தமிழக தேர்தல் முடிவில் எனக்கு அதிகம் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னுடைய பல நண்பர்கள் ஈழத்தமிழர் நிலைநின்று ஜெயலலிதா மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புத்தான். உண்மையிலேயே அவர்கள் இவ்வளவு எதிர்பார்ப்பு
வைத்திருக்கிறார்கள் என்று இதற்கு முன் நான் உணரவில்லை.
தொடர்ச்சியான போர், அரசியல் ஒடுக்குமுறை காரணமாக ஈழத்தமிழர்கள் பொதுவாகவே அரசியலைக் கூர்ந்து அவதானிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமிழக, இந்திய அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளாமல் இவ்வாறு வீண் நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டிருப்பது கவலைக்குரியது.
ஈழத்தமிழரது உரிமைப்போராட்டம் ஓர் அரசியல் கையறு நிலையில் நிற்பது உண்மை. அம்மக்களுக்கு நம்பிககியைத்தரக்கூடிய அரசியல் இயக்கங்கள் எதுவுமே இன்றில்லை. இந்தச் சூழலை எவரும் கொச்சைப்படுத்த முடியாது.
ஆனால் இந்தக்கையறு நிலை, வெளிநாட்டு அரசியல் சக்திகளிடம் பிச்சைப்பாத்திரத்தோடு கையேந்தும் நிலைக்கு அவர்களைத்தள்ளுவதும், அதன் உச்சகட்டமாக ஜெயலலிதா ஆட்சிக்குவந்தால் இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதுபோன்ற மலினப் பிரசாரங்களை நம்புவதும் வேதனையான விடயங்கள்.
இலங்கையில் புலிகளுடனான இறுதிப்போர் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தவேளை வன்னியிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த செய்திகள் இலங்கைத்தமிழர் மீது அக்கறை கொண்டிருந்த உலகத்தோரையெல்லாம் உலுப்பிப்போட்டன. ஒரே மொழிபேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தமிழரையும், புலம் பெயர் தமிழரையும் கோபம் கொண்டெழச்செய்தன.
அந்தக்கோபம், அந்த உணர்வு, அந்த எழுச்சி அப்பழுக்கற்றது. உண்மையான மனித அன்பின், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
அந்தக்கோபம் வெகுமக்கள் போராட்டங்களாக எல்லா இடங்களிலும் வெடிக்கவாரம்பித்தது.
துருவநாடுகளின் பனிக்குளிரிலும், தமிழகத்தின் வெயிலிலும் மழையிலும், இரவுபகலாக மக்கள் நீதி கேட்டு வீதிகளில் நின்றார்கள்.
அவர்களும் கையறு நிலையில் தான் வீதிகளுக்கு வந்தார்கள்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்" அது.
பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நடந்த, இனப்படுகொலையூடான ஒடுக்குமுறை, உலகெங்குமுள்ள அந்த இனத்தின் மக்கள் கண்முன்னால், அவர்கள் சாட்சியாக, அவர்களது கையறுநிலையினை எள்ளியவாறு இலங்கையில் நடந்தேறிக்கொண்டிருந்தது.
அந்த அவலம் தந்த அரசியல் உணர்வெழுச்சி அந்த மக்களை அவசர அவரசரமாக அரசியல் மயப்படுத்தியது. அந்த மக்கள் தத்தமது அறிவு மட்டங்களில், தமக்குப் புரிந்தபடி அரசியலைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் உண்மையத் தேடினார்கள்.
இந்த அவலத்தின் காரணங்களைத் தேடினார்கள்..
இந்தக் கொடுமையின் பின்னால் நிற்கும் அநீதியின் மூலங்களைத் தேடினார்கள்.
மக்கள் குற்றவாளிகள் யார் எனத் தேடி அலைந்தார்கள்.
அவரவர் அறிவு மட்டங்களில் நின்று கொண்டு அவரவருக்குப் புரிந்த அளவில் அவரவர் போதாமைகளோடு,
மக்கள் குற்றவாளிகளைத்தேடி அலைந்தார்கள்.
அந்த நேரத்தில் தான் உண்மையான குற்றவாளிகள் கிலிகொண்டார்கள்.
கைகளில் ரத்தத்தோடு அலைந்துகொண்டிருந்த அந்தக் கிலிகொண்ட குற்றவாளிகளில் பலரை , அவர்கள் குற்றவாளிகள் என்று எம்மால் நம்பவே முடியவில்லை.
'கடவுள்கள்' எல்லாம் கைகளைக் காற்சட்டைப் பைகளுக்குள் திணித்து ரத்தத்தை மறைத்துக்கொண்டு நெளிந்தார்கள்.
குற்றவாளிகளின் வரிசை மிக நீண்டதாக இருந்தது.
மக்களிடம் பிடிபட முன்னமே அவர்கள் சூழ்ச்சிகளில் இறங்கினார்கள்.
குற்றவாளிகள் புதியபல சூழ்ச்சிகளைச் செய்தாலும் கூட அரதப்பழசான சூழ்ச்சியே பெருமளவில் செய்யப்பட்டது.
அதுதான்,
எதிரி இருக்கும் இடத்தைத்தவிர்த்து வேறொரு இடத்துக்கு கூச்சலிட்டவாறே கல்லெறிவது .
எல்லோரும் அவ்வாறு வேவ்வேறு இடங்களுக்குக் கல்லெறிய ஆரம்பிப்பார்கள்.
எதிரிகளும் குற்றவாளிகளும் மட்டும் பாதுகாப்பாக, எப்போதும் பாதுகாப்பாக நிலைவரத்தை ரசித்தபடி இருப்பார்கள்.
புலம்பெயர் தேசங்களில் இயங்கிய புலிகளின் ஏஜண்டுகள், இலங்கை அரசின் ஏஜண்டுகள், அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா என்று குற்றவாளிகளின் வரிசை மிக நீண்டது.
இங்கே தொடங்கிய உரையாடலோடு நெருங்கிய தொடர்புடையதென்ற வகையில் இந்தியா என்கிற பெரும் போர்க்குற்றவாளியைப்பற்றி மட்டும் பார்க்கலாம்.
"இந்திய அரசு" என்கிற பிராந்ததிய ஏகாதிபத்தியம் இந்த இறுதிப்போரின் பெரும் சூத்திரதாரி. ஒட்டுமொத்தத் தமிழரின் நாற்பதாண்டுகால அவலத்திலே குளிர் காய்ந்த மாபெரும் குற்றவாளியும் இந்தியாதான்.
அப்படி இருக்க, பெருகி வெடித்த தமிழக மக்களின் கோபத்தை திசைதிருப்பி இநிதியாவை அது பாதித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது. எப்படி?
காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தியையும் கருணாநிதியையும் நோக்கி கற்களைக் கூச்சலிட்டபடியே எறிந்தார்கள் காரியகாரர்கள்.
உண்மையான போர்க்குற்றவாளியான இந்தியா பாதுகாப்பாக நின்றுகொண்டு இந்தக் கூச்சல் மிகுந்த கல்லெறிக் காட்சியைப் பர்த்து ரசித்தது,.
இந்தக் கல்லெறிக்கேவலத்தின் உச்சம்தான் "இந்திய அரசே உடனடியாக இலங்கை விடயத்தில் தலையிடு" என்ற கோசம்.
இந்தக்கோசத்தைப் போராடும் தமிழக மக்களின் வாய்களில் திணித்ததுடன் இந்தியா பெருவெற்றி அடைந்தது.
இந்தியாதான் இலங்கையில் போரை நடத்துகிறது என்ற உண்மையை எவ்வளவு கெட்டித்தனமாக மக்களிடமிருந்து மறைத்தார்கள்..
புலிகளின் நண்பர்களாகத்தம்மைக்காட்டிக்கொண்டிருந்த புலம்பெயர் சக்திகளதும் ஏகாதிபத்தியங்களினதும் சதிவலைப்பின்னல் ஒன்று புலிகளை பூண்டோடு அழிக்கும் நிகழ்ச்சிநிரலை நகர்த்திக்கொண்டிருந்ததை பாவம் இந்த மக்கள் கல்லெறிக்கூச்சலில் எங்கே கவனித்திருக்கப்போகிறார்கள்?
இந்தியப் பிராந்திய வல்லாதிக்கத்துக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கவேண்டிய மக்களின் கோபம் நாசூக்காக, மகிந்த, சோனியா, கருணாநிதி பொம்மைகளை எரித்துமகிழ்வதொடு ஆறிக்கொள்ளுமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
இலங்கைத்தமிழர் மீதான போர்க்குற்றங்களில் இருந்து இந்திய அரசைக்காப்பாற்றும் திட்டத்தின் ஹைலைட் காட்சிகள் இவைதான்
1. மகிந்த தான் உலகமகா அரக்கன் என்ற பிம்பத்தை உருவாக்குவது.
2. இலங்கையில் நடப்பது சிங்கள வெறியின் தமிழர் மீதான பாய்ச்சல் என நம்பவைப்பது
3. சோனியாவின் தனிப்பட்ட கோபமே இலங்கைக்கு இந்தியா உதவுவதற்கான காரணமாகக் காட்டப்பட்டது
4. கருணாநிதி தான் தமிழக அரசியலின் ஒரேயொரு மாபெரும் தமிழ்னத் துரோகி என்று பிரசாரம் செய்யப்பட்டது
5. சோனியா காங்கிரசையும் கருணாநிதி திமுக வையும் தோற்கடித்தால் ஈழத்தமிழர் மீதான வன்முறையில் ஏதாவதொரு மாற்றம் வரும் என்ற பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு நம்பவைக்கப்பட்டது.
6. மலையாளிகள்தான் இலங்கை தொடர்பான இந்தியாவின் "தவறான" கொள்கைகளுக்குக் காரணம் என்று பரப்பப்பட்டது.
7. மகிந்தவின் பெரும் பின்னணிச்சக்தி சீனாவே என்று ஊடகங்களைக் கொண்டு அசுரப் பிரசாரம் செய்யப்பட்டது
8. சீனாவின் ஆதிக்கம் இலங்கையிலும் இந்துமாக்கடலிலும் பெருகிவிட்ட காரணத்தாற்தான் இந்தியா வேறுவழியின்றி இலங்கைக்கு உத்வ வேண்டிய தேவை வருகிறது என்ற அபாண்டப்புளுகு அவிழ்த்துவிடப்பட்டது
இத்தனையும் இந்தியாவையும் அதன் நலன்களையும் காப்பாறுவதற்கான சூழ்ச்சிகள் அன்றி வேறெதுவுமல்ல.
இந்தப்பிரசாரத்தின் தொடர்ச்சியாகவே இந்த ஜெயலலிதா மீதான எதிர்பார்ப்பும் உருவாகிவளர்ந்துள்ளது.
அழிவுக்குச் சற்று முன்னரான காலப்பகுதியில் வேறு வழியற்ற நிலையிலிருந்த புலிகள் கூட இந்தியத்தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டால் போரிலும் மாற்றம் வரும் என்று நம்பியிருந்தார்கள்.
அக்காலத்தின் புலிகளின் பல்வேறு அறிக்ககளும் இதற்கு ஆதாரம்
வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் சீமானும் இதனை ஒரு பிரசாரமாக முன்னெடுத்தார்கள்.
ஓட்டு அரசியல் சூதாட்டத்தில் இவை எல்லாம் தமக்குச்சாதகமாக மாறுவதை அவதானித்த அதிமுக, பிஜேபி எல்லாம் திடீரென ஈழ ஆதரவு பேசத்தொடங்கின. இதென்னடா இப்பிடியாச்சு என்று பயந்த அடுத்த சூதாடிகளான திமுக காங்கிரஸ் எல்லாம் வேறு வகை விளையாட்டுக்களில் ஈடுபட்டு வாக்குவேட்டையாட வெளிக்கிட்டன.
கருணாநிதியின் உண்ணாவிரதக்காமடியும் இவ்வாறுதான் நடந்தது.
இந்திய அரசியல் யாப்பின்படி மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் மிகவும் மட்டுப்பட்டவை.
