Friday, July 17, 2015

பாலியல் வதைக்கெதிரான போராட்டங்கள்: தங்கையுடன் உரையாடல்

"பெண்களைக் காப்பதற்காகவே பெண்ணை விட ஆணைக் கடவுள் பலசாலியாய்ப் படைத்தான்" எனும் பொருள்படும் பதாகையைக் காண்பித்தபடி கொழும்பின் பெண்கள் பாடசலையொன்று பாலியல் வதைக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படம் வெளியாகியிருந்தது. பாலியல்வதைக்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் காரணமாகும் மனநிலை/கருத்தியல் ஒன்றினையே, அதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அம்மாணவர்கள் தாங்கியிருந்தமை பெரும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

இதுபற்றி நேற்று எனது தங்கையுடன் கலந்துரையாடியபோது, தமது பாடசாலையிலும் தாம் பங்குபற்றிய எதிர்ப்பு நிகழ்வில் "பெண்கள் நாட்டின் கண்கள்", "பெண்மையைப் போற்றுவோம்" போன்ற சம்பந்தமில்லாத, மூடத்தனமான வாசகங்களைத் தாங்கியிருந்ததாகச் சொல்லிக் கவலைப்பட்டார்.

அதிர்பர்களும் ஆசிரியர்களும் உயர்தரம் பயிலும் மாணவர்களும் ஏன் இவ்வாறு தேடலில்லாத தேங்கிப்போன புத்தியோடு நடந்துகொள்கிறார்கள் என்று சிறிது நேரம் நானும் தங்கையும் உரையாடினோம். என்னவெல்லாம் இதற்குக் காரணமாகலாம் என்று நான் எனது சிந்தனைக்கெட்டிய சிலவற்றைப் பட்டியலிட்டேன். என்னுடைய பட்டியல் இருவருக்குமே திருப்தி தரவில்லை.
சிறிது நேரத்தில் தங்கை ஒரு காரணம் சொன்னார். அக்காரணம் மிகச்சரியாயிருந்தது.

"பாலியல் வதைச் சம்பவங்களைக் கேள்விப்படும்போது, அதைத் தமது பிரச்சினையாக உணராத தன்மையே இதற்குக் காரணம். உணர்வு ரீதியான அக்கறையின்மையே அச்சம்பவம் பற்றி ஆழமாகத் தேடாமல் சோம்பேறித்தனமாக இருக்க வைக்கிறது. இது நாளை தனது மகளுக்கும் தங்கைக்கும் தனக்கும் வரப்போகும் பிரச்சினை என்ற உண்மையான பயமும், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால், தமது போராட்டத்தை முடிந்தவரை வீரியம் மிக்கதாக அவர்கள் மாற்றுவார்கள்; இக்குற்றங்களுக்கான காரணத்தையும் அதற்கெதிரான முழக்கங்களையும் அக்கறையோடு தேடி, பொருத்தமானதாக முன்வைப்பார்கள்"
மக்கள் மீதான நேர்மையானதும் உண்மையானதும் உணர்வுரீதியானதுமான அக்கறை, எமது செயல்களையும் சொற்களையும் முற்போக்கானதாக மாற்றுகின்றது என்பது ஒரு 17 வயது மாணவிக்குப் புரிகிறது.

No comments:

Post a Comment