Thursday, January 7, 2016

எமது கலைகளிலும் பண்பாட்டிலும் "இறக்குமதித்தனம்"

14 டிசம்பர் 2015 02:36 PM

உணவுப் பண்டங்களும் கலைப்படைப்புக்களும் இலங்கையில் அளவுக்கதிகமாக இறக்குமதியாகின்றன. ஒன்றில் நாம் நேரடியாக அவ்விறக்குமதிகளை நுகர்கிறோம் அல்லது அவ் இறக்குமதிகளை நகல்செய்து நுகர்கிறோம். இப் போக்கு எமது பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலையையும் "இறக்குமதித்தனம்" கொண்டதாக மாற்றியிருக்கிறது.


எடுத்துக்காட்டாக, இலங்கை மக்களின் உணவுக்கலாசாரம் என்று எதனை நாம் கருதுகிறோம்? இலங்கைக்குரிய உணவுப்பொருட்களாகக் கருதப்படுபவை எவை?

கொத்து ரொட்டி (கொலனிக்கால மலையாளக் கப்பற்தொழிலாளர்களின் உணவு), பாண்/வெண் கோதுமை மாவு/மைசூர் பருப்பு (உலகப்போர்க்கால நிவாரண உணவு), தகரத்திலோ பொதிகளிலோ அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுவகைள், போர்த்துக்கேயர் அறிமுகப்படுத்திய மரவள்ளிக்கிழங்கு, வட இந்தியாவிலிருந்தோ தென்னிந்தியாவிலிருந்தோ ஐரோப்பிய கொலனியாதிக்க நாடுகளிலிருந்தோ வந்த உணவுகளின் நகல் செய்யப்பட்ட வடிவங்கள் போன்றவை தானே? இலங்கைக்கே உரிய உணவு வகை ஏதாவது இலங்கையின் உணவுப் பண்பாடாக அறியப்படுகிறதா?

இலங்கை மக்களின் இசை எது? கண்டியசரன் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இசையும் கலையும்தான் சிங்கள மக்களின் பண்பாட்டு இசை. கொலனிக்கால ஐரோப்பிய ஆபிரிக்க இறக்குமதிகள்தாம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களத் துள்ளிசை. தென்னிந்தியாவிலிருந்து காலகாலமாகத் தருவிக்கப்பட்ட இசை தான் தமிழ் மக்களதும் பண்பாட்டு இசை. வட இந்திய - தென்னிந்திய - மேற்குலக வணிக இசைதான் சிங்கள மக்களதும் தமிழ் மக்களதும் வணிக இசை. ஏனைய கலைகளும் இவ்வாறானவையே.

இலங்கையில் உருவாகும் பெரும்பாலான பாடல்களை எடுத்தால் (தமிழில் இச்சிக்கல் மிகவும் அதிகம்), அவற்றிலே எமது வாழ்க்கையைக் காணவில்லை. எமக்குத் தொடர்பேயில்லாத எமக்குத் தெரியாத இந்திய வாழ்க்கையினதோ மேற்கத்தைய வாழ்க்கையினதோ உயிரற்ற நகல் தான் காணப்படுகிறது. உணவிலும் இதே நிலைதான். சிங்களத்திலும் இந்திய-மேற்கத்தைய வாழ்க்கையை நகல்செய்த செயற்கையான ஒரு இலங்கை வாழ்க்கையையே காணக்கிடைக்கிறது. இதுதான் "இறக்குமதித்தனம்"

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தாம் வீட்டிலும் ஊரிலும் பயன்படுத்தும் சொந்த உச்சரிப்பையோ மொழிவழக்கையோ, நாம் கல்விகற்றபோது பயன்படுத்திய செம்மையான மொழிவழக்கையோ பயன்படுத்த முடியாமல் அறிவிப்பாளர்கள் திணறுகிறார்கள். தென்னிந்திய/மலையக/யாழ்ப்பாண/கொழும்பு உச்சரிப்புக்களை மாற்றி மாற்றி நகல்செய்து தத்தளித்து உயிரை விடுகிறார்கள் தமிழ் அறிவிப்பாளர்கள். ஆங்கில/இந்தி உச்சரிப்புக்களை நகல் செய்து தத்தளித்துத் தடுமாறுகிறார்கள் சிங்கள அறிவிப்பாளர்கள். உடல்மொழியிலும் இதே தத்தளிப்பும் தடுமாற்றமும்.

