Wednesday, September 19, 2012

கூடங்குளம் எனும் பாடப்புத்தகம்

கூடங்குளத்தில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சியானது எமது காலத்தில் எமக்கருகே நிகழும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

"மக்கள் போராட்டம்" என்றால் என்ன என்பதை அறியாதவர்களாகவே நாம் எமது அரசியல் தலைமைகளால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளோம். எமக்கு கூடங்குளம் ஒரு பெரும் பாடப்புத்தகம்.

அதி நவீனப் போர்க்கருவிகளோ, போர்த் தளபதிகளோ, அரசியல் இராசதந்திரச் செல்வாக்குகளோ, பணபலமோ, உலகளாவிய மாஃபியா வலையமைப்புக்களோ அந்த மக்களிடம் இல்லை. மாபெரும் போராளி இராணுவமோ, அதற்குப் பயிற்சி அளித்து ஆதரிக்க ஓர் அண்டை நாடோ இல்லை. அவர்களுக்கென்று தொலைக்காட்சி அலைவரிசைகளோ வானொலிகளோ பத்திரிகை ஒன்று தானுமோ இல்லை. வெறும் கைகளும் உறுதியான நெஞ்சும் மட்டுமே உள்ளது.

ஆனால், அண்டை மாநிலங்களிலெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, ஜப்பான் சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களிடையே அவர்களுக்கு ஆதரவான எழுச்சிகள் உருவாகின்றன. இனம், மொழி, சாதி, தேச எல்லைகள் கடந்து அவர்களை ஆதரித்து நிற்கப் பல நூறாயிரம் மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிபயங்கர இராணுவத்தைக் கொண்ட இந்தியப் பிராந்திய வல்லரசு அம்மக்களைக்கண்டு அஞ்சுகிறது.

இது எவ்வாறு சாத்தியம்?



என்னுடைய அவதானத்தின்படி,

1. எதிரியை மிகச்சரியாக இனங்கண்டு தனிமைப்படுத்தி, குறிப்பாக அந்த எதிரிக்கு எதிராக துல்லியமான கோரிக்கையை முன்வைத்துப் போராடியமை. இதனால் எதிரி தனிமைப்பட்டு சிறுபான்மையாகும் நிலை ஏற்பட்டது. 

2. எடுத்தவுடன் ஆயுதம் என்கிற இராணுவவாத, சாகசவாதப் போர்முறைக்குள் போகாமல், மக்கள் திரளைத் திரட்டி, மக்கள் திரள் அழுத்தத்தினை ஆயுதமாகப் பயன்படுத்தியமை.

3. மக்களை வெறுமனே திரட்டாமல் போதியளவு அரசியல் மயப்படுத்தியவண்ணம் முன்னேறுவது. மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினைத் தொடர்ச்சியாகச் செய்வது.

4. மக்களை நம்பி, மக்களையே சார்ந்திருந்து, மக்களையே தலைவர்களாகக்கொண்டு போராட்டத்தினை நடத்துவது.

5. இன்னொரு இனத்தை, மக்கள் கூட்டத்தை துரோகிகள் என்றும் எதிரிகள் என்றும் சித்திரிக்காமல், வாக்கு அரசியல் சகதிக்குள் சிக்காமல், மக்களைப் பிளக்கும் எந்தவொரு பிற்போக்குத்தனத்திற்கும் இடம் கொடாமல் இருப்பது. இதன் மூலம் வெவ்வேறு அடையாளங்களைத்தாண்டியும் இப்போராட்டத்துக்கு ஆதரவு பெருகுகிறது.



தமிழ்த்தேசியவாதிகள் கூடங்குளத்திடம் போய் படிக்க வேண்டும். எதிரியை இனம்காண்பது, தனிமைப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். மக்களைச் சார்ந்திருக்கப்பழகவேண்டும்.

அமெரிக்காவை திருப்திப்படுத்தி ஈழம் பெறுவோம், இந்தியாவைச் சரியாகக் கையாண்டு ராசபக்சவை கைதுசெய்வோம், சிங்களக் கிழவிகளை தமிழகத்தில் வைத்து அடித்து அரசியல் அதிர்வை உருவாக்குவோம், கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றி சர்வதேச சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைப்போம்  என்றெல்லாம் படம் காட்டும் அரசியலைத்தான் தமிழ்த் தேசியவாதிகள் செய்கிறார்களே ஒழிய, உண்மையான பிரச்சினை என்ன என்பதையோ, உண்மையான காரணம் என்ன எனதையோ அவர்கள் அறியவும் விருபுவதில்லை மக்களுக்கு அறியத்தரவும் விரும்புவதில்லை. 

No comments:

Post a Comment