Friday, July 17, 2015

தாளக்கருவி

நண்பர்களுடன் Good Market போயிருந்தேன். அங்கே ஒரு கடையில் இவ்வகைத் தாளக்கருவிகளை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். வழக்கம்போலல்லாது, மற்றவர்களைக் கவரக்கூடிய விதத்தில் அவர் தாளக்கருவியை இசைத்தபடியிருந்தார். யார் வேண்டுமானாலும் அக்கடையில் இருந்து ஒரு கருவியை எடுத்துத் தாளம் போடலாம். நானும் போய் இருந்து தாளம் போடத்தொடங்கினேன். சிறிது நேரம் இசைத்த பிறகுதான் இந்த விளையாட்டின் அருமை புரிந்தது.

அங்கே வாசித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவர் மனதோடும் நாம் மனதால் ஒத்திசையும் இன்பம் உடலெங்கும் மனமெங்கும் பரவியது. ஒவ்வொருவரதும் மனங்களது லயத்தில் நாமும் லயித்துக் கரையும் அனுபவம் நன்றாக இருந்தது. தாளத்த்தில் சிறு சிறு விருத்திகளையும் வேறுபாடுகளையும் ஒவ்வொருவரும் செய்வதும் அவற்றைப் புரிந்துகொண்டு ஏனையோர் ஒத்திசைவதும்....
மனிதர்கள் கூட்டாக ஒத்திசைந்து மனமொத்து இசையால்பிணைக்கப்பட்டு இசைக்கும் செயல் அற்புதம். நீங்களும் செய்துபாருங்கள். அருகில் இருந்து இசைப்பவரின் இனமோ அடையாளங்களோ தெரியாமல் அவர்களோடு மனிதராய் ஒத்திசையும் அனுபவம் கிட்டும்.

மனிதரைப் பிரித்து வைத்துப் பிணந்தின்னும் இந்த உலக ஒழுங்கில் இப்படி ஏதாவது சிறு சிறு துளிகளையும் பொறிகளையும் தின்று தான் நாம் மனிதர் என்பதை எமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment