தமிழர் - முஸ்லிம்கள் இடையான உறவைக் குதறிக் கூறுபோட்ட மிக முக்கியமான
இன்னொரு சம்பவத்தின் நினைவு நாள் அண்மையிற்தான் கடந்துபோனது. ஓகஸ்ட் 12,
1990. வீரமுனைப் படுகொலை எனும் பயங்கரம் நிகழ்ந்த நாள் அது.
ஒடுக்குமுறைக்கெதிராக ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களை இராணுவமயமாக்கி மக்களைவிட்டுப் பிரித்து இயந்திரமாக்கியது
இந்தியா. கிழக்குமாகாண முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்படை என்ற பெயரில்
ஆயுதம் தரித்த அமைப்பாக்கியது பேரினவாத அரசு. இராணுவத்தோடு வீரமுனைக்
கோயிலுக்குள் புகுந்து இந்தப் படுகொலையைச் செய்தது அந்த ஊர்காவற்படைப்பிரிவே.
1976 இல் புத்தளம் பள்ளிவாசலுள் புகுந்து தொழுதுகொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்றது இலங்கை அரசின் பேரினவாதக் காவற்துறை. காத்தான்குடிப் பள்ளிவாசலுள் புகுந்து முஸ்லிம்களைச் சுட்டுக்கொன்றது விடுதலைப்புலிகள்
அமைப்பு. வீரமுனையில் கோயிலில் அடைக்கலம் புகுந்த தமிழர்களைக் குதறியது
ஆயுதம் தரித்த முஸ்லிம் இளைஞரக்ளைக் கொண்ட ஊர்காவற்படை. நவாலி
தேவாலயத்தினுள் அடைக்கலம் புகுந்த தமிழர்களை வானிருந்து குண்டுவீசிக்
கொன்றது சந்திரிகா அரசின் பேரினவாத வான்படை.
மக்களிடையே இருக்கும் சிறு சிறு பகைமைகளை ஊதிப்பெருக்கி ஆயுத வன்முறையாகவும் படுகொலைகளாகவும் மாற்றி எவரெவரோ இலாபம் புடுங்குகிறார்கள். இறுதியில் மக்களுக்கு மிஞ்சுவது குதறப்பட்ட வடுக்களும் நிரந்தரப் பகைமையுமே.
புத்தளம் படுகொலையையும் நவாலிப் படுகொலையையும் சிங்களமக்கள் எதிர்த்து
நிற்கும் நிலை வரும். காத்தான்குடிப் படுகொலைகளையும் முஸ்லிம்கள்
வெளியேற்றத்தையும் தமிழர்கள்
எதிர்க்கும் காலமொன்று வரும். வீரமுனைப் படுகொலைகளையும் ஏறாவூர்
படுகொலைகளையும் கிழக்கின் பல்வேறு வன்முறைகளையும் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு
எதிர்க்கும் காலம் வரும்.
வர வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment