//தாரிக் ரமழானின் கோட்பாடுகளில் எமக்கு எழும் கேள்விகளை ஒரு தொகுப்பாக நாம் வெளியிட்டிருந்தோம் , அதில் தாரிக் ரமழான் மேற்குலக கலாச்சார மயப்படுத்தல் சிந்தனையை விதைப்பது வெளிப்படியாக தெரிகிறது என்று கூறியிருந்தோம் , அதற்கான அத்தனை வியூக ங்களையும் , கோட்பாட்டு அடித்தளங்களையும் அவர் வகுத்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தோம் , இவை அத்தனையும் அவரது சிந்தனையாக நண்பர்கள் பதிந்தவைகளில் இருந்து நாம் எடுத்துக்காட்டியவைதான். எனினும் இது ஒரு கோட்பாடு சார்ந்த பிரச்சினை என்பதால் பலரும் எமது பதிவை பார்த்து விட்டு உங்களுக்கு கோட்பாடுகள் சார்ந்த பரீட்சியம் போதாமல் இருக்கலாம் , தாரிக் ரமழானின் சிந்தனைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களிடம் புரிதல் திறமை இல்லாமல் இருக்கலாம் என கூறினார்கள் , அவர்களது கருத்தை நாம் அடிப்படையில் ஏற்ற போதிலும் எமது விமர்சனங்களுக்கான தகுந்த விளக்கங்களை கோரியிருந்தோம் . இது இவ்வாறிருக்க பிரபல நவீன கோட்பாட்டாளரான யமுனா ராஜேந்திரன் தாரிக் ரமழானின் சிந்தனை பற்றி பின் வருமாறு வரையறை செய்வதை காணலாம் " இஸ்லாமிய சமூகத்திலிருந்து தோன்றி குடி பெயர்ந்து மேற்கிலும் அமரிக்காவிலும் வாழும் இஸ்லாமிய விமர்சன அறிவு ஜீவிகள் (critical islamic intellectuals) , இவர்கள் மேற்கத்திய விஞ்ஞான கல்வி கற்றவர்கள் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது , மேற்கத்திய தாராளவாத அரசியல் மரபையும் ,முதலாழித்துவ சமூக மரபையும் ஏற்பவர்கள் இவர்கள் , "இஸ்லாமை மேற்கத்திய வாழ்முறைக்கு தக்கவாறு தகவமைத்துக்கொள்வது தொடர்பாக இவர்கள் பேசுகிறார்கள்" , இவர்களில் பின் நவீனத்துவம் பேசும் இஸ்லாமியர்களும் அடங்குவர் , இங்கிலாந்தில் வாழும் பாக்கிஸ்தானியரான ஜியாவுதீன் சர்தார் , எகிப்தியரான" தாரிக் ரமழான்" ,ஈரானியரான ஸவ்ரோஸ் போன்றவர்களும் இத்தகையவர்களாவர் ( நூல் : அரசியல் இஸ்லாம் , பக்கம் 14) நாம் தாரிக் ரமழான் குறித்து கூறிய அதே கருத்தையே கோட்பாட்டாளரான யமுனாவும் கூறுகிறார். இங்கு இவரை நாம் குறிப்பிட்டது அவர் சமூகவியல் கோட்பாட்டு நகர்வு பற்றி நன்கு பரீட்சியம் பெற்றவர் என்பதற்காக மாத்திரமே ! இது எமது மனப்பதிவை மேலும் வலுவாக்குகின்றது .எது எவ்வாறாயினும் தாரிக் ரமழானை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக , அவரது சிந்தனைகளில் தவறு இருப்பின் அதை சீர்மை படுத்துவானாக , நிறைகளை மென் மேலும் வளர்ப்பானாக !//
Muralitharan Mauran :
தாரிக் ரமழான் தொடர்பாக இப்போதுதான் படிக்கத் தொடங்கியுள்ளேன். அவரைப் படிக்கும் ஆர்வத்தை எனது Facebook நண்பர்கள்தாம் தூண்டியிருக்கிறார்கள்.
மேற்கத்தைய சிந்தனை, கிழக்கத்தைய சிந்தனை போன்ற கண்ணோட்டங்களுடனோ மதக் கோட்பாடுகளின் கண்ணோட்டங்களுடனோ வரலாற்றை அணுகும்போது ஏற்படும் குழப்பம், வரலாற்றின் இயங்கியல் வளர்ச்சியைக் கணக்கிலெடுக்கும் கண்ணோட்டத்துடன் அணுகும்போது ஓரளவு தெளிவு பெறுகிறது.
கைத்தொழிற்புரட்சியைத்தொடர்ந்து கிறித்துவம் தன்னை மீள வடிவமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. அவ்வாறு நிறைய சீர்திருத்தங்களையும் தனக்குள் செய்துகொண்டது. அவ்வாறு செய்திருக்காவிட்டால் வரலாற்றின் ஓட்டம் கத்தோலிக்கத்தை அடித்துக்கொண்டுபோய் கடலிற் போட்டிருக்கும்.
அதே போன்று கொலனி ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இந்துமதம் தன்னை மீள வடிவமைத்துக்கொண்டது. விவேகானந்தர் போன்றவர்கள் இந்த மாற்றத்தின் குறிகாட்டிகளாக இருக்கிறார்கள். மேற்கின் சிந்தனை வளர்ச்சி, சனநாயக வளர்ச்சி போன்றவற்றை அவதானித்து, கொலனித்துவத்தின் வழியாக வந்த நவீனதுவத்தை எதிர்கொள்ளும்படியாக, இந்துமதத்தை அவர்கள் மீள வடிவமைத்தார்கள்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் சைவத்தை இவ்வாறு மீளுருவாக்குகிறார். கென்ரி ஒல்கொட், அநகாரிக தர்மபால போன்றவர்கள் பவுத்தத்தில் நவீனத்துவத்தைப் புகுத்துகிறார்கள்.
நவீனத்துவத்தின் வருகையோடு மட்டுமல்லாமல், உலகின் வரலாற்றின் வளர்ச்சியோடு மதங்கள் தம்மை மீளுருவாக்கவேண்டிய தேவை உள்ளது.
புதிய புதிய வியாக்கியானங்களை தமது மதநூல்களுக்குச் செய்யவேண்டிய தேவையும் உள்ளது. (ரிசானா கொலை செய்யப்பட்ட காலத்தில், மரணதண்டனை தொடர்பான குர் ஆனின் நிலைப்பாட்டினை, மரணதண்டனைக்கு எதிரானதாக இத்ரீஸ் அவர்கள் வியாக்கியானப்படுத்திய கட்டுரையை இவ்விடத்தில் நினைவுபடுத்துகிறேன்)
எக்காலத்துக்கும் பொருந்தும் மதங்களோ நூல்களோ கோட்பாடுகளோ உலகில் உருவாக முடியாது. எல்லாமே மாற்றங்களை அனுசரித்துத் தம்மை இற்றைப் படுத்திக்கொள்ளவோ மாற்று வியாக்கியானத்துக்கு உட்படுத்தவோ வேண்டி வரும்.
இந்தப் பின்னணியில் வைத்தே யமுனா வின் கருத்துக்களைப் பார்க வேண்டும் என எண்ணுகிறேன். புதிய வியாக்கியானங்கள் எப்போதுமே முன்னோக்கிச் செல்வனவாகவே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அவற்றுள் எவை காலத்தோடு முன்னோக்கிச் செல்கின்றன என்பதை நாம் தாம் பகுத்தாராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை ஏற்றுக்கொண்டு பின்னுக்கு இழுப்பவற்றைப் புறந்தள்ள வேண்டும் இல்லையா?
Ilankai Velan :
கத்தோலிக்கம் நிலமானியத்திற்கு ஆதரவாகவே இருந்தது. இதில் லூதர் - காவ்வின் முதலாளியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்கள். முதலாளித்துவ வளர்ச்சிக்கு கோவிலுடன்,
Salman Akram :
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இஸ்லாமானது எக்காலத்திற்கும் ஏற்றதேயாகும்...புனித நூலின் எழுத்துக்கள் மாற்றப்படவேண்டியவை அல்ல..எழுத்துக்களுக்கான வியாக்கியானங்கள் கால சூழலுக்கேறப மாற்றமுறும்... (Text will be explained according to context) நிலமானியத்துடவன் கட்டுண்ட தொழிலாளர்களை விடுவிக்க உதவியது.
Muralitharan Mauran :
பெரும்பாலான மதங்களில் இது தான் நிலை. கால மாறுதலுக்கேற்ப, புதிய அறிவுக்குப் பொருந்தும்படி வியாக்கியானங்களை மாற்றவேண்டிய நிலை தவிர்க்க முடியாதது.
மத நூல்கள் மனித மொழிகளால் எழுதப்பட்டிருப்பதாலும் மனித மொழிகள் தாம் சொல்லவரும் பொருளை மிகவும் பருமட்டாகவே குறிக்கக் கூடியனவாக இருப்பதாலும் வியாக்கியானங்களும் எதிர் வியாக்கியானங்களும் மறுப்புக்களும் சாத்தியப்பட்டவண்ணமே இருக்கும்.
புதிய வியாக்கியாங்களில் ஆபத்தும் இல்லாமலில்லை. காலத்தோடு அடிபட்டுப் போகும் நிலையில் இருக்கும் மரபான மதக் கோட்பாடுகளை விட, புதிய வியாக்கியானங்களுடன் உருவாகும் தூய்மைவாதமும் குறுங்குழுவாதமும் அடிப்படைவாதமும் அதிக ஆபத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்புள்ளவை.
இன்று கத்தோலிக்கத்தைவிட Non RC மதங்கள் பிற்போக்கானவையாகவும் குறுங்குழுவாத அடிப்படைவாதத்தன்மை கொண்டனவாகவும் இருப்பதைக் காணலாம். வகாபிசம், Zahir Naik போன்றவர்களது வியாக்கியானங்களுடன் எழும் இசுலாமியத் தூய்மைவாதம், ஆறுமுக நாவலரின் இறுகிய சைவ வாதம் போன்றன நல்ல எடுத்துக்காட்டுகள்.
No comments:
Post a Comment