30 அக்டோபர் 2015 11:59 PM
மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் அரசாங்கத்தின் வேலை, உடனடியாக
மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வருவதற்கு
வழிபார்ப்பதாகும்.
சிலகாலங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை
புகைவண்டி நிலையத்திற்குப் போயிருந்தபோது அங்கே சிறு பந்தல் கட்டி
மாணவர்கள் சிலர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தார்கள். அவர்களை எவரும்
திரும்பிப்பார்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.
தமது கோரிக்கைகளை துணிகளிலும்
அட்டைகளிலும் எழுதி வைத்துக்கொண்டு சுழற்சி முறையில்
உண்ணாவிரதமிருந்தார்கள். கோரிக்கைகள் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததால்
அருகே சென்று பேச்சுக்கொடுத்து விளக்கம் கேட்டேன். தோழமையுடன் தமது
கோரிக்கைகளை எனக்கு விளக்கினார்கள்.
அப்போதே அவர்களுடன் பேசி மாணவர் கோரிக்கைக்குச் செவிசாய்த்திருக்க வேண்டியது அரசின் கடமை.
அரசின் கேளாத செவிகளை அமைதிவழிப் போராட்டத்தின் முழக்கங்கள் எட்டுவதில்லை.
சுயநலம் கொண்டவர்களின் காணாத கண்களுக்கு அமைதிவழிப் போராட்டங்கள்
தெரிவதில்லை.
இறுதியில் மாணவர்கள் தெருவில் இறங்கி எதிர்ப்பைக்
காட்ட நேர்கிறது. அப்போதும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் "நகர மண்டபப்
பகுதியில் வாகன நெரிசல்" என்று தான் தலைப்பிட்டுச் செய்தியைக்கூட
வழங்குகின்றன. போராட்டத்துக்குக் கோரிக்கை என்ற ஒன்று இருப்பதைக்கூட அவை
இருட்டடிப்புச் செய்கின்றன.
கடைசியில் வன்முறை வெடித்த பிறகுதான்
கேளாத தடித்த செவிகளுக்குக் கோரிக்கைகள் மெல்லப் போய்ச் சேருகின்றன. காணாத
இருண்ட கண்களுக்கு மாணவர்கள் தெரிகிறார்கள்.
மாணவர்கள் கல்லால்
எறிந்தார்கள் என்கிறீர்கள், மருத்துவமனைக்கு மக்களைப் போகவிடாமல்
தடுத்தார்கள் என்கிறீர்கள் உங்கள் நியாயங்கள் எவ்வாறு இருக்கும் என்றும்
எப்படிப் பொய்யால் நெய்யப்படும் என்றும் எமக்குத் தெரியாதா? ஒருமுறையா இரு
முறையா, ஒவ்வொரு போராட்டங்களின் போதும் நீங்கள் அவற்றை எப்படி நெய்து
செய்தியாக்குவீர்கள் என்று நன்றாகவே கண்டிருக்கிறேன்.
எனவே,
மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் நீங்கள் சொல்லும் பொய்களின்படியான எந்த
அத்துமீறலைச் செய்திருந்தாலும் நான் அவர்கள் பக்கமே நிற்பேன்.
காவற்துறையைக் கத்தியால் குத்தினாலும் நான் மாணவர் பக்கமே நிற்பேன்.
ஏனென்றால், கல்வியில் தனியார்மயத்தைப் புகுத்தும் அரசின் திட்டத்தை அதனால்
நேரடியாகப் பாதிக்கப்படப்போகும் பணக்காரர் அல்லாத மாணவர்கள்
எதிர்க்கிறார்கள். தனியார்மயத்துக்காக அவர்களின் கல்வியைத் தரமற்றதாக்கும்
அரசின் இழிசெயலைக் கண்டிக்கிறார்கள். அது நியாயமான கோபம்.
இங்கே
அரசு மாணவர்களின் எதிரி. எனவே அரசு மக்களின் எதிரி. அரசின் காவல் நாயான
காவல்துறை எம் அனைவரதும் எதிரி. அதனை, வெறுங்கையோடு நின்ற மாணவர்களின் மீது
ஆயுதம் கொண்டு கொலைவெறித்தாக்குதலை நடத்தியதன் மூலம் காவற்துறை
நிரூபித்துமுள்ளது.
நீதியான எழுச்சிகளும் மக்கள் போராட்டங்களும்
மாணவர் கிளர்ச்சிகளும் தாம் உலகில் சனநாயகத்தைக் கொண்டுவந்து நிலைநாட்டிக்
காப்பாற்றும் தூண்களே ஒழிய, சனநாயகத்துக்கு என்றும் அச்சுறுத்தலாய் அமையும்
காவற்துறையும் அரசும் பம்மாத்து நீதிமன்றங்களும் கேடுகெட்ட ஊடகங்களும்
அல்ல.
நான் போராடும் மாணவர் பக்கம். நீங்கள்?
[இதே
டெய்லிமிரர் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது "நகரமண்டபப் பகுதியில் வாகன
நெரிசல்" என்று செய்தி போட்டார்கள். இந்தக் கேடு கெட்ட ஊடகம் எப்போதுமே
எந்தப்போராட்டத்துக்கும் போராடுவோரின் கோரிக்கைகளை மக்களுக்கு
தெரியப்படுத்துவதில்லை. வாகன நெரிசல் தான் அவர்களுக்குப் பெரிய பிரச்சினை.
ஆனால், இனவாதிகள் ஐந்து பேர் சேர்ந்து கொடி பிடித்துக்கொண்டு நின்றால் முதன்மைச் செய்தியாகப் போட்டு பெரிய படம் காட்டுவார்கள்.
அடிவாங்கி ரத்தம் சிந்திச் சாகக்கிடந்தால் அந்த அவலத்தைப் பரபரப்பாக்கி விற்றுக் காசாக்கித் தின்பார்கள்.]
No comments:
Post a Comment