14 நவம்பர் 2015 09:41 PM
அரசரை அண்டியவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
ஆள்வோரை அண்டியவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
ஒடுக்குவோரின் சொந்த ஊரில் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
பெருங்கொலைகாரர்களின் தலைநகரில் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்...
குருதி குடிக்கும் பேரரசுகளின் கோட்டைகளுள் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்...
அவர்களருகே ஒரு பட்டாசு வெடித்தாலும் அது பத்துநாட் செய்தி.
அவர்கள் குண்டு வெடித்துக் கொலையுண்டாலோ அது உலகத்தின் துக்கம்.
அவர்களுக்கோ இவ்வுலகின் சுவர்க்கக் கதவுகள் அகலத்திறந்துள்ளன.
அரசருக்கும் ஆள்வோருக்கும்
ஒடுக்குவோருக்கும் பெருங்கொலைகாரர்களுக்கும் பேரரசுகளுக்கும்
குடிக்கக் குருதியும் உண்ணப் பிணமும்
எம்மை ஒடுக்கும் ஆயுதங்கள் செய்யச் செல்வமும்
களித்திருக்க உழைப்பும் கொடுக்கும்
கெடு நரகில் உழலும்
நாமோ பாவிகள்.
பாக்கியவான்கள் வீசும் குண்டடிபட்டு இறந்தபின்,
பரலோக இராச்சியத்தில் மட்டுமே எமக்கு இடமிருப்பதாகத்தான்
பாவப்பட்ட எமது இறை தூதர்களால்
ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்லமுடிகிறது.
மின்சார வேலிகளாலும் நீட்டிய துப்பாக்கிகளாலும்
இறுகிய முகங்களுடன் கணினி முன் அமர்ந்திருக்கும் குடிவரவு அதிகாரிகளாலும்
கட்டிக் காக்கப்படும் சுவர்க்கத்தின் வெளியே நின்று,
நாம் தாண்ட முடியாப் பெரும் மதில்களை எம் அழுக்கேறிய கைகளாற் தொட்டு அசிங்கப்படுத்தாமல்,
எட்டத் தள்ளி நின்று,
சுவர்க்கத்தின் திசை நோக்கி,
பாக்கியம் செய்தவர்களுக்காக மன்றாடுவோம்.
Pray for Paris
No comments:
Post a Comment