Friday, July 17, 2015

மத நிறுவனங்கள் வேறு, மதம் வேறா?

பெண்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகக் கூட்டமொன்றில் பேசிய பேச்சாளர், "மதங்கள்" என்று சொல்லிவிட்டு பின்னர் திருத்தி "மத நிறுவனங்கள்" என்று சொல்லித் தன் உரையைத் தொடர்ந்தார்.
மத நிறுவனங்கள் செய்யும் பிற்போக்குத்தனமான வன்முறைகளுக்கு மதங்களைக் குறை கூறக்கூடாது என்பதையொத்த கருத்தே இத் திருத்தத்துக்குக் காரணமானது என்று ஊகிக்கிறேன்.

சரி, மத நிறுவனங்களுக்கு இந்த அதிகாரமும் பலமும் எங்கிருந்து வருகிறது? தமக்கென இராணுவப் படை வைத்திருப்பதனாலா? அல்லது அரச அதிகாரம் கையிலிருப்பதாலா? மத நிறுவனங்களுக்கு அவ்வாறான பலங்கள் இருக்கும் நாடுகள் உண்டு. ஆனால் அப்படியல்லாத இடங்களிலும் மத நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரம் எப்படி வருகிறது?

அது மதத்திலிருந்து தான் வருகிறது. வேறெங்கிருந்துமல்ல. மதமும் மத நூல்களும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதம் மிக்கவை என்றும் , அவை எப்போதும் சரியானவை என்றும் மக்களிடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊட்டப்பட்டிருக்கும் பொய்மையிலிருந்துதான் இந்த அதிகாரம் ஊற்றெடுக்கிறது.


கேள்விகளுக்கப்பாற்பட்ட, புனிதத்தன்மை மிக்க மத நூல்களைத் தந்த கடவுளின் ஆசி பெற்ற நிறுவனங்களாகத் தான் மத நிறுவனங்கள் பார்க்கப்படுகின்றன.

மதங்களையும் மத நூல்களையும் விமர்சித்துக் கேள்விக்குள்ளாக்கும் பண்பாடு மக்கள் மத்தியில் உருவாகாத வரைக்கும் மத நிறுவனங்களின் அதிகாரத்தையும் கயமையையும் உடைக்க முடியாது.
மதங்களினதும் மத நூல்களினதும் காலத்துக்கொவ்வாத கருத்துக்கள் சனநாயக முறைப்படி மாற்றப்பட வேண்டும் என்கிற புரிதல் மக்கள் மத்தியில் பரவுமானால் மத நிறுவனங்கள் இயல்பாகவே ஆட்டம் காணும். அவையும் சனநாயகப் படவேண்டிய நிலை உருவாகும்.

மதங்கள் மீதான கடுமையான விமர்சனத்தினை வைப்பதற்குத் தகுந்த சூழ்நிலை இல்லை என்ற நிலை இருக்குமானால், ஆகக்குறைந்தது மதத்தைப் புனிதப் படுத்தாமலாவது விடலாம். மதத்தைக் குற்றமற்றாதாக்கி, புனிதப்படுத்தும் பெரும் 'பாவத்தை' நாமும் செய்வானேன்?

No comments:

Post a Comment