Friday, July 17, 2015

இயற்கைக்கு முரணானது துறவா, சமப்பாலுறவா?

சில வாரங்களுக்கு முன் இலங்கை ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்திய செய்தி, இலங்கை அரசு தனது உள் நாட்டுச் சட்டங்களை மீறி ஐ. நா. வில் சமப்பாலுறவாளர்களுக்குச் சார்பாக வாக்களித்துள்ளது என்பதாகும். சிங்கள பௌத்த தேசியவாதக் கட்சிகளும் அமைப்புக்களும் இதனைப் பெரிதுபடுத்தியிருந்தன. ஏனைய சில மதவாதிகளும் இதனை விமர்சித்திருந்தார்கள்.
இவ்விமர்சனங்கள் எல்லாமே மகிந்த - ஆதரவு பாசிச அடிவருடிகளிடமிருந்தே வந்தன. சிங்கள பௌத்த இனவாத ஆதரவு ஊடகங்களான Dailymirror போன்றவை இவ்விமர்சனங்களுக்கு முக்கியத்துவமும் அளித்தன.

மைத்திரி ஆட்சிக்கு எதிராக மக்களைத் திசைதிருப்பக் கிடைந்த்த நல்ல வாய்ப்பாக பாசிச அமைப்புக்கள் இதனைப் பார்க்கின்றன. இவ்வரசாங்கத்தில் முக்கிய இடங்களில் சமப்பாலுறவாளர்கள் இருப்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டவும் தயங்கவில்லை.

நடந்தது என்னவென்றால், ஐ. நா ஊழியர்களில் மணமானவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் சமப்பால் திருமணம் செய்தவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தது. அவ்வாறு சமமான சலுகைகளை வழங்குதல் ரஷ்யாவின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு எதிரானது என்பதே ரஷ்யாவின் வாதம். ரஷ்யாவைப்பொறுத்தவரை சமப்பாலுறவு, அதனை ஊக்குவித்தல்போன்றன குற்றங்களாகும். ரஷ்யாவின் தீர்மானத்துக்கு எதிராகவே இலங்கை வாக்களித்திருந்தது.

இலங்கையில் சட்டப்படி சமப்பாலுறவு குற்றம். ஆனால் சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்ற அரசியலமைப்பின் வாசகப்படியே தான் நடந்துகொண்டதாக இலங்கை விளக்கமளித்தது. ஐ. நா வழங்கும் சலுகை அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே அடிப்படையானது என்பது இலங்கை கூறியிருந்த நியாயம். இந்தச் சட்ட அளப்பறைகள் ஒருபுறமிருக்க,
சமப்பாலுறவினை உலகமகா பாதகமாகப் பெரிதுபடுத்துவோர் யார்? பாஸ்டுக்களும் மதவாதிகளும் பழைமைவாதிகளுமேயாவர். மனிதர்களை அடக்கியாள விரும்புவோரே இவர்கள். மனிதர்களின் பாலியல் நடத்தையினை அதீத ஒழுங்குக்குள் வைத்தபடி மோசமான பாலியல் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் செய்வதே பாசிசத்தின் தன்மை.

சமப்பாலுறவு இயற்கைக்கு மாறானது, அது ஒரு நோய்க்கூறு, குணப்படுத்தவேண்டியதே ஒழிய ஏற்கவேண்டியதல்ல என்ற வாதங்கள் இந்த அதிகார வெறியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
மதவாதிகளே, திருமணம் செய்யாமல், பாலுறவு கொள்ளாமல் ஆண் பெண் துறவிகளாகவும், பாதிரிகளாகவும் வாழ்வது மட்டும் இயற்கைக்கு முரணானதில்லையா? நோய்க்கூறில்லையா? குணப்படுத்த வேண்டிய வருத்தமில்லையா? சிறுவயது முதல் பிள்ளைகளைத் துறவியாக்கி அவர்கள் விருப்பத்துக்கு மாறாகவே அவர்களைப் பாலுறவிலிருந்து தனிமைப்படுத்தும் உங்கள் கலாசாரத்துக்கு இரு ஆண்கள்/ இரு பெண்கள் திருமணம் செய்துகொள்வது எந்த வகையில் இழுக்கானது?

மனிதர்களின் நல்வாழ்வுக்குத் தடையாக அமையக்கூடிய பாலியல் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவது சரியானது. பாலியல் வதை, சிறுவரைத் தவறாகக் கையாளுதல் போன்ற நடத்தைகள் தடுக்கப்படவேண்டியன. அதைத்தாண்டி, மற்றவருக்கு எந்தவகையிலும் தொல்லை இல்லாத நடத்தைகளைத் தடுக்க முயல்வது அதிகார வெறியின் ஓர் இயல்பேயன்றி மனிதகுல நன்மைக்கானதல்ல.

No comments:

Post a Comment