Thursday, January 7, 2016

உயிர்ச்சூறை : ஈழத்துப் பாடல்


9 நவம்பர் 2015 12:44 AM

மனதைத்தொட்டு உணர்வுகளைப் பற்றவைக்கும் வரிகளும் குரலும் காட்சிகளும் நடிப்புமாய் அருமையான பாடலொன்று..

எம்முடைய தேசத்தில் எம்மோடு வாழ்பவர்களின் துயரை எமது மொழியில் கேட்டு அழுவதென்பது இறக்குமதியாகும் கலையில் எமக்கு வாய்ப்பதில்லை.

நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!


பாடல் வரிகள் :

மேற்கோடு காற்றும் அழுகின்ற வேளை
அந்திக்குள் பொன்கீற்று தினம் தோன்றுமா?

தீக்கோளப்பாறை அலை வந்து மோதி
மணலாக மனம் அங்கு உயிர் ஊன்றுமா?

வெள்ளெருக்குப் பாலுக்குள்ளே சிற்றெறும்பாய்
சொல்லுக்குள்ளே சோகம் இங்கு ஒட்டிப்போச்சு

அக்கரைக்குப் பாய் விரிச்ச அகதி ஓடம்
எக்கரையும் சேரவில்லை அமிழ்ந்து போச்சு

அறுபத்தாறு உயிர்க்கூடு கடலோடு தான்
அணையாத தீக்காடு மனதோடு தான்

கண்ணீரின் கடலில் காணாத கரையில் காலங்கள் தேடும் உயிர் ஈரமாய்
விண்ணோடு மின்னும் வெள்ளிப்பூவாக விளக்காகி நீங்கள் வெகு தூரமாய்

ஏழாற்றுக் கடலில் நிமிர்ந்தாடும் திடலே தாளாமல் நெஞ்சு கனக்கின்றது
நீர் வீசும் காற்றும் கடல் கொண்ட பேச்சும் நினைவோடு சோகம் சுமக்கின்றது

கரும்பாறை மீது கற்றாழை நின்று பூவேந்திக் கடல் பார்த்துத் தொழுகின்றது
வெறுங்கூரை வீடு மெழுகாத திண்ணை புயலோய்ந்த பின்னும் அழுகின்றது

ஒளிவார்த்த கனவோடு இருள் போர்த்த கடலில்
வழியின்றி உயிரேந்திப் படகேறினர்

கரை காணும் முன்னே காலத்தின் கையில்
கலங்கரை விளக்கில் சுடராகினர்

போர்வாளின் உறையும் கறைகொண்டதாகும்
போராடும் அலை சொல்லி அறைகின்றது

நெருப்புக்கும் இல்லை நிழல் என்ற போதும்
நினைவோடு வலிகள் கரைகின்றது

வேரோடு விழுதும் விதைக்குள்ளே தானே
இயற்கைக்கு ஏராளம் பொதுச்சூத்திரம்

கடலோடு நினைவை நீராட வைத்து
கண்ணீரில் கடல் மூழ்க நான் சாட்சியம்


No comments:

Post a Comment