Friday, July 17, 2015

தமிழ்த் திரையிசை வரலாற்றில் "மெல்லிசை" மன்னர்

MSV இன் இறப்போடு தமிழ்த் திரையிசை உலகின் ஒரு தலைமுறை விடைபெற்றுச் சென்றுவிட்டது. விசுவநாதனின் இறப்பால் கவலைகொண்டுள்ள இந்த வேளையில் தமிழ்த் திரையிசையில் அவரும் இராமமூர்த்தியும
் இணைந்து செய்த பாய்ச்சலை நினைவுகூருவது அவசியமானது.

காலம் மாறும்போது, புறச்சூழல் மாறும்போது கலைவடிவங்களும் மாற்றங்களுக்குள்ளாகும். சிலமாற்றங்கள் கண்ணுக்குத் தெரியாதபடி மெல்ல மெல்ல நிகழ்ந்து திடீரென ஒரு பாய்ச்சலாக எமக்கெல்லாம் தெரியவரும். அவ்வாறான பாய்ச்சல்களைத் தமிழ்த் திரையிசை நிறையவே கண்டுள்ளது. இந்தப்பாய்ச்சல்கள் நிகழும்போது, அவற்றை வெளிப்படுத்தும் பணியை ஒரு சிலர் செய்வார்கள். விசுவநாதன், இளையராஜா, ரகுமான் போன்றவர்கள் வணிகத் திரை இசையில் பாய்ச்சல்கள் நிகழும்போது அவற்றை வெளிப்படுத்தியதனாலேயே போற்றப்படுகிறார்கள்.

விசுவநாதன் மூலம் நிகழ்ந்த பாய்ச்சல் என்ன?

விசுவநாதன் - இராமமூர்த்தி இரட்டையர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டம் ஏன் வந்தது? மெல்லிசை என்றால் என்ன?

தமிழ்த் திரையிசையில் மெல்லிசையைப் பொதுப்போக்காக மாற்றிய பாய்ச்சலைத்தான் அவர்கள் இருவரும் செய்தார்கள்.

செவ்வியல் மேடை நாடகங்கள் அப்படியே சினிமாவாக மாற்றம் கண்ட தமிழ்ச்சூழலில் அம் மேடை நாடகங்களைப்போன்றே, செவ்வியல் (Classical/சாஸ்திரீய) இசை தான் திரைப்பாடல்களாக இருந்தது. செவ்வியல் இசை அறிந்த சிறுதொகை "படித்த" "உயர்" வர்க்கம் இரசிக்கும் பாடல்களாகவே திரைப்பாடல்கள் இருந்தன.

சினிமா ஒரு பெரும் வணிகமாக மாறி அது புதிய சந்தைகளைத் திறந்துகொண்டு பேருருக்கொண்ட போது, அதனை எல்லா மக்களும் நுகர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுதொகையினருக்கான கலையாக இருந்தால் இலாபம் பெருகாது என்ற நிலை ஏற்பட்டிருந்தது. சினிமாவின் கூறான திரைப்பாடல்களிலும் இந்த மாற்றத்தைக் காலமும் சூழலும் இவ்வாறு கோரி நின்றன.

இவ்வாறானதொரு சூழலிற் தான் விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்களின் பாடல்கள் செவ்வியல் விதிகளை உடைத்துக்கொண்டு எல்லோரும் விரும்பும் மெல்லிசை வடிவத்தைக் கொண்டிருந்து புகழ்பெற்றன. இவர்களுக்கு முன்னமே பாடல்களில் மெல்லிசைக்கூறுகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஒரு பாய்ச்சலாக இதனை நிகழ்த்தும்படியான திரட்சி இவர்களது இசையிலேயே இருந்தது. இதே காலப்பகுதியிற்தான் பாடல் வரிகளிலும் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் எல்லோருக்கும் சென்று சேரக்கூடிய மாற்றங்களைச் செய்தார்கள். ஒலிப்பதிவுத் தொழிநுட்பங்களும் மெல்லிசை வடிவங்களுக்கு வாய்ப்பாக வளர்ச்சிகண்டிருந்தது.

செவ்வியல் இராகங்களில் வழக்கத்துக்கு மாறான "அந்நிய ஸ்வரங்களின்" பயன்பாடு, இராகங்களை அவற்றுக்குரிய மரபிலிருந்து விலகி புதிய சாத்தியங்களுடன் பயன்படுத்துதல், புதிய புதிய இசைக்கருவிகளின் வரவு, மேற்கத்தைய இசையையும் ஏனைய இசைவடிவங்களையும் செவ்வியல் கர்நாடக இசையுடன் கலக்கும் பாங்கு, பாடவும் நினைவுபடுத்தவும் எளிதான மெட்டுக்கள் போன்றனவெல்லாம் மெல்லிசையின் தன்மைகள்.

கலை வடிவங்களில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவர்களை நினைவுகூரும்போது, அவர்கள் செய்த பாய்ச்சல் என்ன, அதற்கான புறக்காரணிகள் எவை என்பவற்றைத் தேடித் தெரிந்துகொள்வது அப்பெருமக்களுக்கு நாம் செய்தும் நல்ல மரியாதைகளுள் ஒன்று.


மணி மணிவண்ணன்

மரபிசை அல்லது செவ்விசை தெரிந்தவர்கள் வெகுசிலரே என்பது பிற்காலத்தில் நடந்தது. தமிழ்த்திரையின் தொடக்க காலத்தில் நாடெங்கும் தெரிந்த இசை மரபிசை. மக்கள் பண்களையும் பிரித்தறியும் அறிவு கொண்டவர்களாக இருந்தனர். அந்தக் காலத்தில் மிகப்பெரும் பாடகர்களாக இருந்த பாகவதர், கிட்டப்பா, சுந்தராம்பாள் போன்றவர்களும், நாடக நடிகர்களும் பொதுமக்களிடையே பரவலாக வரவேற்பு பெற்றிருந்தார்கள். இது தமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையிலும் இதே தாரகைகளுக்கு இதே போன்ற வரவேற்பு இருந்தது. நாதசுரச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களைப் பற்றிய செவி வழிக்கதை ஒன்று உண்டு. அவர் கோவில் ஊர்வலத்தில் நடந்து கொண்டே நாதசுரம் வாசித்ததைக் கேட்டு மெய்மறந்து போன பெட்ரோமேக்ஸ் விளக்குக்காரர் ஒருவர் மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். இவ்வளவு தெய்வீகமான இசையை இவ்வளவு அருகில் இருந்து கேட்க முடிந்தது என் பேறல்லவா என்று பிள்ளையவர்களை அவர் பாராட்டியதை அந்த ஊர் செல்வந்தர்களிடம் அவர் பெற்ற தங்கப் பதக்கத்தைக் காட்டிலும் மேலான பாராட்டாகப் பிள்ளையவர்கள் எடுத்துக் கொண்டாராம். மரபிசையிலிருந்து மெல்லிசைக்கும் மாறிய சமயத்தில்தான் தமிழ் மக்களிடையும் மரபிசை கற்றுக் கொள்ளும் பழக்கம் நலிந்திருக்க வேண்டும். அல்லது புதியது பற்றிய ஆர்வத்தால் பழையதை உதறும் தமிழர் பழக்கத்தால் அது நேர்ந்திருக்கலாம்.
 
 

மணி மணிவண்ணன்

இதைக் கொஞ்சம் நோண்டிப் பார்க்க வேண்டும். விசுவநாதன் ராமமூர்த்திக்கு முன்னரே மெல்லிசையும் மேற்கத்திய இசையும் தமிழ்ப்படங்களில் புகுந்து விட்டிருந்தன என்று நினைக்கிறேன். K. V. மகாதேவன் 1942 வாக்கில் திரையிசையிக்கு வந்து விட்டார். விஸ்வநாதன் ராமமூர்த்தி 1952ல்தான் இசையமைக்க வந்தார்கள். மரபிசையை மழுங்க வைத்ததில் எல்லீஸ் டன்கனின் தாக்கம் ஏதாவது இருந்ததா என்றும் பார்க்க வேண்டும். ஒருவேளை இதே போன்ற மாற்றங்கள் இந்தியாவெங்கும் ஒரே நேரத்தில் தோன்றியிருக்கலாம். மரபிசையைக் காட்டிலும் மேற்கத்திய மெல்லிசை மாடர்னாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தீர்மானித்திருக்கலாம்.

Muralitharan Mauran

நான் அறிந்ததை வைத்துக்கொண்டு பார்க்கும்போது இந்தியில் மெல்லிசையின் வரவும் வெற்றியும் தமிழில் இம்மாற்றத்தைக் கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. கூடவே நீங்கள் சொன்னதுபோல மேற்கத்தைய மெல்லிசையின்/வணிக இசையின் அறிமுகமும் பரவலும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

மணி மணிவண்ணன்

கே. வி. மகாதேவன் வருகைக்கு முன்னால் படங்களில் நாடகங்களைப் போலவே எண்ணற்ற பல பாடல்கள் இருந்தன. எல்லீஸ் டன்கன் மேற்கத்தியப் படங்களைப் போல் மாற்ற முயன்று பாடல்களின் எண்ணிக்கையையும் குறைத்தார். பின்னணி இசையில்தான் முதலில் மெல்லிசை பயன்பட்டிருக்க வேண்டும். இதைப் பற்றி முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், மொத்த இந்தியத் திரைப்பட வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த தமிழ்த்திரை வரலாற்றாசிரியர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
 

No comments:

Post a Comment