வெளிவிவகாரங்களில் கண்டபாட்டுக்குக் கதைக்கக்கூட முடியாது.
அதிலும் குறிப்பாக இந்திய அரசின் நீண்டகாலத்திட்டங்களில் எல்லாம் அவர்கள் தலைப்போட முடியாது.
புலிகளை அழிப்பதென்பது இந்திய அரசின் நாற்பதாண்டுகாலத்திட்டத்தின் இறுதிக்கட்டம். (திட்டம் அவ்வப்போது சிறு மாற்றங்களுக்குள்ளானது)
இதில் கருணாநிதி எல்லாம் ஒரு மயிரையும் அசைத்திருக்க முடியாது. அது கருணாநிதிக்கும் தெரியும்.
மன்மோகன் சிங்குக்கே எவ்வளவு தூரம் இந்தத்திட்டத்தில் தலையிடும் செல்வாக்கு இருந்திருக்குமோ தெரியாது
இந்த நிலையை கருணாநிதி ஒரு கட்டத்தில் சொன்னார்.
அவர் சொன்ன அதே வார்த்தைகளில், அதேபோன்று நேற்று தொலைக்காட்சியில் ஜெயலலிதாவும் சொன்னார். இருவரும் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மை.
அதைத்தான் நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதோ ஜெயலலிதா சொல்கிறார்:
////இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்பட முடியும். அதற்கு மேல் செயற்படுவதானால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செயற்பட முடியும்.
இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை முன்வைக்க விரும்புகின்றேன். போர்க்குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன். ////
திமுக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியம் வேறு. அந்த அவசியத்துக்காகத்தான் தமிழக மக்கள் திமுக வை ஒழித்துக்கட்டியிருக்கிறார்கள். அதில் ஈழப்பிரச்சினை ஒரு சிறு துணை செய்தது. அவ்வளவே.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒழிக்கப்படுவதும் அப்படித்தான்.
அப்படியானால் ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி என்ற அரசியல் தலைவர் எதுவுமே செய்திருக்க முடியாதா?
முடியும்.
தனது வாயைக் கட்டிப்போடும் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொறுப்பான அனுபவமிக்க தலைவர் என்ற வகையில் தமிழகத் தின் ஏனைய தோழமைக்கட்சிகளையும் துணைகொண்டு மக்களை அணி திரட்டி இந்திய அரசுக்கெதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தினை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும்.
இந்தியா தனது பக்கத்து நாடுகளிலும், காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலும், உள்நாட்டிலும் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி அதற்கு எதிரான மக்கள் திரளை கொதித்தெழுப்பியிருக்கமுடியும்.
அதன் மூலம் தமிழகத்தைத்தாண்டியும் ஓர் போராட்ட ஆதரவு அலையை உருவாக்கியிருக்க முடியும்.
இத்தகைய போராட்டம் இந்திய மக்களையும் இந்திய அரசின் கொடும்பிடியிலிருந்து மீட்டு பக்கத்து நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழிசெய்திருக்கும்.
இதைத்தான் அவர் செய்திருக்கவேண்டும்.
ஆனால் அவர் செய்யமாட்டார்.
ஏனென்றால் இந்திய விரிவாக்கவாதத்தினதும், ஒடுக்கும் கரங்களதும் சுரண்டிப்பிழைப்போரதும் பங்காளியாகவே அவர் தன்னை ஆக்கிக்கொண்டுள்ளார்.
அவர் மட்டுமல்ல பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் அனைத்துமெ இந்தியாவில் அப்படித்தான் இருக்கின்றன.
அவர்கள் தமது இருப்புக்கே ஆபத்தான ஒரு போராட்டத்திற்கு மக்களை வழிநடத்தத்துணிய மாட்டார்கள்.
வைகோ போன்ற போலிகள் முத்துக்குமாரனது இறுதி ஊர்வலத்தில் தமது முகமூடிகளைக் கிழித்துக்கொண்டார்கள். அதிகார வர்க்கத்தின் மீதான அவர்களது விசுவாசம் பல்லிளித்துக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment