கசாப் விவகாரத்தை ஓரமாக வைத்துவிட்டு தூக்குத் தண்டனையைத் தனியாக எடுத்துப் பார்ப்போம்.
நீதித்துறை சுயாதீனமாகவும் நீதியாகவும் உண்மையாகவும் நடந்துகொள்கிறதா, நடந்துகொள்ள முடிகிறதா?
இலங்கையில் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு மாறாக தீர்ப்பளித்த நீதிபதி மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீதித்துறையை ஆளும் வர்க்கம் தனக்கு உகந்தபடி பணியவைக்கவோ கையாளவோ முடியும் என்ற நிலையே காணப்படுகிறது.
இதுதவிர தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டிய பல குற்றவாளிகள் - நரேந்திரமோடி போன்றவர்கள் - வெளியில் பிரமுகர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் வலம் வருகின்றனர்.
அதிகாரத்தில் உள்ள ஒருவர் தனக்கு இடைஞ்சலாக உள்ள ஒருவரை நீதித்துறையை ஏமாற்றுவதன் மூலம்/கையாள்வதன் மூலம் தூக்குக்குத் தள்ள முடியும்.
ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நேர்மையான விடுதலைப்போராளிகளைக்கூட தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலம் நீதிப்படியான என்கவுண்டர் செய்ய முடியும். ஏனெனில் சட்டங்கள் விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவாக எழுதப்படுவதில்லை.
நீதிமன்றத்தீர்ப்பு என்பது இவ்வளவு சிக்கல்களும் மாறாட்டங்களும் மிகுந்தது. அது தெய்வீகமானதாகவும் 100% நேர்மையானதாகவும் இருக்குமானால்தான் இத்தகைய பாரதூரமான தண்டனையைப்பற்றிய அடுத்தகட்ட உரையாடலுக்கே போக முடியும்.
தூக்குத்தண்டனைக்குப்பதிலாக,
"கடூழியச் சிறைத்தண்டனை" என்ற ஒன்றைப் பயன்படுத்தலாம்.
அதாவது மிகக்கடுமையான உழைப்பினை குற்றவாளியானவர் நாட்டுக்கு தன் வாழ்நாள் முழுக்க வழங்க வேண்டும் என்கிற தண்டனை. அவரைக் கண்காணிப்பது, பராமரிப்பது உட்பட்ட செலவுகளும், அவரது சொந்த சேமிப்புக்குச் செல்லும் தொகையும் நீங்கலாம அவரது உபரி உழைப்பு நாட்டு நன்மைக்குப் பறிக்கப்படும். இதுவே தண்டனை.
இது ஒரு குடிமகனை அந்த நாடு கொல்வதை விட இலாபகரமானது.
உயிரை எடுத்தபிறகு வழங்கப்பட்ட நீதி தவறானதென நிரூபிக்கப்பட்டாலும் கூட மீள வழங்க முடியாது. உழைப்பெனில் கூலியை வழங்கலாம்.
கடுமையான உழைப்பு குற்றம் செய்யும் மனதை மாற்றிவிடவும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment