Tuesday, September 3, 2013

தலித்திய சீசன் - தொகுப்பு 1

சாதி ஒடுக்குமுறை என்பது மனுதர்ம சாத்திரத்தோடு தான் தொடங்கியது என்றும் மனுதர்ம சாத்திரமே சாதி ஒடுக்குமுறைக்கும் வர்ணப்பிரிவுகளுக்கும் வித்திட்டதென்றும் நம்பச்சொல்லி ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறார்களோ தெரியவில்லை.

தொல்காப்பியர்தான் தமிழைக் கண்டுபிடித்தார் என்று சொல்வதற்கு ஒப்பான அறிவியல்முறையற்ற நம்பிக்கை இது.

மனுதர்மத்தின் கைகள் எட்டியிருந்திருக்க முடியாத ஆபிரிக்காவில் இருக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் சாதியத்துக்கும் கூட மனுதர்மமேதான் வித்திட்டதா?

ஒரு நூல் குறுகிய காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்த சமூக அடுக்குகளையும் நிறுவி ஏற்றதாழ்வுகளை உண்டாக்கிக் கட்டிக்காத்து நிர்வகித்தது என்று நம்புவது கடவுள் ஏழு நாளில் உலகைப்படைத்தார் என்று நம்புவது போன்ற சிறுபிள்ளைத்தனமாகும்.

சாதியத்தையும் வருணாச்சிரமத்தையும் மனுவில் தொடங்குவதென்பது அச்சமூக ஏற்றதாழ்வுகளின் வரலாற்று இயங்கியல் வளர்ச்சியையும் அடிப்படைகளையும் மறைக்கும் அரசியல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

வளங்களுக்கான ஆக்கிரமிப்புப் போர்கள், ஆட்சி அதிகாரம், அதிகாரப் படிநிலையாக்கம், அதிகாரமும் மதங்களும் செய்துகொள்ளும் வழக்கமான சமரசம், போரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து எழும் தொழிற்பிரிவினைகளும் வர்க்கப்பிரிவினைகளும், மரபான தொழிற்குழுக்கள், குடும்பங்கள் என்று பல்பரிமாணமுள்ள நீண்ட வரலாற்று வளர்ச்சியினூடாகவே சாதியமும் வர்ணாச்சிரமமும் நிலைபெற்றிருக்க முடியும்.

மனுதர்ம சாத்திரத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதெல்லாம் அந்நூலின் காலத்தில் இந்த சமூக அமைப்பு எப்படி இருந்தது, எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பன போன்ற தகவல்களையே.

சாதி-வர்ண அரசியலை முற்றுமுழுதாக "வர்க்க நீக்கம்" செய்கிற அடையாள அரசியலின் அரசியலுக்கு ஆரியதிராவிடக் கதைகளும் மனுதர்மத்தில் சாதியைத்தொடங்கும் படைப்புக் கோட்பாடும் அவசியப்படுகிறது என்று தான் நினைக்கிறேன்.

--


@ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

நீங்கள் குறிப்பிட்ட எல்லா விதத்திலும் நடந்திருக்க வாய்ப்புண்டு.

சக்கிலியர் என்றறியப்படும் சுத்திகரிப்புத் தொழில் விதிக்கப்பட்ட சாதி போரினால் உருவான சாதி என்பதற்கான ஆதாரங்களைப் படித்திருக்கிறேன்.

இலங்கையில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட சிங்கள ஆதிக்க சாதியான "கொவிகம்" சாதியினரே யாழ்ப்பாணத்தில் வேளாளரின் வீட்டுக்குள் சென்றுவரக்கூடிய சாதியான "கோவியர்" என்கிற சாதியாக மாறினர் என்றோர் ஆய்வு கூறுகிறது.

வர்ணாச்சிரமம் என்பது மேற்கின் ஆண்டான் அடிமை முறையோடு ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

ஆயுத வன்முறையினூடாக மட்டுமே சூத்திரர் என்ற வர்ணத்தை உருவாக்கியிருக்க முடியும். பரம்பரை பரம்பரையாக ஏவலாளர்களாக இருக்க எவரும் தாமாக முன்வந்து உடன்பட்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

ஆக்க்ரமிக்கப்பட்ட பகுதிகளின் அதிகாரமற்ற உழைக்கும் வர்க்கம் ஆக்கிரமிப்புக்குப் பின் பலவந்தமாக ஏவலாளர்களாகவும் முன்னே செல்லும் தூசிப்படையாகவும் மாற்றப்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட வல்லரசுகள் இவ்வாறான சூத்திர வர்ணத்தை இதே வழிமுறையில் உருவாக்கியிருந்தன.

மக்கள் கூட்டமொன்று வன்முறைமூலம் கடுமையான உடலுழைப்புச் சார்ந்த தொழில்களுக்குக் கட்டாயப்படுத்தப்படும்போது அம்மக்கள் கூட்டத்தின் புதிய தலைமுறை ஒன்று அக்கட்டாயத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு வேறு தொழில் தேடிப் பிழைத்துக்கொள்ளும் நிலை முதலாளியப் புரட்சிக்கு முந்தைய சமுதாயங்களில் இருக்கவில்லை. தமது உழைப்புச் சக்தியை எவருக்கு விற்பதெனத் தீர்மானிக்கும் வசதி சிறிதளவிற்கூட அக்காலத்து உழைக்கும் வர்க்கங்களுக்குக் கிடைக்கவில்லை.

--

சாதியப் படிநிலைக்கும் பொருளாதார அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைக்குமிடையில் சம்பந்தமில்லை என்று பலர் வாதிட முயல்கிறார்கள்.

ஒரு கூட்டம் மனிதர்களது உழைப்புச் சக்தியை இலவசமாகவோ அநியாயக் கூலிக்கோ பெற்று, அவ்வுழைப்புச் சக்தியைக் கொண்டு உருவாகும் சொகுசையும் செல்வத்தையும் இன்னொரு மனிதர் கூட்டம் அனுபவிப்பது தான் வர்க்கச் சமுதாயம். இதுவே வர்க்க வேறுபாடுமாகும்.

சாதி முறைமையில் நிகழும் ஒடுக்குமுறைகள் இந்த வர்க்க ஒடுக்குமுறையை ஒத்திருப்பதை அவதானிக்கலாம். ஒரே மாதிரியான வர்க்க நிலையை உடைய சாதிகளிடையே ஏற்றதாழ்வும் அக மணமுறையும் உள்ளது. ஆனால், ஒடுக்குமுறைகளின் பின்னால் வர்க்கச் சுரண்டலே பெரும்பாலும் இருக்கிறது.

சாதி ஒடுக்குமுறைகளின் பின்னால் வர்க்க வேறுபாடு இயங்குவதைப் பலர் திட்டமிட்டே மறைக்க முயல்கிறார்கள்.

இலங்கையிலும் இந்தியாவிலும் சாதி ஒடுக்குறைகளுக்குக்கெதிராகவும் சாதி ஒழிப்புக்கும் போராடிய இடதுசாரிகள் சாதியொழிப்புப் போராட்டம் பற்றிய வரட்டுத்தனமான கண்ணோட்டத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்று இன்று புதியதொரு தலைமுறைக்கு ஆய்வாளர்கள் என்ற பெயரில் பாடமெடுக்கிறார்கள். இப்படிச் சொல்லுவது ஒரு Fashion ஆகிவிட்டது.

வர்க்கப்போராட்டத்தினை நடத்தினாற்போதும் சாதி தானாக ஒழிந்துவிடும் என்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சாதி ஒழிப்புக்காகப்போராடிய கம்யூனிஸ்ட் இயக்கங்களும் சொன்னதே இல்லை. அவ்வாறு சொன்னாற்தான் அது வரட்டுவாதம்.

வர்க்கப்போராட்டத்தின் முன் நிபந்தனையாக உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடும் சாதியம் எதிர்கொள்ளப்பட்டு ஒழிக்கப்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தினையே கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்டிருந்தன. இது சீனாவோ சோவியத் யூனியனோ இங்குள்ள கட்சிகள் மேல் திணித்த கருத்தியல் அல்ல. இங்குள்ள நிலவரங்களைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட தந்திரோபாயம்.

விடுமுறையில் ஊருக்குவந்து ஆளையாள் சந்தித்து இலங்கையில் சாதிச்சங்கத்தினைக் கட்டமுயலும் புத்திசீவிகளுக்கு இலங்கையின் சாத்யொழிப்புப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுக்களின் பங்கினை இருட்டடிப்புச் செய்து கேவலப்படுத்த வேண்டிய தேவை நிறையவே உண்டு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

என்னசெய்வது, கம்யூனிசத்தை வைத்துத் தொழிற்சங்கம்தான் கட்டமுடியும் சாதிச்சங்கம் கட்ட முடியாதே...

No comments:

Post a Comment