Thursday, January 7, 2016

சிறு குற்றங்களுக்கான பெருந்தண்டனைகளின் அரசியல்

21 நவம்பர் 2015 12:50 PM

எவர்மீதாவது நாம் எமது அதிகாரத்தை நிலைநாட்டவேண்டுமானால் அவர்களைக் குற்றவாளிகளாக்குவதும், குற்றவுணர்வு கொண்டவர்களாக்குவதும் ஒரு சிறந்த வழிமுறை. அக்குற்றங்களுக்கான தண்டனைகளையும் நீதியையும் வழங்குபவர்களாக நாம் இருக்க வேண்டும். கண்காணிப்புக் கமராக்கள், சிறு சிறு குற்றங்களுக்கெதிரான பெருந் தண்டனைகள், தீங்கற்ற பாலியல் நடத்தையைக் குற்றமாக்குவதும் வெறுப்புக்குரியதாக்குவதும், கஞ்சா போன்ற பாதகமற்ற போதைப்பொருட்களைக் குற்றமாக்குதல், உணவுப் பழக்கவழக்கங்களைக் குற்றமாக்குதல், உடையைக் குற்றமாக்குதல், எவருக்கும் பாதகமற்ற வழிபாட்டு முறைகளைக் குற்றமாக்குதல் என்று இப் பட்டியல் நீளும்.

அலுவலகங்களில் தொழிலாளர்கள் மீதான அதிகாரத்தை நிறுவப் பயன்படும் கமராக்கள், உடைமாற்றும் அறைகளுள் பெண்கள் மீதான அதிகாரத்தை நிறுவப் பயன்படுகின்றன. அதே கமராக்கள் போராடும் மாணவர்களின் முகங்களையெல்லாம் அருகில் நின்று படம்பிடித்து அரசின் அதிகாரத்தை நிறுவ உதவுகின்றன.

இப்போது திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு சவூதி அரசு அளிக்கவிருக்கும் கல்லெறிந்துகொல்லும் தண்டனை இதே நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டதே.
அரசுக்கு -குறிப்பாக அரச குடும்பத்துக்கு - மேன்மேலும் அதிகாரத்தை வழங்குவதுதான் இவ்வகையான தண்டனைகளதும் வழக்குகளதும் அடிப்படையான நோக்கம்.

சோரம்போதல் விடயத்தில் சாட்சிகள் பற்றிய சிக்கலான விளக்கங்களையும் நடைமுறைகளையும் கொண்ட சவூதி ஷரீஆ சட்டமுறை, எப்போதும் வேலை தேடி அங்கே சென்ற வெளிநாட்டுப் பெண் தொழிலாளிகளை மிக மோசமாக ஒடுக்குவதற்கே நடைமுறையில் பயன்படுகிறது என்பது பல்வேறு ஆய்வாளர்களதும் கருத்து. சவூதிக்கு வேலைக்குப் போன எத்தனையோ பெண்கள், தாம் வீட்டு உரிமையாளர்களான ஆண்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டமையையும் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டமையையும் சொல்லுகிறார்கள். எல்லாமே ஆதாரத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு துன்புறுத்திய திருமணமான சவூதி ஆண்களில் எவராவது கல்லெறிந்து கொல்லப்பட்டதாக ஒரு செய்தியாவது எம்மை எட்டியிருக்கிறதா? ஷரீஆ யாருக்குச் சேவகம் செய்கிறது?

சோரம்போதல் வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையிலான ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை. உன்னைவிட வேறு எவரோடும் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்ற ஒப்பந்தம் துணைவர்களுக்கிடையில் இருக்கிறதென்று கொள்வோம். எவராவதொருவர் அவ்வொப்பந்தத்தை முறித்துக்கொண்டால் மற்றவர் மணமுறிவு பெறுவதற்கு தகுதியுடையவராகிறார். அந்த அளவில் சட்டத்தின் துணை போதுமானது. அதற்குமேல் படுக்கையறைக்குள் அரசு எதற்குத் தலையிடவேண்டும்? வேறெதற்காகவுமல்ல, அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக மட்டுமே.

அதிகார வர்க்கம் மதங்களோடு சமரசம் செய்வதற்கான முதன்மைக் காரணியும் இதுவே. நான் படித்தறிந்த வரையில் - அளவிலும் தன்மையிலும் வேறுபட்டாலும் - பல மதங்களையும்போல, இசுலாம் மிக நுணுக்கமாக மனிதர்கள் மீதான அதிகரத்தைக் கட்டமைத்து மத நிறுவனங்களது கைகளிற் கொடுக்கிறது. மத நிறுவனங்களைக் கைக்குள் வைத்திருப்போர் மனிதர்களைக் கைக்குள் வைத்து நசுக்க முடியும். இயல்பாகவே குர் ஆன் கட்டமைக்கும் அதிகாரத்தைத் தாண்டியும், நபிவழி பற்றிய ஆயிரக்கணக்கான பிரதிகளும் மொழியின் சாத்தியமாக இருகக்கூடிய நூறாயிரக்கணக்கான மாற்று விளக்கங்களும் இசுலாத்தை வைத்துக்கொண்டு அரசதிகாரத்தை நிறுவுவதற்கு மிகவும் வாய்ப்பாக உள்ளன. சவூதி அரச குடும்பம் இதனை நன்கு பயன்படுத்துகிறது.

சிறு குற்றங்களுக்கான பாரிய தண்டனைகளை ஒரு மதம் கொண்டிருக்கிறது என்பது பெருமையான விடயம் அல்ல. அது அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பான பாரதூரமான சிக்கல்.

மாட்டிறைச்சியை, சிலைவணக்கத்தை, நல்ல சுவையான உணவை உண்பதை, கஞ்சாவை, பெண்கள் உரத்துப் பேசுவதையும் வேகமாக நடபதையும், சுய இன்பப் பழக்கத்தை எல்லாம் குற்றமாக்குவது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கானது.

மனிதர்களைப் பாவிகளாகவும், தீவினைப் பேற்றினை அனுபவிப்பவர்களாகவும், பாவம் செய்பவர்களாகவும் நம்பவைத்து, குற்றவுணர்வு கொள்ளவைப்பதிற்தானே மதங்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment