Friday, July 17, 2015

இந்தச் சாவுகளைத் தவிர்த்திருக்கலாம்.

பதுளை மண்சரிவு அவலத்தைப்பற்றி நேரிலும் எழுத்திலும் கருத்துச்சொல்பவர்கள் பலர் இது இறைவனின் செயல் என்றும் முற்பிறப்பில் செய்த பாவம் என்றும் கடவுளின் சோதனை என்றும் சலித்துக்கொள்கிறார்கள். இறைவன் ஏன் இப்படி எல்லாம் சோதிக்கிறான், அவனுக்கு இரக்கமே இல்லையா என்றும் கோபப்படுகிறார்கள்.

அவர்களது இரக்க குணம் நன்று. அவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு கோணத்தில் இப்பிரச்சினையைப் பார்க்கிறார்கள்.

சிறுவயதில் இருந்து எமக்குள் வலிந்து திணிக்கப்படும் மதக்கருத்துக்களால் நாம் இவ்வாறானதொரு பார்வையைப் பெற்றுவிடுகிறோம். இந்த மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நாம் அவலங்களையும் பிரச்சினைகளையும் அணுகுவதால் பெரும் தவறொன்றை இழைக்கிறோம்.

நடந்த அவலத்தின் பின்னே இருக்கும் மாபெரும் அநீதிகளையும் கவனயீனங்களையும் அரசியலையும் நாம் பார்க்காமற் போகிறோம். இதனால் அநீதிசெய்தவர்களைத் தப்பவிடுகிறோம். மீண்டும் மீண்டும் இவ்வாறான அவலங்கள் நிகழ்வதற்கான் வாய்ப்புக்களை உருவாக்குகிறோம்.

அதிகாரத்தில் இருப்பவர்களும் அநீதியாளர்களும் மதத்தை விரும்புவதற்கான அடிப்படைக் காரணமே இதுதான். பிரச்சினைகளின் உண்மையான அடிப்படைகளை மக்களின் கண்களில் இருந்து மறைத்து, பாவ புண்ணியத்திலும் கடவுள் சித்தத்திலும் மறுமையிலும் எல்லாவற்றையும் தேடச்சொல்லிக் கண்ணைக்கட்டி விட முடிகிறது.

பதுளை அவலத்தின் பின்னணிக்காரணமாக, மிகத்தெளிவான ஒடுக்குமுறையும் பாரபட்சமும் இருக்கிறது. ஏழைகளாக இருக்கும் அந்தக் கடும் உழைப்பாளிகளின் உழைப்பை மட்டும் சுரண்டிச் சுரண்டித் தின்றுவிட்டு, அம்மக்களை மண்ணுக்குள் புதையச்சொல்லித் தள்ளியது யார் என்று விசாரியுங்கள்; தேடுங்கள். அவ்வாறு தேடுவது மட்டுமே இந்த உலகத்திலேயே சுவர்க்கத்தைப் படைக்க வழிகாட்டும்.

No comments:

Post a Comment