Tuesday, March 5, 2013

ஓசோன் ஓட்டையும் மார்க்சிசத்தின் ஓட்டையும்

புருஷோத்மனுக்கும் எனக்கும் FB இல் நடந்த உரையாடல் ஒன்று


Vivek Purushoth :

இல்லை மார்க்ஸ் ஒன்றும் கடவுள் இல்லையே. கடவுளாய் இருந்தாலும் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அவர் காலத்தில் இருத்ததை விட இப்போது பிரச்சனைகள் பல்கிப் பெருகி விட்டன. அவர் காலத்தில் இருந்த பிரச்சனைகள் இப்போது ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது தளத்தில் இருக்கும் பிரச்சனைகள் அவர் காலத்தில் பேசப்படவில்லை. உதாரணம் லெஸ்பியன்,அரவாணிகள்... பற்றிய பிரச்சனைகள்.

மேலும் அவர் ஆசியாவில் காணப்பட்ட ஜாதி(தொழில்) முறை பற்றி விரிவாக ஏதும் சொல்லவில்லை. அவருடைய இலக்கில் தொண்ணூறு வீதமானது முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்பதாகவே அமைந்தது.இவ்வாறு சில குறைபாடுகள் உள்ளன. இது அவர் மேல் உள்ள பிழை அல்ல. சர்வதேச ஊடகங்களும், தொலைபேசி வசதிகளும் இல்லாமை அவர் இது பற்றி அறிய முடியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.(அவர் காலத்தில் அம்பேத்கரும் இல்லை)

அவர்(karl marx) மேல் தனி மனித விமர்சனம் என்று பார்க்கும் போது அவர் காதலியும் உற்ற நண்பியுமான 'ஹெலன் டெமூத்' பற்றி வெளி உலகிற்கு சொல்லாமல் மூடி மறைத்தமை பற்றி எனக்கு அவர் மேல் கடுமையான விமர்சனம் உண்டு.ஹெலன் டெமூத் இறந்த பின்னர்தான் மார்க்ஸின் காதலி என்று அங்கீகாரம் கிடைத்தது. மற்றப் படி 1800 களின் சிறந்த சமூக விஞ்ஞானி அவர் என்பதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.


--
மு. மயூரன் :


மார்க்ஸ் ஒரேபாற் காமம் பற்றியும் சமப்பாலுறவாளர் உரிமைகள் பற்றியும் பேசியிருக்கிறாரா? இல்லை. இன்னும் கொஞ்சம் போய் ஒருகடிதத்தில் ஓரிடத்தில் சிறு நக்கல் வேறு போட்டிருக்கிறார்.

மார்க்ஸ் கட்டற்ற மென்பொருள் பற்றியும் லினக்ஸ் பற்றியும் குரல் கொடுத்திருக்கிறாரா? இல்லை.

மார்க்ஸ் மரபணுமாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களின் புழக்கம் பற்றிக் கண்டித்திருக்கிறாரா? இல்லை.

ஓசோன் படலத்தில் அவர்காலத்திலேயே விழத்தொடங்கிய ஓட்டையை அடைக்க ஏதாவது செய்து கிழித்திருக்கிறாரா? இல்லை.

ஏன் மார்க்ஸ் என்கிற பொது அரசியல் வெளியின் ஆளுமை தான் சுய இன்பம் செய்தது பற்றியும் குசுவிட்டது பற்றியும் வெளி உலகத்துக்குச் சொல்லாமல் மறைத்தார்?

ஜென்னிக்கு உடலுறவு வேளைகளில் மிகுந்த அசவுகரிகத்தை ஏற்படுத்தும் என்று சிறிதும் யோசிக்காமல் அவ்வளவு பெரிய தாடியையும் மீசையையும் வைத்திருந்த ஆணாத்திக்கப் பன்றியல்லவா மார்க்ஸ்? (நான் முகத்தை மளமள என்று மழித்துவைத்தபடிதான் இதனை எழுதுகிறேன்)

தொழிலாளிகளைச் சுரண்டும் ஓர் ஏற்பாடான சாராயக்கடைகளை எதிர்த்து ஒழிக்காமல் அக்கடைகளில் பட்டை அடித்து மட்டையாகிப்போயல்லவா கிடந்தார்கள் கார்ல் மார்க்சும் ஏங்கல்சும்..

இப்படி பல்லாயிரக்கணக்கான போதாமைகள் மார்க்சிசத்தில் இருக்கின்றன.

இதையெல்லாம் கேட்டால் நம்பளை உளவாளியாக்கிருராய்ங்க

:P


இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால், மார்க்ஸ் இதெல்லாம் சொல்லவில்லை, இபப்டியெல்லாம் நடக்கவில்லை, ஹெலன் டெமூத் விவகாரம் பிழை என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் மார்க்சிடம் ஏதோ "முழுமையை", "புனிதத்தன்மையை", "கடவுட் பூரணத்தை" எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி எதிர்பார்ப்பதுதான் "மத மனநிலை" என்று நான் கருதுகிறேன்.

மார்க்ஸ் என்கிற மாபெரும் ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான ஒருவர், அவாது வாழ்நாளினுள் இந்த உலகத்துக்கு விட்டுச்சென்ற அறிவு என்ன, அவர் செய்த வேலைகள் என்ன என்பவற்றை எடுத்துக்கொண்டு அவற்றைக் காலப்பொருத்தம் கருதிப் பயன்படுத்திக்கொண்டு செல்லாமல், அவர் எவற்றையெல்லாம் கூறாமல் விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டுவது அவரைக் கடவுளாக்கும் செயலாகும்.


ஓசோன் ஓட்டையைப்பற்றி மார்க்ஸ் பேசாமல் விட்டது மார்க்சியத்தின் போதாமை என்று சொல்பவர்களுக்கும், ஓசோன் ஓட்டை பற்றி அப்போதே அல் குர் ஆனில் அல்லா இறக்கி வைத்துவிட்டார் அதனால் இஸ்லாம் போதாமைகள் அற்றது என்று சொல்லும் ஒன்லைன் பீ ஜே யின் கட்டுரைக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குப்படவில்லை.


--


Vivek Purushoth :

இல்லை மார்க்ஸ் இதை வெளியில் சொல்லாமல் விட்டது பற்றித்தான் என் கோபம். இருவர் மனம் ஒத்த உறவில் பிழை சொல்ல நான் ஒண்டும் சமய அதிகாரம் கட்டமைத்த புனிதத்தை காக்கும் மார்க்சிஸ்ட் அல்ல.


--

மு. மயூரன் :

அதை அந்தாள் ஏனப்பா மூலதனம் புத்தகத்தில/ அல்லது அவரது பொருளியல் அரசியல் கடுரைகளில எழுதோணும்?
தன்ட ஃபிரென்ட்சுக்கு சொல்லியிருப்பாராக்கும்.. தண்ணியடிக்கக்குள்ள..


மார்க்ஸ் எதிர்வுகூறியிருக்காத புதிய உலக வளர்ச்சி நிலைகள், பொருளாராத மாற்றங்கள் பற்றியும், வளர்ந்து வரும் அறிவு புதிதாகக் கண்டுபிடித்த விடயங்கள் தோற்றுவித்துள்ள புதிய கேள்விகள் பற்றியும் ஒரு சமூக பொருளாதார அறிவியலாளர் கட்டாயம் தேட வேண்டும்.

அப்படித் தேடுவதற்கான ஒரு விளக்கைத்தான் மார்க்ஸ் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். தேவைப்பட்டால் அதற்கு மேலதிகமாக இன்னொரு விளக்கையும் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

இதுதான் இயங்கியல் வளர்ச்சி, வரலாற்று வளர்ச்சி, அறிவியலின் விரிந்து செல்லும் பாங்கு பற்றியெல்லாம் மார்க்ஸ் எமக்குப் போதிக்க விரும்பிய பார்வைகள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மேதினக்கூட்டத்தில் மார்க்ஸ் எதிர்வு கூறியிராத புதிய உலக நிலைமைகள் பற்றி தோழர் தம்பையா அருமையான உரை ஒன்றினை ஆற்றியிருந்தார்.

இந்தவிடயம் குறித்து சமூக விஞ்ஞான வட்டக் கூட்டமொன்றில் சிவசேகரமும் விரிவாகப் பேசியிருந்தார்.

புலம் பெயரும் தொழிலாளர்கள் பற்றிய கேள்வி எல்லாம் அதனுள் எவ்வாறு அடங்குகிறது என்று அவர்கள் விளக்கியது நன்றாக இருந்தது.

மார்க்சிசத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இதுவெல்லாம் மார்க்சிசத்தின் "போதாமையாகப்" படுவதில்லை.

தெருவோரம் நின்று ஒவ்வொருவரதும் படுக்கையறையில் என்ன நடக்கிறதென்றும், எவன் எவள் எவள் எவனை வைத்திருக்கிறான்/ள் என்று தம்முள் குழீஇ மகிழ்பவர்களுக்குத்தான் ஜென்னியின் கதை கிளுகிளுப்பூட்டக்கூடும். அது மார்க்சிசத்தின் போதாமையாகவும் தெரிந்திருக்கக்கூடும்.


No comments:

Post a Comment