22 டிசம்பர் 2015 10:43 AM
இந்தச் சகோதரியின் துணிச்சல் மிக்க உறுதியான இந்தக் குரலையும் அழைப்பையும்
கேட்ட பின்னும் அவரோடிணைந்து இந்தக் கொடுங்கும்பலை எதிர்த்து
இயங்காவிட்டால் நாம் இச் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகிறோம்.
NewJaffna, அதிர்வு, tamilcnn, jvpnews போன்ற கொசிப் வலைத்தளங்களை
கிளுகிளுப்புடனோ, அருவருப்புடனோ பேசாமற் கடந்துபோவது இனியும் நல்லதல்ல. இவை
வெறுமனே கிசுகிசுத் தளங்களாகப் பொழுதுபோக்குக்கு நடத்தப்படுபவை
அல்ல. இவற்றின் பின்னே மிகப்பெரிய வன்முறைக் கும்பல் உள்ளது. அது பெரிய
அளவில் பணம் சம்பாதிக்கிறது. இப்பணம் அப்பாவிகளை மிரட்டுவதன் மூலமும்
அப்பாவிகளின் வாழ்வை அழிப்பதன் மூலமும் இளம் சமுதாயம் ஒன்றினை தவறான
அரசியலின் பால் வழிநடத்துவதனூடாகவும் தான் திரட்டப்படுகிறது. இக்கும்பலை
சாதாரணமானதாக நாம் எடைபோட்டுவிடக்கூடாது. அரசியல்வாதிகள், காவற்துறை,
நீதித்துறை எல்லாவற்றையும் தமது கைக்குள் போடக்கூடிய வல்லமை கொண்டோராகவே
அவர்கள் இருப்பார்கள்.
சட்டரீதியான நடவடிக்கைகள் முயற்சிகள்
ஒருபுறம் நிகழ, மக்களை இவர்களுக்கும் இவர்களது வலைத்தளங்களுக்கும் எதிராகத்
திரட்ட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
மக்களைத்
திரட்டிக் கூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாகத்தான் மக்களை
மேலும் மேலும் விழிப்பூட்ட முடியும். காவற்துறையையும் நீதித்துறையையும்
மக்களது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து நீதி கேட்க முடியும். சிங்கள இணையச்
சூழலில் இத்தகைய கொசிப் தளங்களின் மாஃபியா வலையமைப்பு தமிழ்ச்
சூழலைக்காட்டிலும் பெரியது. சிங்கள முற்போக்காளர்களோடும் இவ்வெதிர்ப்பு
நடவடிக்கைகளில் தமிழரும் முஸ்லிம்களும் கைகோர்த்துக் கொள்ளவேண்டும்.
இதனை ஒரு சாதாரண விடயமாகக் கடந்து செல்லாமல், இடது சாரிகள், மனித
உரிமைவாதிகள், பெண்விடுதலைச் செயற்பாட்டாளர்கள், சமய நிறுவனங்கள், சமூக
ஆர்வலர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், கலை
இலக்கியவாதிகள், நேர்மையான ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து
நிற்க வேண்டும்.
உறுதிமிக்க இச் சகோதரியின் அழைப்புக்கு நாம் தரக்கூடிய மதிப்பு அதுதான்.
அச்சுறுத்தல்களைக் கண்டு ஆயிரம் பேர் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க, ஒரு
சிலரே உறுதியுடன் எதிர்த்துப் போராடுகிறார்கள். இவ்வாறு போராடுபவர்கள்
மூலமாகத்தான் வரலாறெங்கும் அக்கிரமங்கள் தோற்கடிக்கப்பட்டுப் புதிய நல்ல
நிலைமைகள் உருவாகியுள்ளன.
No comments:
Post a Comment