எமக்கான கலைகளும் உணவும் எம்மோடு இயல்பாக வளர்ந்து கலந்துவராவிட்டால் அது எமது உடலினதும் பண்பாட்டினதும் நலத்துக்குப் பெருங்கேடாகிவிடும். நாம் யார் என்ற சிக்கலும், எமக்கான எதுவுமே இல்லாமல் நாம் எமது சூழலில் வேறு யாரோவாக இருந்தாகவேண்டிய கட்டாயமும் பாரதூரமானவை. உடலிலும் உள்ளத்திலும் பண்பாட்டிலும் வாழ்விலும் அரசியலிலும் இவ் "இறக்குமதித்தனம்" கேடுகளை உருவாக்கவல்லது. நாமாக எமக்கேற்றபடி உற்பத்தி செய்யாது இறக்குமதியும் நகலும் செய்து பயன்படுத்தும் எதனையுமே எம்மால் முழுமையாகவோ அழகாகவோ ஆழமாகவோ பயன்படுத்த முடியாது; ஈடுபாட்டோடு வெளிப்படுத்த முடியாது.

இலங்கையின் கலை உற்பத்திகளிலும் ஏனைய உற்பத்திகளிலும் காணப்படும் போதாமை இதுதான். இதைத்தான் நாம் "நம்நாடுப் பாடல்கள் எவ்வளவு தான் இருந்தாலும் தென்னிந்தியப்பாடல்கள்போல வருதில்லையே" என்பது போன்ற கூற்றுக்களின் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

குறிப்பு 1:

இலங்கைக்கே உரிய உணவுப்பண்பாடும் கலைப்பண்பாடும் இல்லை என்று மறுப்பதல்ல எனது நோக்கம். இருக்கின்றன. ஆனால் தீவிரமான இறக்குமதிப் பண்பாட்டுக்கு முகம் கொடுக்க முடியாமல் தோற்றுப் போய்க் காணாமலாக்கப்பட்டுவிட்டன. "இறக்குமதித்தனம்" எமது வாழ்வின் எல்லா மூலைகளிலும் நிரம்பி வழிகிறது.

குறிப்பு 2 :

தூய்மையான "ஒரிஜினல்" பண்பாடும் கலையும் வெறும் கற்பனாவாதமே. அப்படி ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எல்லாமே பல்வேறு இடங்களிலிருந்தும் கொள்ளப்படும் கொடுக்கப்படும் கூறுகளின் அழகிய தொகுப்பாகவே அமைகின்றன. இவ்வுண்மையை மறுப்பதும் எனது நோக்கமன்று. பண்பாட்டுக் கலப்பு இயல்பாக நிகழ்வதற்கும் திடீரெனப் பெரும் வலுவுடன் திணிக்கப்படுவதற்குமான வேறுபாட்டினை மனதில் வைத்தே இப்பதிவு எழுதப்பட்டது. இவ் வேறுபாடு எமது வாழ்வியலிலும் ஆரோக்கியத்திலும் பெருமளவில் செல்வாக்குச் செலுத்துவதாலேயே இதுபற்றிப் பேசவேண்டியதாகிறது.

குறிப்பு 3 :

நாம் எங்கிருந்து இறக்குமதி செய்கிறோமோ, அதே தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் கூட இவ் இறக்குமதித்தனம் பெருகிவருகிறது. அங்கும் இதே பதிவு அங்குள்ள நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கப்படக்கூடியதாகவே இருக்கிறது.

‪#‎பீப்பாடலால்‬ ‪#‎எழுப்புண்ட‬ ‪#‎எண்ணங்கள்‬

No comments:

Post a Comment