Tuesday, October 29, 2013

கம்யூனிஸ்டுக்களும் சமப்பாலுறவும்

Ndpfront தனது வலைத்தளத்தில் இந்தக் கதையைப் பிரசுரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கேல் ஜாக்சனின் இறப்பின் பின் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் சமப்பால் உறவு என்பது பாலியல் வக்கிரம் என இரயாகரன் குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாழ அதே காலப்பகுதியில் சமூகப் பெறுமதி ஏதும் இல்லாததால் சமப்பாலுறவு எதிர்க்கப்படவேண்டியது என 'செங்கொடியின் சிறகுகள்' தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அவர்கள் இருவருக்கும் சமப்பாலுறவினை இடதுசாரிகளாகவும் மனிதர்களாகவும் நாமேன் ஆதரிக்க வேண்டும் என்பதனை விளக்கி ஒரு பதில் எழுத விரும்பினேன்.

ஆனால் அப்போது இலங்கையில் அரசு இறுதிப்போர் என்று சொல்லி ஓர் இனப்படுகொலையை நடத்தத்தொடங்கியது அது தொடர்பான உரையாடல்களில் சமப்பாலுறவாளர் தொடர்பாக எழுத நினைத்தது விடுபட்டுப் போய்விட்டது. 




பலகாலங்களுக்கு முன்னர் சமூகத்தின் எல்லா அமைப்புக்களையும் போல சில இடதுசாரி இயக்கங்களும் சமப்பாலுறவாளரின் நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது உண்மையே. எல்லா இடதுசாரி இயக்கங்களும் அவ்வாறிருக்கவில்லை.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பின்நவீனப் புத்திசீவிகள் கம்யூனிஸ்டுக்களை ஒட்டுமொத்த ஹோமோஃபோபிக்குகள் என்று தமது வழக்கமான ஒட்டுமொத்தப்படுத்தும் இயல்புடன் வாந்தி எடுக்கத் தொடங்கினார்கள்.

முழுமூச்சாக இருந்து பல்வேறு மொழிகளிலும் எழும் புதிய உரையாடல்களை மெனக்கட்டு வாசிக்கும் வாய்ப்பும் வசதியும் பெற்ற புத்திசீவிகளான அவர்கள் களத்தில் எரியும் பிரச்சினைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த இயக்கங்களை நோக்கி "மொக்கு ஹோமோஃபோபிக்குகள்" என்று தாம் அப்போதுதான் புதிதாகக் கற்ற சொற்களைக்கொண்டு அவதூறெறிந்தார்கள்.

எவ்வாறிருப்பினும் இன்று மார்க்சிய இயக்கங்கள் பரவலாக சமப்பாலுறவாளர் தொடர்பான அக்கறைகளை உள்வாங்கத் தொடங்கிவிட்டன. இது நல்லதொரு சூழல். Ndpfront இனுடைய அக்கறை மெச்சத்தக்கது.

குடும்பங்களின் இறுக்கத்தினை முதலாளியம் விரும்பவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், குடும்பம் என்ற அமைப்பைப்பற்றியும் குடும்பம் என்ற அமைப்பின் இறுக்கம் பற்றியும் மார்க்சியத்தின் கொள்கை என்ன என்ற கேள்வியை மட்டும் இக்கதைக்கான விமர்சனமாக முன்வைத்து Ndpfront இற்கு எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment