Friday, July 17, 2015

திரைப்பாடல்களில் 'மெட்டு'

ஓ காதல் கண்மணியில் "பறந்து செல்லவா" பாட்டு தொடர்ச்சியாகக் கணினியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்பாடலில் உயிர்ப்பு இருக்கிறது. மெட்டு (Tune) இருக்கிறது.

தாளக்கருவிகளதும் கணினி இசையின் ஆர்வக் கோளாற்றினதும் இரைச்சலை மனம் வெறுக்கத் தொடங்கிவிட்டதென நினைக்கிறேன். அவற்றில் சலிப்பு வந்துவிட்டது. இந்தப் பாடல் இரைச்சல்கள் நீங்கிய ஆறுதலைத் தருகிறது.

இப்போதிருக்கும் தொழிநுட்பக் கருவிகளின் துணையுடன் ஒவ்வொரு ஒலித் துளியிலும் துல்லியத்தையும் சிலிர்ப்பையும் புது அனுபவத்தையும் மனம் நாடுகிறது. இந்த நாட்டத்துக்குச் சரியாகத் தீனி போடக்கூடியவராக ரகுமான் மட்டுமே இருக்கிறார்.

இளையராஜாவுக்கு இந்த விடயம் என்னவென்று பிடிபடவில்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பாடலின் கூறாக ஒலியின் பல்வேறு பரிமாணங்கள் இருக்க முடியும் என்கிற புதிய நுட்பியல் சாத்தியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்த ரகுமான், தமிழில் ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த வேறு சில விடயங்களைத் தவிர்த்துவிடுகிறார்.

இது புதிதாய் வாங்கிய அதிதிறன் தொலைபேசியைப் பயன்படுத்தி நண்பர்களுக்கு அழைப்பெடுக்க முடியாத நிலை போன்ற வெறுமையை உருவாக்குகிறது.




ரகுமானின் பாடல்கள் ஒலித் துளிகளால் வரையப்பட்ட அழகிய முப்பரிமாண ஓவியம். இன்று அது அதன் தன்மையில் இன்னொரு பரிணாமத்துக்குப் போகிறது. அங்கே குரலும் பாவமும் சொற்களும் மொழியும் எல்லாமே ஒலித் துளிகள் தாம்.

இப்படி ஒரு பரிணாமத்தில் மெட்டு என்ற ஒன்று, மெட்டோடு இயையும் மொழி தரும் அனுபவம் என்ற ஒன்று தவறிப்போகிறது.

மெட்டு மொழியோடு சேர்ந்து எம்மை இன்னொரு மனநிலைக்கு இட்டுச் செல்கிற அனுபவத்தை இன்றைய ரகுமான் தரத் தவறுவதாய்ப் படுகிறது.

நுணுக்கமாகக் கோர்க்கப்பட்ட அற்புதமான ஒலியனுபவத்தை மனது நினைவு வைத்து அவ்வப்போது அசைபோட்டுப் பார்க்குமா, அல்லது மெட்டுடன் இயைந்த மொழிகொண்ட பாடலை மனது நினைவில் இருத்தி அசைபோட்டு மகிழுமா?

மெட்டும் மொழியும் கேட்பவருக்கு என்ன செய்யும் என்பது அந்தந்தப் பண்பாட்டுச் சூழல் சார்ந்தது. உலகமயப்பட்ட சந்தைக்கு அவை இரண்டும் தடையாக இருக்கின்றனவோ?

ஒரு கடையில் சோறுண்டு கறியில்லை; இன்னொரு கடையில் கறியுண்டு சோறில்லை.
சோறும் கறியும் தருகிற கடையைப் போட ஒருத்தி/ஒருவன் வரக்கூடும்.

No comments:

Post a Comment