைத்தான் விடுங்கள், அதெல்லாம் கால் தூசாக ஆகக்கூடிய, உலகமே சாட்சியாக நிற்கும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் பற்றி இதனை ஆண்டுகாலத்திற்கு ஐ. நா வால் எதித்தான் செய்ய முடிந்தது? ருவாண்டாவில் ஒரே நாளில் லட்சக்கணக்கான டுட்சீக்கள் கொல்லப்பட்டபோது ஐ. நா வின் இராணுவம் ஆயுதங்களோடு அங்கிருந்து வேடிக்கை பார்த்தது.
ஐ. நாவின் செயலாளருக்கென்று ஒரு மண்ணாங்கட்டி அதிகாரமும் கிடையாது. அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு வேறு இன முகங்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் பின்னிருந்து இயக்குவதெல்லாம் கார்ப்பரேட்டுக்களின் கையாள் நாடுகள்தான்.
வியட்நாம் போருக்கெதிராக உலக மக்களின் மனசாட்சி தட்டியெழுப்பப்பட்ட பின்னர்தான் அமெரிக்கா வியட்நாமில் தான் செய்துகொண்டிருந்த போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் நிறுத்தவேண்டி வந்தது.
வியட்நாம் போருக்கெதிராக அமெரிக்க மக்களே வீதிகளுக்கு இறங்கினார்கள்.
அப்படி உலகம் பூராகவும் , இலங்கை உட்பட வல்லாசுகளின் ஆசீர்வாதங்களோடு நடக்கும் போர்க்குற்றங்களுக்கும் படுகொலைகளுக்கும் எதிராக உலக மக்களின் மனசாட்சி தட்டியெழுப்பப்படவேண்டும்.
இதனை, அடக்கியொடுக்கப்படும் பாலஸ்தீனியரும், தமிழரும், குர்தியரும், ஆப்கானிஸ்தானியரும், காஷ்மீரிகளும், ஆபிரிக்கரும் எல்லோரும் இணைந்து ஒன்றுபட்டுத்தான் செய்ய முடியும்.
இந்த ஒன்றுபடல் என்பது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட்ட அனைத்து வல்லரசுகளுக்கும் எதிரானதாக மட்டுமே அமைய முடியும்.
ஆனால் எமது அரசியல் அமைப்புக்கள், ஒபாமாவுக்கான தமிழர், எலிசபெத்துக்கான தமிழர் என்று வல்லரசுகளின் பக்கம் சாய்ந்துநின்று, வல்லரசுகளின் காலை நக்கி எதையாவது சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது ஒடுக்கப்படும் மக்களிடையே தமிழர் பற்றிய தவறான கண்ணோட்டத்தையே தோற்றுவிக்கும்
இப்படி எதிர்த்திசையில் பயணித்தால் உலகின் மனசாட்சியை நாமெல்லாம் எப்போது தட்டியெழுப்புவது?
No comments:
Post a Comment