Tuesday, January 29, 2013

உன்னைப்போலொருவனும் விசுவரூபமும்

"உன்னைப்போல் ஒருவ"னில் நீ என்னை அவமானப்படுத்தினாய். ஒடுக்குமுறைக்குள்ளாகும் எனது/எமது நியாயங்களைக் கேவலப்படுத்தியும் திரித்தும் படமெடுத்தாய். என்னை/எம்மை ஒடுக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் வாலைப்பிடித்துக்கொண்டு அதனைப் போற்றித்துதித்தாய். அந்த அதிகார வர்க்கத்தின் எடுபிடி ஊடகங்கள் உன்னை தூக்கி வைத்துக் கொண்டாடின.
அப்போது உன்னைத் தண்டிக்கவும் திருப்பி அடிக்கவும் என்னிடம் எழுத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

இப்போது நீ தண்டிக்கப்படும்போது உனது நியாயங்கள் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் உனக்கு என்னால் தரமுடியாமற்போன தண்டனையும், நீ என்னைக் கேவலப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. அதனால் என்னால் "நடுநிலையாக" சிந்திக்க முடியாது. நீ தண்டிக்கப்படுவதாய் எண்ணுகையில் நான் மகிழ்கிறேன்.

இந்திய அதிகாரவர்க்கத்துக்கு எதிரானவர்களை விசாரணை இன்றிக் கரப்பான் பூச்சியைப்போல நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றாய். இப்போது படத்தைப் பார்க்காமலே உன்னை அடித்து நொறுக்கும் "நியாயத்தை" நான் எதிர்க்காமலிருக்கவேண்டியதாகிறது.

இந்த எதிர்ப்பும் ஒரு நாடகமாக இருக்கலாம் என்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் உணர்ந்தவனாக, உன்னை ஆதரிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி ரசிகர்களுக்காக இதனை நான் சொல்லவேண்டியவனாகிறேன்.


--

Muralitharan Mauran

@Kapilan Thaventhiran உன்னைப்போல் ஒருவனில், நளினி முருகன் பேரறிவாளன் போன்றோரை எந்த விசாரணையும் இன்றிச் சுடுக்கொல்லவேண்டும் என்றும், அவர்களெல்லாம் கரப்பான் பூச்சிகளுக்குச் சமமானவர்கள் என்றும் சொல்லும் திமிரை எதிர்ப்பதற்கு இடதுசாரியாக இருக்கவேண்டியதில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஓர் ஈழத் தமிழனாக இருந்தாலே போதுமானது.

--

விஷயங்களை நேரடியாகச் சொல்லி ஈசியாகப் பிடிபடுவதற்கு கமல் ஒன்றும் விஜயகாந்த் இல்லை.

புத்திசாலியின் நயவஞ்சகம் தான் மிகவும் தீங்கானது. விஜயகாந்த் சொல்லியிருந்தால் இங்கே எல்லோரும் என்னை ஆமோதித்திருப்பார்கள்.

ஸ்ரீ பெரும்புதூர் என்று கமல் சொல்கிறார் இல்லையா? அந்த ஊரில் என்ன நடந்தது என்று தெரியுமா?

--

இந்தியா ஒரு "அமைதிப்பூங்காவாக" இருக்கமுடியாமல் ஆங்காங்கே குண்டு வெடித்தும் சத்தம் போட்டும் சிலர் குழப்புகிறார்கள். அவர்கள் வேறு யாருமல்லர், சைக்கோக்களாகவும் வேற்றுக் கிரகங்கள்/நாடுகளிலிருந்து வந்து இறங்கியவர்களாகவும் இருக்கும் "தீவிரவாதிகள்".

இந்திய "அமைதியை" இரவுபகலாக நித்திரை முழித்துக் காத்துவரும் இந்திய இராணுவமும் காவல் துறையும் உயிரைக்கொடுத்து இந்த so called தீவிரவாதிகளைப் பிடித்து அடைக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளாலும் வேறுபல "ஊழல்"களாலும் அந்தத்தீவிரவாதிகள் எப்படியோ வெளியில் வந்து விடுகிறார்கள்.

அதனால் சும்மா விசாரணை, சிறை, நீதிமன்றம் என்று இழுத்தடிக்காமல் தீவிரவாதிகளை கண்ட இடத்தில் கரப்பான் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிக் கொன்று விடவேண்டும். கரப்பான் பூச்சியை வீட்டில் வைத்து விசாரணை நடத்தி அழகுபார்ப்போமா என்ன?

இதுதான் உன்னைப்போல் ஒருவனின் கதை. அது சொல்லவரும் நீதி.

தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாத, அரசியல் பற்றி "No comments" மனநிலையில் உள்ள மத்தியதர வர்க்கத்தின் மனங்களில் உறையும் நீதிப்பூங்காவும் இதுதான்.

இலங்கையில் அரசியல் சிந்தனையற்ற சாதாரண சிங்கள மக்களிடம் போய் "கோட்டாபய" சொல்லும் நீதியும் இதுதான்.


கமல்காசன் இந்த "இந்திய" நலன்காக்கப் படம் எடுக்கும் ஆள்தான்.

இந்திய அதிகாரவர்க்கம் "தீவிரவாதிகள்" என்று சுட்டிக்காட்டும் கரப்பான் பூச்சிகள் எந்தக் குப்பைமேட்டிலிருந்து உருவாகின்றன? அதைப்பற்றிப் படங்கள் வந்திருக்கின்றனவா?

அதைப்பற்றி எடுக்க முயன்ற படங்களை தணிக்கைக்குழு குதறிக் குத்தி வெளியிடுகிறது அல்லது தடை செய்து விடுகிறது.

முரளி நடித்து வெளியான "இரணியன்" படம் பார்த்திருப்பீர்கள். அப்படத்திற்கு இடப்பட்ட தலைப்பு "வாட்டக்குடி இரணியன்" . அத்தலைப்புக்கு முதலில் அனுமதி மறுத்தது தணிக்கைக்குழு. அதன்பிறகு காட்சிகளை எல்லாம் முடிந்தவரை மற்றச்சொன்னது. கடைசியில் தேவாபாடும் அந்த முதல் பாடலின் வரிகளை மாற்றினார்கள்.

"காற்றுக்கென்ன வேலி" படத்துக்கு என்ன நடந்தது?

இப்படி நூற்றுக்கணக்கான படங்கள் இந்தியாவில் முழுமையாகவும் பகுதியாகவும் தடை செய்யப்பட்டுள்ளன

அப்போதெல்லாம் ஏன் "கருத்துச்சுதந்திரத்திற்காக" இந்தக் கமல்காசன் வீதிக்கு இறங்கவில்லை?

No comments:

Post a Comment