Wednesday, January 8, 2014

மெல்ல மறையும் Facebook காலம்


Facebook, Twitter போன்றவை உருவாக்கிய சமூக வலையமைப்புக் காலம் மெல்ல மறைந்து வருவதாக இப்போது இணையக் குடிமக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் வலைப்பதிவுகளின் காலம் மங்கி, சமூக வலைத்தளங்களின் காலம் உருவானதை நம்மிற் பலர் கண்முன்னே கண்டிருக்கிறோம். இப்போது Whatsup, Viber போன்றவை உருவாக்குகின்ற தனிப்பட்ட உரையாடல் வலையமைப்புக்களை நோக்கி இளைய சமுதாயம் நகர்வதாகப் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.

Facebook போன்றவற்றை இளம் சமுதாயம் அயர்ச்சியுடன் பார்க்கிறது. இது பயன்படுத்தக் கடினமானதாயும் பயனற்றதாயும் இருப்பதாக உணர்கிறது.


Facebook இன் Wall, Notes, Album, Comments என்று நாம் வெளியில் பார்க்கும் உலகத்துக்குப் பின்னால் தனிமடல், அரட்டை என்று இன்னோர் உலகம் உண்டு. இளம் தலைமுறையினர் Facebook இன் அந்த உலகத்திலேயே அதிகம் வாழ்கிறார்கள்.

அந்த உலகத்தில் இளைஞர்களுக்குப் பிடித்தது எதுவோ அதனை மேலும் சீர்படுத்தி இந்த அரட்டைச் சேவைகள் அவர்களுக்கு வழங்குகின்றன. பயன்படுத்தவும் எளிதாகவுள்ளன.

facebook தனது அரட்டைச் சேவையினைக் கையடக்கக் கருவிகளில் தனிச் செயலியாகக் கொண்டு வந்தமை (App) எல்லாம் இந்தக் காலமாற்றத்தின் குறிகாட்டிகளே.

வலைப்பதிவுகள் வந்தபோது மடலாடற் குழுமங்களிலும் அரட்டைச்சேவைகளிலும் இருந்து கருத்துப்பகிர்வினைத் திறந்த பெரு வெளிக்குள் கொண்டுவந்தன. சமூக வலைத்தளங்கள் அதையே மூடிய நண்பர் வட்டத்தினுள் வேறுபட்ட வடிவத்தில் பகிரவும் உரையாடவும் வழி செய்தது. இப்போது உருவாகும் புதிய செல்நெறி (Trend) இன்னும் மூடிய வட்டத்தினுள் உரையாடலைக் கொண்டுபோகிறது. மனிதர்களை மேலும் தனிமனிதராக்குகிறது.

இப்படியான ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்தே Google நிறுவனம் Google Buzz இனைக் கொண்டு வந்தது. ஆனால் அது ஒரு வகையில் காலம் முந்தியும் இன்னொரு வகையில் காலம் பிந்தியும் வந்ததால் தோற்றுப்போனது.

Facebook சேவையானது வலை உலாவியை (Web Browser) அடிப்படையாகக் கொண்டதும் கணினியிலிருந்து பயன்படுத்துவதற்கானதுமாகத் தான் தொடங்கியது. அது இன்றைய கைக்கருவிகளின் காலத்துக்கு முன்னால் வந்த சேவை என்பதை நினைவு மீட்போம்.
இப்போது கைக்கருவிகளையே முற்றிலும் அடிப்படையாகக்கொண்டதாக புதிய செல்நெறி உருவாகிறது.

இதோ எம் கண் முன்னே இணையத்தில் எம்மைப் பரபரப்பாக வைத்திருந்த இன்னுமொரு செல்நெறி மறையப்போகிறது.

களிகூருவோம்!

2 comments:

  1. //இதோ எம் கண் முன்னே இணையத்தில் எம்மைப் பரபரப்பாக வைத்திருந்த இன்னுமொரு செல்நெறி மறையப்போகிறது.//
    முற்றிலும் மறைவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தானே?

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரி. முற்றிலும் மறையாது. ஆனால் புகழ் மங்கிப்போகும். இப்போது வலைப்பதிவுகளுக்கு நடந்திருப்பதைப்போல.

    ReplyDelete