குண்டுகளின் தன்மையைப் பொறுத்து அவற்றின் ஓசை மாறுபடுவதைக்காட்டிலும் அவை வெடிக்கும் இடங்களைப்பொறுத்து அவற்றின் ஓசை அதிகம் மாறுபடுகிறது.
வன்னியில் போடப்பட்ட பாரிய வான்குண்டை விடவும் கொழும்பில் வெடிக்கும் சிறு கைக்குண்டு ஓசை பெருத்தது. காசுமீரிலும் சத்தீஸ்காரிலும் அஸ்ஸாமிலும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுகளை விடவும் பம்பாயில் வெடிக்கும் குண்டொன்று பெரும் ஓசை எழுப்பக்கூடியது. பாலஸ்தீனத்தில் வந்து வெடிக்கும் ஆயிரக்கணக்கான குண்டுகள் ஓசையின்றியும் இஸ்ரேலில் என்றாவது வந்துவிழும் எறிகுண்டொன்று பேரிடியோசையுடனும் வெடிக்கின்றன.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஊர்களையே எரித்துப் பொடிசெய்த அமெரிக்கக் குண்டுகளோ
இறகொன்று நீரில் வீழ்வதுபோல் இதமாக ஒலியெழுப்புகின்றன. ஆனால், அமெரிக்க
பொஸ்டனில் மூன்றுபேரைக் கொன்ற சமையற் சட்டிக் குண்டொன்று உலகமே அதிர்ந்து
ஆகாசம் வெடித்து உயிர்களெலாம் கண்ணீர் உகுத்து உருண்டு புரண்டு
கதறும்படியாய் பேரிரைச்சலுடனும் பெருத்த ஓசையுடனும் வெடித்தது.
இடத்தைப் பொறுத்த இந்த ஓசை வேறுபாட்டுக்கு வெடிக்கும் குண்டுகளின் தன்மையா, கேட்கும் காதுகளின் தன்மையா காரணமாகலாம்?
குண்டுகளின் இயற்பியலிலும் காதுகளின் உடற்கூற்றியலிலும் எவ்வளவு தேடியும் விடை கிடைப்பதாயில்லை.
இனி, குண்டுகளின் அரசியலிலும் காதுகளின் அரசியலிலும் தான் விடை தேட வேண்டியுள்ளது.

வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனித மனங்களுக்கு உறைக்கும்படி எழுதியிருக்கின்றீர்கள். குண்டுகளை விடவும் பாரிய அதிர்வைக் கொடுக்கும் ஆற்றல் எழுத்துக்களுக்கு இருந்திருக்கிறது என்பது எமது இறந்த காலமாக மட்டுமே நினைவுட்டக்கூடியது என்பது எனது பெரிய மனக்குறை.
ReplyDeleteமிகவும் நன்றி.
Delete