Monday, May 30, 2011

ARR உம் தமிழ்த் திரையிசையில் உச்சரிப்பும்



தமிழ் திரையிசைக்கு ஏராளமான நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தவர் A. R. Rahman. திரையிசையின் பரிணாமத்தில் மிக முக்கியமான வளர்ச்சிகளை உருவாக்கியவர். இந்தப்பாடல் தமிழ் திரையிசை உலகில் அவரால் நிகழ்ந்த மோசமான மாற்றம் ஒன்றின் குறியீடு. அது என்ன?



இந்தப்பாடல் வரும்வரைக்கும் தமிழில் திரையிசைப்பாடல் ஒன்றைப்பாடுவதற்கான மிக முக்கிய தகுதியாக, தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியவேண்டியிருந்தது.

மிகப்பிரபலமான வட இந்தியப்பாடகிகள் கூட தமிழ்த் திரையிசையில் இதன்காரணமாகவே நிலைக்க முடியவில்லை.

ஏ ஆர் ரகுமான் திரையிசைப்பாடல்களில் மனிதக் குரலுடையதும் வரிகளினதும் பாத்திரங்களை மாற்றியமைத்தார். மனிதக்குரலும் பாடல் வரிகளும் பாடலின் முக்கிய கூறுகளாக இருந்த நிலை மாறி பாடலின் ஒரு பகுதியாக மாறின. அது நல்லவிசயம்.

ஆனால் அதன் தொடர்ச்சியாக தமிழை உச்சரிக்கத்தெரியாவிட்டாலும் பரவாயில்லை, குரலிலும் குரல் ஆளுமையிலும் புதுமை இருந்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த மாற்றம் முதலில் ஏற்பட்ட பாடல்களுள் இந்தப்பாடல் மிகப்பிரபலமானதும் காலத்தால் முந்தையதுமாகும்.

கூடவே அதுவரை காலமும் உச்சத்தில் இருந்த பாலசுப்பிரமணியத்தின் தெளிவான உச்சரிப்புடன் கூடிய குரல், புதிய உதித் நாராயணன் குரலோடு ஒப்பிடப்பட்டு பின்னுத் தள்ளப்படுகிறது.

காட்சியமைப்பிலும் பாலாவின் குரலும் உச்சரிப்பும் பழையதலைமுறைக்கானதாய் மாற்றப்பட்டு புதிய தலைமுறைக் குரலாகவும் உச்சரிப்பாகவும் தமிழ் அல்லாத கொச்சை உச்சரிப்புக் கொண்டுவரப்படுகிறது.

இது ஒரு குறியீடு.
இந்தப்பாடல் வெளிவந்த காலம் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

இந்தப்பாடல் ஒலிநாடாவை எனக்குத் தந்த நண்பன், (அப்போது எமக்கு 12 வயது) இந்தப்பாடலைப்பற்றிச் சொல்லி, நல்லபாடல் ஆனால் ஒரு வடிவான குரலுடன் அசிங்கம் பிடிச்ச குரல் உள்ள ஒருவனும் பாடியிருக்கிறான் என்று சொன்னான்.

முதலில் பரந்த அளவில் இந்த அசிங்கமான உச்சரிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை அவதானிக்கலாம்.

ஆனால் திரும்பத்திரும்ப அசிங்கமான உச்சரிப்புக்களை பயன்படுத்திக்கொண்டிருந்தார் ரகுமான்.

மீண்டும் மீண்டும் சிறப்பான இசையுடன் இவ்வாறான உச்சரிப்பினைப் பயன்படுத்திவர, அது பொது மக்களுக்குப் பழகிப்போய்விட்டது.

அவ்வாறு பழகிக்கொண்டது ஒரு செல்நெறியாகவும் (trend) நிலைத்துவிட்டது
இவ்வாறான தீய மாற்றங்களை விரும்பி ரசித்தார்கள், கேட்டார்கள், பிரபலமாக்கினார்கள் என்று மக்கள் மீதே எல்லாக்குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகிறது.

ஆனால் மக்கள் அப்படி ஒன்றும் குற்றவாளிகள் அல்லர்.

தமிழ் உச்சரிப்புக்கள் மீதான தாழ்வுச்சிக்கல் உருவாவதற்கு காரணமாயமைந்த சமூக-பொருளாதார மாற்றங்கள்,

இவ்வாறான தீமைகளை தொடர்ச்சியாக மக்கள் மீது திணித்து, அவற்றுக்கு மக்களைப்பழக்கி, பிரபலமாக்கிய சினிமாக்கலைஞர்கள் எல்லோரும் குற்றவாளியாகிறார்கள்.

நண்பரின் பின்னூட்டம் :
தமிழ் உச்சரிப்பு சற்று இடறினாலுங் கூட கண்டசாலாவை அந்தக் காலத்து ரசிகர்கள் மிகவும் ரசித்து ,ஏற்றுக் கொண்டார்கள்.uma
கண்டசாலாவிடமோ ஜேசுதாசிடமோ தமிழைச் சரியாக உச்சரிக்கும் முயற்சி இல்லாமலிருந்ததில்லை. அவர்கள் அக்கறை எடுத்துக்கொண்டார்கள்.

அவர்களது தாய்மொழி, வாய், நாக்கு அமைப்புக்கள் காரணமாக சில உச்சரிப்புக்கள் அவர்களுக்குக் கைவரவில்லை. இதில் PB சிறீனிவாசையும் சேர்க்கலாம்.

இப்போது தமிழைச் சரியாக உச்சரித்துவிடக்கூடாது என்பதில் அக்கறையெடுக்கும் நிலை காணப்படுகிறது.

இதற்காகவே தமிழ் தெரிந்த பாடகர்கள் கூட ஆங்கிலத்தில் எழுதிப்பாடுகிறார்கள். அப்படி எழுதிப்பாடினாற்தான் தமிழ் உச்சரிப்பு வராமல் ஆங்கில உச்சரிப்பு வரும்.

சரியான தமிழ் உச்சரிப்போடு பாடினால் எவ்வளவு பெரிய அவமானம்? யூத் ஏற்றுக்கொள்வார்களா?
படம் ஓடுமா?

No comments:

Post a Comment