Friday, May 13, 2011

மே 5, கார்ல் மார்க்சின் பிறந்த நாள்

ஆய்வாளரும் அறிவியலாளரும் "மெய்யைத்" தேடுகிறார்கள். மெய்களைக் கண்டறிந்து சொல்கிறார்கள். காலந்தோறும் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய மெய்களிற் சில உலகைப் புரட்டிப்போடுகின்றன. அப்படிப்பட்ட மெய்கள் பலவற்றைக் கண்டறிந்து சொன்ன ஆய்வாளன், அறிவியலாளன், மெய்யியலாளன் கார்ள் மார்க்சுக்கு இன்று பிறந்தநாள்.
மார்க்ஸ் தனது ஆய்வுகளூடும் தரவுகளைப் பகுப்பாயும் சிந்தனைத்திறனூடும் எமக்குக் கண்டறிந்து சொன்ன மெய்கள் பல மனித குலம் தனது வளர்ச்சிப்பாதையை உருவாக்கிக்கொள்ளும் போராட்டத்திற்கு மிகவும் முக்கியமானவை.



மனித குலத்தின் வளர்ச்சிக்குத் தடையாயுள்ள பலவற்றை உடைத்து முன்னேற அவசியாமானவை. அத்தடைகளை மனிதகுலம் உடைத்து முன்னேறும்வரை அதிகம் தேவைப்படுபவை. அதன் பின்னரும் வரலாற்றுப்பெறுமதியோடு மனிதகுலம் பாதுகாத்துவைக்கக் கூடியவை.
மார்க்சின் ஆய்வுமுடிவுகள் வெறுமனே மார்க்ஸ் எனும் தனி மனிதனின் வியத்தகு உற்பத்திகள் அல்ல. அவை அவனுக்கு முன்னைய மெய்யியலாளர்களின் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி. அவன்காலத்திய மெய்யியலாளர்களின் கண்டுபிடிப்புக்களின் பகுதி.

சில மெய்கள் வெளிப்பட்டே ஆகவேண்டிய சூழலில், சில மெய்கள் தேடப்பட்டே ஆகவேண்டிய அழுத்தம் மிகுந்த கொதிநிலையில் மார்க்ஸ் என்கின்ற மாபெரும் மேதையின் ஊடாக அவை வெளிப்பட்டுக்கொண்டன.
ஓர் இலத்திரனியல் நுணுக்குக்காட்டி போல, கணினித் தொழிநுட்பம் போல, செய்கோள்களைப்போல மார்க்ஸ் எமக்குத்தந்த கண்டுபிடிப்புக்களும் மிக அவசியமான கருவிகள்.

உயர் தொழிநுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி எப்படி நாம் இந்த உலகை எளிதாகவும் வினைத்திறனுடனும் மேலும் மேலும் ஆய்வு செய்து நன்மைகளை விளைவிக்க் முடியுமோ, அப்படி மார்க்சின் கண்டுபிடிப்புக்களூடாக எமக்குக்கிடைத்துள்ள உலகப்பார்வையும் மிகச்சிறப்பான ஆய்வுக்கருவி.

அவன் தோளில் ஏறி நின்று, அவன் தந்த உலகப்பார்வையூடாக பின்வந்த பலராலும் பலகாலங்களிலும் அத்தியாவசியமான கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டுள்ள்ன.

அந்த உலகப்பார்வை இன்றும் எம் அனைவருக்கும் அத்தியாவசியமாகிறது.
இயங்கியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்!

இந்த அச்சுறுத்தும் மெய்யியலை எதிர்கொள்ள மூலதனமும் ஏகாதிபத்தியமும் நாடாத பரியாரியில்லை, போகாத ஆசுப்பத்திரியில்லை...

மதங்கள், பயங்கரவாதம், இலவசங்கள், என் ஜீ ஓ க்கள், இராணுவம், அடிப்படைவாதம்,

கடைசியில் கொஞ்ச காலத்துக்கும் முன் பின்னவீனத்துவப் பரியாரியார்...

என்று ஏகாதிபத்தியமும் நாடாத பரியாரியில்லை, போகாத ஆசுப்பத்திரியில்லை...

No comments:

Post a Comment