Wednesday, January 8, 2014
ஆலன் டூரிங் : சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு
சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு எவ்வளவு தூரம் மனித இனத்துக்கு எதிரானது என்பதற்குக் குறியீடாகி நிற்கிறார் ஆலன் டூரிங் (Alan Turing).
ஒரு மனிதரது ஆளுமை, திறமை, சமூகப்பயன், உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒரே கணத்தில் தூக்கி எறிந்துவிட்டு அம்மனிதரது பாலியல் தெரிவு என்கிற தனிப்பட்ட விடயத்துள் தலையிட்டு வெறுப்பை உமிழ்வதால் மனித குலம் இழப்பினையே சந்திக்கிறது.
சமப்பாலுறவாளர் மீதான வெறுப்பென்பது ஒரு பாலியல் வக்கிரம். நாம் எதிர்ப்பால் சேர்க்கையை மட்டும் விரும்புகிறோம் என்பதற்காக எம்மைத்தவிர மற்ற அனைவருமே கிரிமினல்கள் என்று முத்திரை குத்துவது ஒரு மனநோய்.
கணினித்துறை வரலாற்றில் தவிர்த்துப் பார்க்க முடியாத கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் டூரிங். அவரது அறிவு மனிதகுலத்துக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே அவரை ஆண்மை நீக்கி வதைத்து தற்கொலைக்குத் தள்ளியது இந்தப் பாலியல் வக்கிரம் பிடித்த சமூகமும் அதன் சட்டங்களும்.
நேற்று இங்கிலாந்து மகாராணியார் திமிராக ஒரு மன்னிப்புக்கேட்டிருக்கிறார். அவரது அறிவுக்கும் உழைப்புக்குமாக அவரை அங்கீகரிப்பதாகவும் அவரது "கிரிமினல்" குற்றத்துக்காக அல்லவென்றும் சொல்கிறது அந்த திமிரான மன்னிப்பு.
நாம் அங்கம் வகிக்கும் மனித சமூகத்தில் இருக்கவே செய்கின்ற சிறுபான்மைகள் தொடர்பான அக்கறையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவர்களாக இருந்து பார்க்காத வரைக்கும் அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து புரிந்துகொள்ள முடியாது.
அன்பும் இரக்கமும் மற்றவராக எம்மை நினைத்துப்பார்க்கும் மனதிலிருந்தே பிறக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment